முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்ல

“ஆதியிலே வார்த்தை இருந்தது”: எந்த வார்த்தை?

1,305 சொற்கள் · 7 நிமிட வாசிப்பு
எழுத்தளவு

வாசிக்கும்போது வரும் கேள்வி

யோவான் தம்முடைய நற்செய்தி நூலை இப்படித் தொடங்குகிறார்:

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. (யோவான் 1:1)

இதை வாசிக்கும்போது நமக்கு ஒரு கேள்வி வர வேண்டும்: “இயேசுவைப் பற்றி எழுத வந்தவர் ஏன் வார்த்தையைப் பற்றிப் பேசுகிறார்? வார்த்தை எப்படிக் கடவுளாக இருக்க முடியும்? எதற்காக இப்படி எழுதுகிறார்?” இந்தக் கேள்வி வரும்போதுதான் இயேசுவும் அவருடைய சீடர்களும் கற்றுக்கொடுத்த ஒரு முறை நமக்கு நினைவுக்கு வரும். அவர்கள் மக்களுக்கு ஏற்கெனவே தெரிந்த ஒன்றிலிருந்து தொடங்கி, தெரியாத ஒன்றைக் கற்றுக்கொடுத்தார்கள் [from the known to the unknown]. யோவானும் இங்கே அதையே செய்கிறார்.

பரவலான தவறான விளக்கம்

கிறிஸ்தவத்தில் பரவலாக ஒரு விளக்கம் சொல்லப்படுவதுண்டு: “ஆதியிலே கடவுள் வானத்தையும் பூமியையும் தம்முடைய வார்த்தையினால் படைத்தார். அந்த வார்த்தையைப் பற்றித்தான் யோவான் பேசுகிறார். அந்த வார்த்தைதான் இயேசு.” இது தவறான கருத்து.

காரணம் இதுதான். என்னுடைய வார்த்தை என்னால் உருவாக்கப்படுகிறது. அது என்னிடமிருந்து பிறக்கிறது. அதற்கு உயிர் இல்லை; உயிர் எனக்குத்தான் இருக்கிறது. அதற்குக் காரணர் நான். ஆகவே நானும் என் வார்த்தையும் ஒன்று அல்ல. அதேபோல் கடவுளும் கடவுளிடமிருந்து பிறக்கும் வார்த்தையும் ஒன்றாக இருக்க முடியாது. கடவுளின் வார்த்தைக்கு உயிரை உருவாக்கும் வல்லமை இருக்கலாம். இருப்பினும் அது அவரால் உருவாக்கப்படும் ஒன்றுதான். இயேசுவை அந்த வார்த்தையாகக் காண்பித்தால், கடவுளால் உருவாக்கப்பட்ட ஒரு வஸ்துவாக அவரைக் காண்பிக்க வேண்டியிருக்கும். அப்படியானால் அவரைக் கடவுள் என்று சொல்ல முடியாது.

மேலும், “வார்த்தை தேவனிடத்திலிருந்தது” என்று சொன்ன உடனேயே “அந்த வார்த்தை தேவனாயிருந்தது” என்கிறார். கடவுளிடமிருந்து பிறந்த வார்த்தையை யோவான் கடவுள் என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லை.

யூத மார்க்கத்தின் “வார்த்தை”

யூத மார்க்கத்திலும் [Judaism] ரபிகளின் சிந்தனையில் [rabbinic thought] “வார்த்தை” என்பதற்கு முக்கியத்துவம் இருந்தது. அவர்களைப் பொறுத்தவரை வார்த்தை என்பது கடவுளால் அனுப்பப்படுகிற வார்த்தை. கடவுளுடைய வார்த்தை எல்லாவற்றையும் உண்டாக்கியது. ஆகவே அவர்கள் அதைக் கடவுளின் வலிமை, கடவுளின் வல்லமை, கடவுளின் படைக்கும் திறன் என்ற பொருளில் புரிந்துகொண்டார்கள். “கடவுளுடைய வார்த்தை” என்றும் “கடவுளுடைய படைக்கும் திறன்” என்றும் இரண்டையும் ஒன்றாகவே பார்த்தார்கள்.

