முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்ல

யோவான் எழுதும் விதம்

1,565 சொற்கள் · 8 நிமிட வாசிப்பு
எழுத்தளவு

கருத்தோடு அழகையும் வாசிப்போம்

பரிசுத்த வேதாகமத்தின் எழுத்துகளில் இரண்டு காரியங்கள் இருக்கின்றன. ஒரு பக்கம், நாம் கவனிக்க வேண்டிய தகவல். இன்னொரு பக்கம், அந்தத் தகவல் எந்த வகையில் வெளியே கொண்டுவரப்படுகிறது என்ற அழகு. ஆகவே இலக்கியப் பார்வையும் [literary analysis] நமக்கு அவசியம். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒவ்வொரு அழகு உண்டு. ஒரு பகுதியை வாசிக்கும்போது, “எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார்!” என்று சொல்லுவேன்; அடுத்த பகுதிக்குப் போனால் அதையும் சொல்லுவேன். இது போட்டி அல்ல.

வாசிக்கும்போது ஒரு புன்னகை, ஒரு சிரிப்பு வர வேண்டும்: “ஆஹா, இப்படியல்லவா யோசித்திருக்கிறார்!” அப்படி இருந்தால், மகிழ்ச்சியோடு வாசிப்போம். கருத்துதான் நமக்கு மிக முக்கியம்; அதில் மாற்றுக் கருத்தே இல்லை. இருப்பினும் அந்த அழகையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு பகுதியை வாசிக்கும்போது, “இதை மத்தேயு எழுதியிருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டார்; லூக்கா எழுதியிருந்தால் வேறு விதமாக எழுதியிருப்பார்; இவர் எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள்!” என்று கொஞ்சம் நிறுத்திப் பார்த்தால், அதில் ஒரு சுவையும் இன்பமும் கிடைக்கும். தகவலை அவர்கள் எவ்வளவு அழகாகக் கொடுத்திருக்கிறார்கள், எப்படிக் கட்டமைத்திருக்கிறார்கள் [packaged] என்பது ஒவ்வொரு எழுத்தாளரின் திறனும் தனித்தன்மையும். கிறிஸ்தவத்தில் “என்ன அனுபவம் கிடைத்தது?” என்று கேட்கும் அனுபவங்களை நான் முக்கியத்துவப்படுத்துவதில்லை; அங்கே உண்மைதான் முக்கியம். ஆனால் எழுத்தின் இந்தச் சுவையைப் புரிந்துகொள்ளாவிட்டால், வாசிப்பின் ஒரு நல்ல அனுபவத்தை இழந்துவிடுகிறோம்.

இதை என்னால் முழுமையாகக் கற்றுக்கொடுக்க முடியாது. “இது மிகச் சுவையானது, மிக அழகாக எழுதியிருக்கிறார்” என்று சொல்ல முடியும். எப்படிச் சுவையாக இருக்கிறது என்று விளக்க முடியாது. கருத்துகளைச் சொல்லிவிடலாம்; அழகைக் கூடுமானவரை கொண்டுவர முயல்கிறேன். இவ்வளவு சொன்ன பிறகும் தெரியவில்லை என்றால், விட்டுவிடுங்கள். ஆனால் வாசிக்கும்போது அந்தச் சுவையை வளர்த்துக்கொள்வது நல்லது. அதற்கு, கதை வாசிப்பதுபோல வேகமாக வாசித்துவிட்டுப் போகாமல், நிறுத்தி ஒவ்வொரு வாக்கியமாக, ஒவ்வொரு சொற்றொடராக, ஒவ்வொரு சொல்லாக வாசிக்கப் பழக வேண்டும்.

மற்ற மூன்று நற்செய்தி நூல்களும் நிகழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை எழுதுகின்றன. யோவானோ கருத்தின் அடிப்படையில், இறையியலின் அடிப்படையில், போதனையின் அடிப்படையில் வரலாற்றை எழுதுகிறார். வரலாறு நிகழ்வுகளின் அடிப்படையில்தானே இருக்க முடியும்; போதனையின் அடிப்படையில் எப்படி வரலாறு இயங்கும்? அதனால்தான் இவர் சற்று வித்தியாசமானவர். அவருடைய எழுத்தின் சில தனித்தன்மைகளைப் பார்ப்போம்.

