“இயேசு இதைக் கற்றுக்கொடுத்தாரா?”
எந்தப் போதனைக்கும் முதல் கேள்வி
எந்த ஒரு போதனையைக் கேட்டாலும், நான் எப்போதும் கேட்கும் முதல் கேள்வி இதுதான்: இதை இயேசு கற்றுக்கொடுத்தாரா, அல்லது வேறொருவர் கற்றுக்கொடுக்கிறாரா? இயேசு இதைக் கற்றுக்கொடுக்கவில்லை என்றால், இது எனக்கு முக்கியமானது அல்ல.
ஏன்? இயேசு யார்? அவர் கடவுள்; மனிதனாக வந்தவர். சும்மா மனிதனாக வாழ்ந்து அனுபவித்துப் பார்க்கலாமே என்று வந்தவர் அல்ல. ஒரு நோக்கத்துக்காக வந்தார். கடவுளுடைய மகிமையையும் கடவுளுடைய முழுமையையும் காண்பிக்கவும், மனிதர்கள் கடவுளோடு இணைவதற்கான வழியையும் போதனைகளையும் கொடுக்கவும் வந்தார். அந்த நோக்கத்தை அவர் நிறைவேற்றினார். ஆகவே அவருடைய போதனை முழுமையானது.
அவருடைய போதனையில் இருப்பவை
இயேசுவின் போதனைகளில் இருப்பவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1. இறையியல் [theology]: கடவுளைப் பற்றிய தகவல்கள். கடவுளைப் பற்றி நாம் எவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ, மனிதர்களுக்கு எவையெல்லாம் தேவையோ, அவை அனைத்தும் இயேசுவின் போதனைகளில் இருக்கின்றன.
2. கோட்பாடுகள் [principles]: நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான போதனைகள் [principles of living]. அன்றாட வாழ்க்கையில் நாம் தீர்மானங்கள் எடுக்கிறோம். ஒவ்வொரு தீர்மானத்துக்கும் அடிப்படையாக, எது சரி, எது தவறு, எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்ற போதனை அங்கே கொடுக்கப்படுகிறது. இதை அறநெறி என்று சொல்லலாம்; வாழ்க்கை முறை என்றும் சொல்லலாம்.
3. கண்ணோட்டம் [perspective]: நம்மைச் சுற்றி இருப்பவற்றை நாம் பார்க்கும் பார்வை. மனிதர்களைப் பற்றிய பார்வை, உலகம் இயங்குவதைப் பற்றிய பார்வை.
மூன்றாவதற்கு ஒரு உதாரணம். வெற்றிகரமான வாழ்க்கை [successful life] என்றால் என்ன என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். “வாழ்க்கையில் இதைச் சாதித்திருக்க வேண்டும், அதைச் சாதித்திருக்க வேண்டும்; ஐம்பது வயதில் இதைச் சாதித்திருப்போம்; இதுதான் வெற்றி” என்று சில கற்பனைகளை வைத்திருப்பார்கள். இதுதான் உலகத்தைப் பற்றிய பார்வை. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் சிலவற்றை அளவுகோலாக வைத்து, பல விஷயங்களை அளக்கிறார்கள். நாமோ இயேசுவின் போதனைகளின் வழியாக இவற்றை அளக்கப் பழக வேண்டும். என்னுடைய வாழ்க்கை உண்மையிலேயே நல்ல வாழ்க்கையாக இருந்திருக்கிறதா இல்லையா? அதைப் பணத்தை வைத்து எந்த மனிதனும் அளவிட முடியாது.
அவர் செய்ததா, அவர் கற்றுக்கொடுத்ததா?
மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்றும், வரலாற்றில் வாழ்ந்த இயேசுவையும், அவர் என்ன கற்றுக்கொடுத்தார் என்பதையும் முக்கியப்படுத்துகின்றன. நற்செய்தி நூல்களில் பல நிகழ்வுகள் இருக்கின்றன. ஆனால் இயேசு என்ன செய்தார் என்பதைவிட, என்ன கற்றுக்கொடுத்தார் என்பதுதான் நமக்கு முக்கியம். “இயேசு இப்படிச் செய்தாரே; நானும் செய்வேன்” என்று சொன்னால், நம்மைக் கடவுளுக்கு நிகராக உயர்த்திவிட்டோம் என்றுதான் பொருள். அவர் கடவுள்; நாம் கடவுள் அல்ல. அவர் செய்தவை அவரைக் கடவுள் என்று காண்பிக்கின்றன. அவர் கற்றுக்கொடுத்தவையே நாம் பின்பற்ற வேண்டியவை.
இயேசுவுக்கு மாறாகத் தோன்றும்போது
இயேசு கற்றுக்கொடுத்ததற்கு மாறாகத் தோன்றும் எதையும், அது வேறு பொருள் உள்ளது என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். “இயேசு தவறாகக் கற்றுக்கொடுத்துவிட்டார்; குறைவாகக் கற்றுக்கொடுத்துவிட்டார்; அவர்கள்தான் சரியாகக் கற்றுக்கொடுத்தார்கள்” என்ற புரிதல் நமக்கு எப்படி வர முடியும்? இயேசு கடவுள்.