ஆனால் யூதர்கள் அதைத் தனியாகச் செயல்படும் ஒரு சக்தியாகவோ, ஒரு கடவுளாகவோ பார்க்கவில்லை. கடவுளுடைய சக்தியாகவே பார்த்தார்கள். மேலும் அவர்கள் எபிரேய மொழியில் பேசினார்கள், எழுதினார்கள்; யோவான் கிரேக்க மொழியில் எழுதுகிறார். ஆகவே யோவான் சொல்லும் லோகாஸை இந்த யூதக் கருத்தோடு இணைக்க முடியாது. மூன்று கண்ணோட்டங்கள் இருந்தன என்பது உண்மைதான். இருப்பினும் யோவான் யூதர்களுக்கு அல்ல, கிரேக்கர்களுக்குத்தான் எழுதுகிறார்.

நீதிமொழிகளில் வரும் “ஞானம்” வேறு ஒன்று. அதை எழுதியவரைப் பொறுத்தவரை ஞானம் கடவுளுக்கு மிக நெருக்கமானது. ஞானத்தைப் பெற்றவர் கடவுளுக்குப் பயந்தவராக இருக்கிறார்; “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” (நீதிமொழிகள் 9:10). ஆனால் ஞானமே கடவுள் என்று அவர் சொல்லவில்லை. அது தனியாகப் பார்க்க வேண்டிய ஒன்று.

கிரேக்கர்களின் லோகாஸ்

கிரேக்கர்களின் கண்ணோட்டத்தில், உலகம் சீராக இயங்குவதற்குத் தேவையான ஒரு திறன் இருக்கிறது. அது இல்லையென்றால் உலகமே செயல்படாது. அதற்கு அவர்கள் கொடுத்த பெயர் லோகாஸ் [Logos]. அதாவது, உலகம் ஒழுங்காகவும் ஞானமாகவும் செயல்படுவதற்கு அடிப்படையாக இருக்கும் வடிவமைப்பு [underlying design].

பின்னால் வந்த இன்னொரு சாரார் இதையே வேறு விதமாகப் பார்த்தார்கள். இந்த உலகம் இவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் இயங்குவதற்கு ஞானம்தான் காரணம். ஞானமான ஒருவர் இல்லையென்றால் இது சாத்தியமில்லை. ஆகவே ஞானமாகிய ஒரு கடவுள் இருக்கிறார்; அவருடைய பெயர் லோகாஸ். இரண்டு கருத்துகளும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. எதுவாக இருந்தாலும், உலகம் சீராகச் செயல்படுவதற்கு ஒரு திறனோ ஒரு கடவுளோ இருக்கிறது; அதன் பெயர் லோகாஸ்.

அவர்கள் லோகாஸை ஒரு சக்தியாகப் பார்த்தார்கள். அதாவது, ஆள்தன்மை இல்லாத ஒன்றாக [impersonal]. அவர்களுடைய கடவுள் பட்டியலில் நிறையக் கடவுள்கள் இருந்தார்கள். கடலுக்கு ஒரு கடவுள், மின்னலுக்கு ஒரு கடவுள். லோகாஸ் அவர்களில் ஒருவர். ஒருவேளை முக்கியமான ஒருவராக இருக்கலாம்; ஆனால் லோகாஸ் மட்டுமே கடவுள் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை.

லோகாஸ் ஒரு பெயர்

லோகாஸ் என்பதன் நேரடி மொழியாக்கம் “வார்த்தை”. ஆனால் இங்கே அது வெறும் சொல் அல்ல. கிரேக்கர்கள் ஒரு சக்திக்கு, ஒரு கடவுளுக்குப் பயன்படுத்திய பெயர். ஒருவருடைய பெயரை வேறொரு மொழியில் எழுதும்போது, அந்தப் பெயரின் பொருளை நாம் மொழியாக்கம் செய்வதில்லை. என் பெயர் ஆஸ்டின். தமிழில் எழுதினாலும், ஆங்கிலத்தில் எழுதினாலும், இந்தியில் எழுதினாலும், அந்த மொழியின் எழுத்தில் “ஆஸ்டின்” என்றுதான் எழுத வேண்டும். பெயரின் பொருளை மொழியாக்கம் செய்யக் கூடாது.

மொழிபெயர்ப்பாளர்கள் “ஆதியிலே லோகாஸ் இருந்தது, லோகாஸ் தேவனிடத்திலிருந்தது, லோகாஸ் தேவனாயிருந்தது” என்று எழுதியிருக்கலாம். அது இன்னும் எளிதாக இருந்திருக்கும். ஆனால் அவர்கள் அந்தப் பெயரின் பொருளை மொழியாக்கம் செய்துவிட்டார்கள். அதனால்தான் “வார்த்தை” என்று வாசிக்கும்போது நாம் குழம்பிப் போகிறோம். குழம்ப வேண்டியதில்லை. “வார்த்தை” என்று வாசிப்பதை விட்டுவிட்டு, அதை ஒரு கடவுளின் பெயராகப் பார்க்கப் பழக வேண்டும். “ஆதியிலே லோகாஸ் இருந்தது” என்றே வாசிக்க வேண்டும்.