எதிர்பார்ப்பைத் தூண்டும் எழுத்து

யோவான் நம்மைக் காத்திருக்க வைப்பார். முதலில் லோகாஸைப் [Logos] பற்றிப் பேசுகிறார். அதன்பின் வெளிச்சத்தைப் பற்றி: மனிதருடைய இருளையெல்லாம் போக்கக்கூடிய வெளிச்சம். அதன்பின், “தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்” (யோவான் 1:6). இந்த யோவான், அதாவது யோவான் ஸ்நானன், வெளிச்சத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்க வருகிறார். யார் இந்த வெளிச்சம்? அவர் ஏன் “இயேசு” என்று சொல்லவில்லை? இதுதான் யோவானுடைய எழுத்து நடை. அடுத்து என்ன நடக்கப்போகிறது, அது யார் என்ற ஆவலைத் தூண்டுவது. இதை எதிர்பார்ப்பு [anticipation] என்று சொல்லுவதுண்டு. இது எழுத்தின் ஒரு யுக்தி. பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கும்போது பல நேரங்களில் இது நமக்குப் புரிவதில்லை; அந்த யுக்தியை நாம் கவனிப்பதும் இல்லை.

அதன்பின் ஒரு பதற்றத்தை [tension] உண்டாக்குகிறார்: “அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை” (யோவான் 1:10). லோகாஸ் உலகத்துக்கு வந்திருக்கிறார்; உலகமே அவரால் உண்டாக்கப்பட்டிருந்தாலும், உலகம் அவரைக் கண்டுகொள்ளவில்லை. மிக எளிமையாக, மிக அழகாகச் சொல்லுகிறார். யார் இந்த லோகாஸ் என்ற எதிர்பார்ப்பு தொடர்கிறது.

“அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்” (யோவான் 1:14). அங்கேயும் அவர் “இயேசு” என்று சொல்லவில்லை. இயேசுவைப் பற்றித்தான் சொல்லுகிறார் என்று நமக்குத் தெரிகிறது; எல்லாருக்கும் தெரிகிறது. கிரேக்கர்களுக்கு எழுதியிருந்தால், “லோகாஸே மனிதனாக வந்தாரா? நம்மில் தங்கியிருந்தாரா? யாரைப் பற்றி இவர் பேசுகிறார்?” என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்குள் இருந்திருக்கும். அதே வசனத்தில் “பிதா” என்ற கருத்தை முதல்முறையாக அறிமுகப்படுத்துகிறார்: “அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.” பிதாவுக்கும் குமாரனுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது; குமாரன் பிதாவை வெளிப்படுத்துகிறார், பிரதிபலிக்கிறார். மறுபடியும் எதிர்பார்ப்பு: யார் இந்தப் பிதா? இவர் யார், குமாரன்? இன்னும் அவர் விளக்கவில்லை. எல்லாவற்றையும் உடனே சொல்லிவிட மாட்டார்; படிப்படியாகப் போவார். வாசிக்கும்போது நமக்கு வித்தியாசமாக இருக்கலாம்.

இத்தனை வாக்கியங்களில் இயேசுவைப் பற்றிச் சொல்லியிருந்தாலும், இயேசு என்ற நபரை அவர் நேரடியாக நம்முன் கொண்டுவருவது யோவான் 1:29-இல்தான். இயேசு தன்னிடத்தில் வருவதைக் கண்டு யோவான் ஸ்நானன் சொல்லுகிறார்: “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டி.”

சமாரியப் பெண்ணோடு நடக்கும் உரையாடலிலும் இதைப் பார்க்கிறோம். “அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்று இயேசு சொல்கிறார் (யோவான் 4:10). அவள் அதைச் சாதாரணத் தண்ணீராகப் புரிந்துகொள்கிறாள். அவர் தொடர்ந்து சொல்கிறார்:

இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்குந் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்குந் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார். (யோவான் 4:13–14)

இது ஒரு விளையாட்டான உரையாடல் போல இருக்கிறது. அவர் ஒன்றைச் சொல்கிறார்; அவள் வேறு மாதிரி புரிந்துகொள்கிறாள். “நான் தண்ணீரைப் பற்றிப் பேசவில்லை, நித்திய ஜீவனைப் பற்றிப் பேசுகிறேன்” என்று முதலிலேயே எளிதாகச் சொல்லியிருக்கலாமே? இது இயேசுவின் பேச்சு முறையா, யோவானின் எழுத்து முறையா என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் புதிய புதிய சொற்களைப் பயன்படுத்துவது யோவானின் பாணி. இயேசுவை லோகாஸ் என்பதும், ஒளி என்பதும், சத்தியம் என்பதும் அவருடைய எழுத்து நடை. தெளிவான சொற்களைவிடச் சில நேரங்களில் சிந்திக்கத் தூண்டும் சொற்களைப் பயன்படுத்துகிறார். “இது என்னவாக இருக்கும்?” என்று அடுத்து வருவதை யோசிக்க வைக்கிறார். ஆகவே “ஜீவத்தண்ணீர் என்றால் என்ன?” என்று அவசரப்பட்டு நாமாக ஒரு புதிய விளக்கத்தைக் கொடுக்கக் கூடாது. கொஞ்சம் காத்திருந்தால், எழுத்தாளரே அதற்கான விளக்கத்தைத் தருவார், அல்லது அந்தப் பகுதியிலேயே விளக்கம் இருக்கும். அந்தப் பொறுமையும் தாழ்மையும் நமக்குத் தேவை.

சில நேரங்களில் இது சுற்றி வளைத்துப் பேசுவதுபோல நமக்குத் தோன்றலாம். “ஏன் இப்படிச் சுற்றி வளைக்க வேண்டும்? ஒரேயடியாகப் போட்டு உடைத்துவிட்டுப் போகலாமே” என்று தோன்றும். அந்த அளவுக்குப் பொறுமை நமக்கு இருப்பதில்லை. நல்ல இலக்கியங்களை வாசித்திருந்தால் இது புரியும். ஒரு கதை சொல்லும்போது சிலவற்றை நிறுத்திவைக்க வேண்டும். உச்சக்கட்டத்தை [climax] முதலிலேயே சொல்லிவிட்டால், கதை சொல்லத் தெரியவில்லை என்றுதான் பொருள். யோவான் அப்போஸ்தலர் மட்டுமல்ல; மிக நல்ல கதாசிரியரும்கூட.

லூக்காவாக இருந்தால், யாரிடம் பேசினார், எங்கே பேசினார், எப்போது பேசினார் என்பதையெல்லாம் தெளிவாக விளக்குவார்; அது லூக்காவின் பாணி. யோவான் கருத்தைச் சொல்லுவார்; பல நேரங்களில் கூடுதல் தகவல்களைத் தர மாட்டார். யோவான் ஸ்நானன் யாரிடம் பேசினார், யாருக்கு ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தார் என்பதையெல்லாம் அவர் அதிகமாக விளக்க மாட்டார்.

ஒரே கருத்தை வேறு வடிவில்: சுழல் நடை

யோவானுடைய எழுத்து நடை சற்று சுழல் வடிவத்தில் [spiral, cyclical] இருக்கும். சுற்றி வளைத்துப் பேசுகிறார் என்பதைவிட, சொன்னதையே மறுபடியும் வேறு வடிவத்தில் சொல்லுவது என்பதுதான் சுழல் வடிவு. ஒரு நேர்கோட்டில், “இதற்குப் பின் இது, இதற்குப் பின் அது” என்று அவர் சொல்ல மாட்டார். வெளிப்படுத்தின விசேஷத்திலும் இதை மிக அழகாகப் பார்க்கலாம்.

யோவான் 1:6–8-ஐ எடுத்துக்கொள்ளுங்கள். யோவான் கடவுளால் அனுப்பப்பட்டவர்; வெளிச்சத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்க வந்தவர்; தன் மூலமாக எல்லாரும் விசுவாசிக்கும்படி வந்தவர். இவ்வளவு சொன்னதும், எட்டாம் வசனத்தில் மறுபடியும்: “அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.” அதாவது, “தப்பாகப் புரிந்துகொள்ளாதீர்கள்; அவர் வெளிச்சம் அல்ல, வெளிச்சத்துக்குச் சாட்சி கொடுக்க வந்தவர் மட்டுமே.” எதற்குத் திரும்பச் சொல்ல வேண்டும்? அது கூடுதல் தகவல் அல்ல; ஏற்கனவே சொன்ன தகவலையே திரும்பச் சொல்லுகிறார். அதுதான் அவருடைய எழுத்து நடை. இப்படி வாசித்தால் நமக்கு நகைச்சுவையும் கிடைக்கும், பொருளும் கிடைக்கும்; அவர் எப்படி எழுதியிருக்கிறார் என்பதும் தெரியும். அந்த முதல் பகுதி இறையியல் நிறைந்த பகுதி; அதில் மாற்றுக் கருத்தே இல்லை.