யோவான் கிரேக்கர்களுக்கு எழுதுகிறார்

யோவான் கிரேக்கர்களுக்கு எழுதுகிறார் என்பதற்குச் சான்றுகள் உண்டு. புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் எழுதிய மூலப் பிரதிகள் எதுவும் இன்று நம்மிடம் இல்லை. அவற்றுக்குப் பின்னர் எழுதப்பட்ட நகல்கள்தான் இருக்கின்றன. அவற்றில் மூலத்துக்கு மிக நெருக்கமானது, முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் யோவான் நூலின் ஒரு சிறிய பகுதி. அது கிரேக்க மொழியில் இருக்கிறது; எபிரேய மொழியில் இல்லை. யோவான் கிரேக்க மொழியில்தான் எழுதியிருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சான்று.

இரண்டாவது, யோவான் கி.பி. 70-க்குப் பிறகு எழுதுகிறார். அந்தக் காலகட்டத்தில் கலிலேயா, சமாரியா, யூதேயா பகுதிகளில் இருந்த யூதர்கள் பல பிரச்சனைகளின் காரணமாக ஆங்காங்கே சிதறிப் போய்விட்டார்கள். ஆகவே அவர் வேறு ஒரு மக்கள் கூட்டத்துக்கு எழுதுகிறார். லூக்காவும் கிரேக்கர்களுக்குத்தான் எழுதுகிறார். மத்தேயுவும் மாற்குவும் யூதர்கள் நிறைந்த இடங்களுக்கு எழுதியிருக்க வாய்ப்பு உண்டு. மூன்றாவது, யூதர்களுக்கு எழுதுவதாக இருந்தால் லோகாஸைப் பற்றி எழுத வேண்டிய அவசியமே இல்லை.

“லோகாஸைப் பற்றி எழுதும் அளவுக்கு யோவான் கொஞ்சம் அதிகமாகப் படித்திருப்பாரோ?” என்று சிலர் கேட்கிறார்கள். அதற்கு அவசியமில்லை. புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் யாரும் இலக்கியக் கிரேக்க மொழியில் [Classical Greek] எழுதவில்லை. தமிழில் சங்க இலக்கியத் தமிழும் உண்டு, தெருவில் போகிறவர்களிடமும் கடையிலும் நாம் பேசும் தமிழும் உண்டு. அதுபோல மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் எல்லாரும் அன்று பரவலாக எல்லாரும் பேசிய, வணிகத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பொதுமக்களின் கிரேக்க மொழியில் [Koine Greek] எழுதினார்கள். ரோமர்கள் வந்த பிறகும் கிரேக்க மொழியின் ஆதிக்கம் குறையவில்லை. இன்று ஆங்கிலம் பேசினால் ஓரளவுக்கு எங்கும் போய்த் தகவல் பரிமாறிக்கொள்ளலாம்; அன்று அந்தக் கிரேக்க மொழி அப்படி இருந்தது. அதை எழுதுவதற்குத் தனியாகப் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

பவுல் அத்தேனே பட்டணத்தில் செய்தது

யோவான் செய்வதைப் புரிந்துகொள்ள, பவுல் அத்தேனே பட்டணத்தில் செய்ததைப் பார்க்கலாம். அங்கே மக்கள் பல கடவுள்களுக்குப் பலிபீடங்கள் வைத்திருந்தார்கள். அறியப்படாத கடவுளுக்கு என்றும் ஒன்று வைத்திருந்தார்கள். பவுல் அவர்களிடம் இப்படிச் சொன்னார்:

அத்தேனே பட்டணத்தாரே, எல்லாவற்றிலேயும் நீங்கள் அதிக தேவதாபக்தியுள்ளவர்கள் என்று காண்கிறேன். எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். (அப்போஸ்தலர் 17:22–23)

அறியப்படாத கடவுளும் இயேசுவும் ஒன்று அல்ல. ஆனால் பவுல் அவர்களுடைய மார்க்கத்தில் இருந்த ஒன்றை எடுத்துக்கொண்டு, அதிலிருந்து இயேசுவை அறிவிக்கத் தொடங்கினார். முதலிலேயே “நீங்கள் செய்வது தவறு” என்று சொல்லவில்லை. “நீங்கள் பக்தியுள்ளவர்கள்” என்று அவர்களை மெச்சிக்கொண்டு தொடங்கினார். யோவானும் இங்கே அதையே செய்கிறார். கிரேக்கர்கள் வழிபட்ட லோகாஸ் என்ற பெயரை எடுத்துக்கொண்டு, “அந்த லோகாஸ் வேறு யாரும் இல்லை, இயேசுதான்” என்று காண்பிக்கப் போகிறார்.