சுருக்கி எழுதுதல் [précis writing] என்று ஒன்று உண்டு. நல்ல எழுத்தில் தேவையில்லாத சொற்களும் சொற்றொடர்களும் இருக்கக் கூடாது; எவ்வளவு சுருக்கமாக, எவ்வளவு தெளிவாக எழுத முடியுமோ அவ்வளவு சுருக்கமாக, தெளிவாக எழுத வேண்டும். கல்லூரிகளில், வேதாகமக் கல்லூரிகளில் [Bible colleges], நல்ல முறையில் ஆய்வேடு [dissertation] எழுதுவது எப்படி என்று கற்றுக்கொடுத்தபோது, ஒரு பகுதியைக் கொடுத்து, “இதை மூன்றில் ஒன்றாகச் சுருக்குங்கள்” என்று பயிற்சி கொடுப்பேன். முதல் பயிற்சிக்குப் பல நேரங்களில் யோவானிலிருந்தே ஒரு பகுதியைக் கொடுத்துவிடுவேன். ஏனெனில் அது மிக எளிது: அவர் மூன்று வாக்கியங்கள் சொன்னால், அதை ஒரு வாக்கியமாகச் சுருக்குவது எளிது. மற்றவர்களுடைய எழுத்தைச் சுருக்குவது சற்றுக் கடினம்.

ஓடும் வர்ணனை

யோவான் ஒரு நிகழ்வைச் சொல்லும்போதே, அதைக் குறித்து விளக்கவுரையும் [commentary] கொடுத்துக்கொண்டே வருவார். கிரிக்கெட் போட்டி நடந்துகொண்டிருக்கும்போதே அதைக் குறித்துப் பேசிக்கொண்டே இருப்பார்களே, அந்த ஓடும் வர்ணனை [running commentary] போல. சில நேரங்களில் அது விளக்கமாக இருக்கும்; சில நேரங்களில் விவரிப்பாக இருக்கும்.

ஆலயத்தில் இயேசு சாட்டையை எடுத்தபோது, “அப்பொழுது அவருடைய சீஷர்கள்: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை நினைவுகூர்ந்தார்கள்” (யோவான் 2:17). நிகழ்வு நடந்துகொண்டிருக்கும்போதே, சீஷர்களுடைய மனதில் என்ன ஓடியது என்பதை அவர் சொல்லுகிறார். “இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்” என்று இயேசு சொன்னபோது, மக்கள், “இவர் இந்த ஆலயத்தை இடிக்கப்போகிறார்” என்று புரிந்துகொண்டார்கள். அவரோ தம்மைப் பற்றிப் பேசினார். உடனே யோவான் வர்ணனை கொடுக்கிறார்: “அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்” (யோவான் 2:19–21). “இயேசு எதைப் பற்றிப் பேசினார் தெரியுமா? இதைப் பற்றித்தான்” என்று சொல்லுவதுபோல.

சில நேரங்களில் அது சமுதாயத்தைப் பற்றிய வர்ணனையாக [social commentary] இருக்கும். ஒரு விஷயம் நடந்துகொண்டிருக்கும்போதே, சமுதாயத்தைப் பற்றிய ஒரு உண்மையைச் சட்டென்று கொண்டுவந்து உடைத்துவிடுவார். எருசலேமில் அவர் செய்த அடையாளங்களைக் கண்டு பலர் அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள். உடனே யோவான் சொல்லுகிறார்: “அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை” (யோவான் 2:23–25). இது சமுதாயத்தைப் பற்றிய ஒரு விமர்சனம்.

இந்த வர்ணனையில் வருவது யோவானுடைய புரிதல். “இயேசு இப்படித்தான் நினைத்தார் என்று நாங்கள் புரிந்துகொண்டோம்” என்று அவர் சொல்லும்போது, அவருடைய புரிதலையே அவர் கொண்டுவருகிறார். எல்லாரும் மனிதர்கள்தான். இயேசுவோடு இருந்து அவருடைய செயல்களை நேரடியாகப் பார்த்தவர்கள் மட்டுமே கருத்துச் சொல்ல வேண்டும், பதிவுசெய்ய வேண்டும் என்பதும் இல்லை. மாற்கு பேதுருவின் மனதில் இருந்ததை எழுதினார்; பேதுருவுக்கு அவர் எழுதுகோலாக இருந்தார்.

யோவான் 3:16 இயேசு பேசியதா, யோவானுடைய வர்ணனையா? இயேசு பேசியது எங்கே முடிகிறது என்பதில் மொழியாக்கங்கள் வேறுபடுகின்றன; சில மொழியாக்கங்கள் மேற்கோள் குறிகளைப் பதினைந்தாம் வசனத்தோடு முடித்துவிடுகின்றன. இது பெரிய பிரச்சினையே அல்ல. யார் சொன்னாலும், அந்தக் கருத்து சரியான, உண்மையான கருத்துதான்; ஏனெனில் ஏற்கனவே சொல்லப்பட்ட கருத்தின் அடிப்படையில் சொல்லப்படுவது அது. புதிய கருத்து அல்ல.

பின்னோக்கிய இணைப்பு

இயேசு பேசியபோது, அவர் என்ன சொல்லுகிறார் என்பது அவருடைய சீஷர்களுக்குக்கூடப் புரியவில்லை. யோவானும் ஒரு சீஷன்; அவருக்கும் அப்போது புரிந்திருக்காது. இயேசு மரித்து உயிரோடு எழுந்த பின்புதான், “ஓ, இதைப் பற்றித்தான் அவர் பேசினாரோ!” என்று அவர்களுக்குப் புரிந்தது. யோவான் அந்தப் பிற்காலப் புரிதலை, அந்த நிகழ்வு நடந்த இடத்திலேயே இணைத்துவிடுகிறார்: “அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு, அவர் இப்படிச் சொன்னதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து” (யோவான் 2:22). ஒரு விஷயம் நடந்து முடிந்த பின், ஏற்கனவே பேசப்பட்ட ஒன்றோடு அதை இணைப்பது. இதை பின்னோக்கிய இணைப்பு [retrospective connection] என்று சொல்லலாம்.

திரும்பத் திரும்ப வரும் கருப்பொருள்

முதல் சீஷர்கள், “ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டபோது, இயேசு, “வந்து பாருங்கள்” என்றார் (யோவான் 1:38–39). அவர் தங்கும் இடத்தைப் பார்த்து அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? கேள்வி அது அல்ல. “உம்மோடு நேரம் செலவிட வேண்டும்; உம்மிடத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்பதுதான் அந்தக் கேள்வியின் நோக்கம். “வந்து பாருங்கள்” என்று இயேசு சொல்லுவதும், “நான் எங்கே இருக்கிறேன் என்று பாருங்கள்” என்பதைவிட, “நீங்கள் எதற்காக வருகிறீர்களோ அதை நான் உங்களுக்குத் தருகிறேன்; அதற்கு நான் ஆவலாக இருக்கிறேன்; வாருங்கள், கற்றுக்கொடுக்கிறேன்” என்பதுதான்.

இந்த “வந்து பாருங்கள்” யோவானுடைய எழுத்தில் பரவலாக வருகிறது. பிலிப்பு நாத்தான்வேலிடம், “வந்து பார்” என்கிறார் (யோவான் 1:46). சமாரியப் பெண், “வந்து பாருங்கள்” என்கிறாள் (யோவான் 4:29). ஒரு கருத்தோ, ஒரு தகவலோ, ஒரு சொல்லோ, ஒரு சொற்றொடரோ, ஒரு காட்சியோ ஒரு எழுத்தில் மறுபடியும் மறுபடியும் வந்தால், அதைக் கருப்பொருள் [motif] என்று சொல்லுவதுண்டு. அது ஒரு இலக்கிய யுக்தி; ஒரு அழகு. யோவானுடைய பாணியில் இவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

யோவானுடைய இன்னொரு பழக்கம்: தன்னுடைய வாசகர்களுக்குப் புரியாத ஒரு சொல்லை அவரே விளக்கிவிடுவார். வேறு இடத்தில் நடந்த ஒன்று, கலாச்சார வேற்றுமை உண்டு; அதனால் அதற்கான விளக்கத்தை அங்கேயே தருகிறார்: “ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம்” (யோவான் 1:38).