படிப்படியாக உயர்த்துதல்

யோவான் முதலில் கிரேக்கர்களைத் தாக்கவில்லை. அவர்களுடைய புரிதலைக் குறைத்துப் பேசவில்லை. அவர்கள் சொல்லும் லோகாஸையே முக்கியத்துவப்படுத்துகிறார். பின்னர் அந்த லோகாஸைப் படிப்படியாக உயர்த்துகிறார். கிரேக்கர்கள் இப்படி வாசித்திருப்பார்கள்: “நாங்கள் வழிபடும் லோகாஸ் ஆதியிலே இருந்தார் என்கிறார். சரி, நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். லோகாஸ் கடவுளோடு இருந்தார் என்கிறார். எந்தக் கடவுளோடு? தெரியவில்லை; பரவாயில்லை. லோகாஸ் கடவுளாகவே இருந்தார் என்கிறார்.”

**முதல் படி: லோகாஸ் கடவுள்.** உலகம் உண்டாவதற்கு முன்பே லோகாஸ் இருந்தது என்பது கிரேக்கர்களுக்குக் கடினமானது அல்ல. ஏற்கெனவே ஒன்று இருந்தால்தானே உலகத்தை உண்டாக்க முடியும். அடுத்து, லோகாஸ் கடவுளோடு இருந்தது; அதாவது கடவுளோடு அதற்கு உறவு இருந்தது. மூன்றாவது, லோகாஸ் கடவுளாகவே இருந்தது. ஆகவே லோகாஸ் வெறும் சக்தி அல்ல. லோகாஸுக்கு மேலான ஒரு கடவுள் இல்லை; லோகாஸ்தான் கடவுள்.

**இரண்டாம் படி: லோகாஸ் ஒரு நபர்.**

அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். (யோவான் 1:2)

இந்த வசனம் முதல் வசனத்தின் இரண்டு சொற்றொடர்களை ஒன்றாகச் சேர்த்துச் சொல்கிறது. ஒன்றை மீண்டும் வேறு விதமாகச் சொல்வது யோவானின் எழுத்து நடை. ஆகவே இதில் புதிய கருத்து இல்லை. ஒன்றே ஒன்று மட்டும் கூடுதலாக இருக்கிறது: “அவர்”. கிரேக்கர்கள் லோகாஸை ஒரு சக்தியாகப் பார்த்திருக்கலாம். யோவானோ லோகாஸை ஒரு நபராகக் காண்பிக்கிறார்.

சக்திக்கும் நபருக்கும் வேறுபாடு உண்டு. மின்சாரம் ஒரு சக்தி. அதற்குத் திறன் உண்டு; ஆனால் அது ஒரு நபர் அல்ல. வெப்பம் ஒரு சக்தி; அதனால் சில செயல்களைச் செய்ய முடியும், தாக்கத்தை ஏற்படுத்த முடியும். சூறாவளிக் காற்றுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் உண்டு. இவை அஃறிணை. இவற்றுக்கு ஆற்றல் உண்டு; ஆனால் தானாகச் சிந்தித்துச் செயல்படும் தன்மையோ குணாதிசயமோ இல்லை. நபருக்குத் தன்மைகள் உண்டு; அது உயர்திணை. லோகாஸை அப்படி அஃறிணையாகப் பார்க்கக் கூடாது. லோகாஸ் திறனுடைய ஒரு நபர். உண்மையில் இது முதல் வசனத்திலேயே இருக்கிறது: “லோகாஸ் கடவுளாக இருந்தார்” என்று சொல்லும்போதே ஆள்தன்மை கொடுத்துவிட்டார். இரண்டாம் வசனத்தில் அதை இன்னும் தெளிவுபடுத்துகிறார்.