“போகவேண்டியதாயிருந்தது”

அப்பொழுது அவர் சமாரியா நாட்டின் வழியாய்ப் போகவேண்டியதாயிருந்தது. (யோவான் 4:4)

இது யோவானின் எழுத்து நடையின் ஒரு சுவாரசியமான தகவல். யூதர்கள் சமாரியாவின் வழியாகப் போவதில்லை என்பது இந்த நிகழ்விலிருந்தே நமக்குத் தெரிகிறது; வேறு எங்கிருந்தும் புதிதாகத் தேட வேண்டியதில்லை. பரவலாக அவர்கள் பயன்படுத்திய வழி வேறு. ஆகவே கலிலேயாவுக்குப் போக வேண்டுமென்றால் இந்த வழியாகத்தான் போக வேண்டும், வேறு வழியே இல்லை என்ற புவியியல் கட்டாயம் [geographical necessity] இங்கே இல்லை. யோவான் வேறு விதமான ஒரு கட்டாயத்தைக் காண்பிக்கிறார்: “நான் சமாரியாவுக்குப் போயே ஆக வேண்டும்; சமாரிய மக்களைப் பார்த்தே ஆக வேண்டும்; அவர்களிடம் இந்த நற்செய்தியைக் கொண்டுபோயே ஆக வேண்டும்” என்று அவருக்குள் இருந்த உந்துதல், விருப்பம், வாஞ்சை [passion]. இது யோவானில் மிக அழகான ஒன்று. ஆகவே இந்தத் தகவலை வாசிக்கும்போது, “போயாக வேண்டியிருந்தது என்று யோவான் ஏன் சொல்கிறார்? வேறு வழி இல்லை என்பதாலா, மக்கள்மேல் அவருக்கு இருந்த அக்கறையைக் காண்பிப்பதற்கா?” என்று கேட்க வேண்டும்.

கருத்து முடியும்வரை வாசியுங்கள்

நற்செய்தி நூல்களை வாசிக்கும்போது, அவற்றைத் தனித்தனி அதிகாரங்களாகப் பார்க்கக் கூடாது. எந்தப் பகுதியை வாசித்தாலும் தொடர்ச்சியாக வாசிக்கப் பழக வேண்டும். ஒரு கருத்து முடியும்வரை அந்தப் பகுதியை வாசிக்க வேண்டும். இதைப் பெரிக்கோப்பே [pericope] என்று சொல்லுவதுண்டு. அந்தத் தொழில்நுட்பச் சொல் நமக்கு முக்கியம் அல்ல.

இரண்டாம் அதிகாரத்தோடு நிறுத்திவிட்டால், மூன்றாம் அதிகாரம் நமக்கு ஒழுங்காகப் புரியாது; அந்தத் தொடர்ச்சி கிடைக்காது. இரண்டாம் அதிகாரத்தின் முடிவில், இயேசு மக்களை நம்பி இணங்கவில்லை என்று யோவான் சொல்லுவதை மேலே பார்த்தோம். சிலர் அவரைப் பற்றி வாயால் நன்றாகப் பேசுவார்கள், உயர்த்திப் பேசுவார்கள்; ஆனால் உண்மையில் அவரைப் பின்பற்ற நினைக்க மாட்டார்கள். இதையெல்லாம் அவர் நன்றாக அறிந்திருந்தார். அதைச் சொல்லிவிட்டு உடனே, “யூதருக்குள் அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்” என்கிறார் (யோவான் 3:1). நிக்கொதேமு இயேசுவிடம் வந்து இப்படியெல்லாம் பேசினான் என்று சொன்னவுடனே நமக்குச் சிரிப்பு வர வேண்டும். உதாரணத்துக்கு ஒருவரைக் கொண்டுவருகிறார் என்பது நமக்குப் புரியும்.

ஆகவே, யோவானை வாசிக்கும்போது அவசரப்படக் கூடாது. அந்த அழகை ரசித்துக்கொண்டே, அவர் சொல்ல வரும் கருத்தைப் பிடித்துக்கொள்ளவேண்டும்.