**மூன்றாம் படி: எல்லாவற்றையும் படைத்தவர்.**

சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. (யோவான் 1:3)

கிரேக்கர்கள் லோகாஸுக்குச் சில திறன்களைக் கொடுத்திருக்கலாம். உலகம் செயல்படுவதற்கு இந்தத் திறன் லோகாஸுடையது என்று சொல்லியிருக்கலாம். யோவானோ, உலகத்தில் இருக்கும் அனைத்தும் லோகாஸால்தான் உண்டாக்கப்பட்டன என்கிறார். ஆகவே வெவ்வேறு கடவுள்கள் இல்லை. இதையும் யோவான் இரண்டு முறை சொல்கிறார்: “சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று” என்றும், “உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை” என்றும். கருத்து ஒன்றுதான்.

தொடர்ந்து, எல்லா உயிரும் லோகாஸின் கையில் இருக்கிறது என்றும், மனிதர்களின் இருண்டுபோன வாழ்க்கைக்கு அவரே ஒளி என்றும் சொல்கிறார் (யோவான் 1:4–5). இதுவரை யோவான் இயேசுவைப் பற்றிப் பேசவில்லை. லோகாஸைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் அதற்குள் கடவுளை ஒரே கடவுளாக, சக்தி அல்ல நபராக, உலகத்தையும் மனிதர்களையும் எல்லா உயிர்களையும் படைத்தவராக உயர்த்திவிட்டார். இது உயர்ந்த இறையியல்.

லோகாஸ் உலகத்துக்கு வந்தார்

அடுத்து யோவான் ஒரு புதிய கருத்தைக் கொண்டுவருகிறார்:

உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. (யோவான் 1:9–10)

கிரேக்கர்களின் கண்ணோட்டத்தில் கடவுள்கள் ஒரு ஏணியைப் போல இருந்தார்கள். ஏணியின் உச்சியில் லோகாஸ் என்ற உயர்ந்த கடவுள். அவர் படைப்பார்; அதற்குப் பிறகு உலகத்தோடு அவருக்குப் பெரிய ஈடுபாடு இல்லை. இடையில் பல கடவுள்கள். கீழே, உலகத்துக்கு அருகில் இருக்கும் தாழ்ந்த கடவுள்களுக்குத்தான் மனிதர்களோடு தொடர்பு உண்டு. லோகாஸ் படைத்தவர், உயிர் கொடுத்தவர், அவருக்கு நிகரானவர் யாருமில்லை; ஆனால் அவர் மனிதர்களோடு உறவாட மாட்டார்.

யோவானோ, மனிதர்களுக்கு மீண்டும் ஒளியைக் கொடுக்கும்படி லோகாஸ் உலகத்துக்கே வந்தார் என்கிறார். “மெய்யான ஒளி” என்பது அவர்களுக்குப் புரியும். ஆனால் லோகாஸ் உலகத்துக்கு வந்தார் என்பது அவர்களுக்குப் புதியது, அவர்கள் மனதுக்கு விகற்பமானது. இங்கேதான் தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லும் பாலம் [transition] அமைகிறது. லோகாஸ் உலகத்துக்கு வந்தார்; உலகமே அவரால் உண்டாக்கப்பட்டிருந்தும், உலகம் அவரை லோகாஸ் என்று கண்டுகொள்ளவில்லை. இப்படி ஒரு இறுக்கத்தை [tension] அவர் ஏற்படுத்துகிறார். “இந்த லோகாஸ் யார்?” என்ற எதிர்பார்ப்பு வாசிப்பவர் மனதில் உருவாகிறது. இன்னும் இயேசுவின் பெயரைச் சொல்லவில்லை.

நாம் செய்ய வேண்டியது

யோவான் 1:1-இல் வரும் “வார்த்தை” நாம் வாயால் பேசும் வார்த்தை அல்ல. கடவுள் பேசிய வார்த்தையும் அல்ல. கிரேக்கர்கள் வழிபட்ட, உலகம் படைக்கப்படுவதற்கும் இயங்குவதற்கும் காரணமாகக் கருதப்பட்ட லோகாஸ். அந்தப் பெயரை எடுத்துக்கொண்டு, அவர்கள் புரிந்திருந்ததற்கு மேலாக யோவான் அதை உயர்த்துகிறார்: லோகாஸ் கடவுள், லோகாஸ் ஒரு நபர், லோகாஸ் எல்லாவற்றையும் படைத்தவர், அந்த லோகாஸ் உலகத்துக்கு வந்தார். ஆகவே இந்தப் பகுதியை வாசிக்கும்போது “வார்த்தை” என்பதை ஒரு பெயராக வாசிக்க வேண்டும். கடவுளின் வார்த்தையோடு இதை ஜோடிக்கக் கூடாது.