நிருபங்களை எழுதியவர்கள் இயேசுவின் சீஷர்கள். இயேசுவின் போதனைகளுக்கு முரணாகவோ, “இயேசு இவற்றைச் சொல்லாமல் விட்டுவிட்டுப் போய்விட்டார், மறந்துவிட்டார்; நாங்கள் விளக்குகிறோம்” என்று அவற்றை முழுமைப்படுத்தும் வகையிலோ அவர்கள் எழுதுவார்களா? அதற்கு வாய்ப்பே இல்லை. இந்த உறுதி நம் மனதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். அவர்கள் சொல்லுவது நமக்கு வித்தியாசமாகத் தோன்றினால், அடுத்த கேள்வி இதுதான்: யாருக்கோ ஒரு வகையில் புரியவைப்பதற்காக இப்படிப் பேசுகிறார்களா? அவர்கள் எழுதியது ஒரு குறிப்பிட்ட கூட்டத்துக்கு; அவர்களுக்குப் புரியும் வகையில் இயேசுவின் போதனைகளை எழுதுகிறார்கள். “அறியப்படாத தேவனையே உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்று பவுல் அத்தேனே மக்களுக்குப் புரியும் வகையில் பேசியதுபோல (அப்போஸ்தலர் 17:23). ஆகவே அது உலகளாவிய போதனை அல்ல.
“யோவான் இப்படித்தான் சொல்லிவிட்டார்” என்று சொல்லி, கடவுள் சொன்னதை மட்டுப்படுத்துவது அநியாயம். கடவுள் சொன்னதை மட்டுப்படுத்திவிட்டு, வேறு யாரோ சொல்லுவதை முன்வைப்பது தேவதூஷணம். அதோடு, இயேசுவின் சீஷர்களையும் நாம் மட்டுப்படுத்துகிறோம்: “இயேசு சொல்லாததை நீ சொல்லுகிறாய்” என்று அவர்கள்மேல் குற்றம் சுமத்துகிறோம். ஆனால் இயேசுவின் சீஷர்கள் ஒவ்வொருவரும் தங்களைத் தாழ்த்திக்கொண்டு இயேசுவை உயர்த்தியவர்கள். இயேசு கற்றுக்கொடுக்காத ஒரு இறையியலை வேறொருவர் சொன்னால், சந்தேகப் பார்வையோடு பார்க்க வேண்டியது அவர் சொல்லுவதைத்தான்; இயேசு சொன்னதைச் சந்தேகப் பார்வையோடு பார்க்க முடியாது.
ஒரு உதாரணம்
“இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டி” என்று யோவான் ஸ்நானன் இயேசுவைப் பற்றிச் சொல்லுகிறார் (யோவான் 1:29). பின்னர், ஏறக்குறைய பதினைந்தாம், பதினாறாம் நூற்றாண்டுகளில் வந்த கால்வினிச இறையியலும் [Calvinistic theology] லூத்தரன் இறையியலும் [Lutheran theology] பேசியது இதுதான்: “இயேசு நமக்காகப் பலியானார்.” இதையே பேசிப் பேசிப் பழகிவிட்டோம். அந்த வாக்கியம் அதற்கு ஏற்றாற்போலத் தோன்றுகிறது. ஆனால் நான் கேட்கும் கேள்வி: இயேசு அப்படிக் கற்றுக்கொடுத்தாரா? இயேசு அப்படிக் கற்றுக்கொடுக்கவில்லையே.
யூதர்கள் அதை எப்படிப் புரிந்துகொண்டார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது, “ஒரு மிருகம் மரிக்க வேண்டும்; அப்போதுதான் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்” என்பது. யோவான் ஸ்நானன் இரண்டையும் இணைத்துச் சொல்லுகிறார்: “இப்போது இயேசுவின் மூலமாக உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ஆகவே உங்களைப் பொறுத்தவரை, அவரை ஒரு ஆட்டுக்குட்டியாகப் புரிந்துகொள்ளுங்கள்.” அது யூத மார்க்கத்தின் மூலமாகக் கிடைக்கவில்லை; இயேசு அதைக் கற்றுக்கொடுப்பதன் மூலமாகக் கிடைக்கிறது. “உங்கள் பலி உங்கள் மனதில் என்ன செய்கிறதோ, அதை இயேசு செய்கிறார்” என்பதே அவர் சொல்லுவது.
இயேசு என்ன கற்றுக்கொடுத்தார்? “மனந்திரும்புங்கள்” என்றார்; இறையாட்சிக்குள் பிரவேசிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் கற்றுக்கொடுத்தார். இதுதான் கடவுளுடைய போதனை. இடையில் வந்த யூத மார்க்கம் கற்றுக்கொடுத்தது: “பலி செலுத்தினால்தான் கடவுளோடு இணைப்பு; பலி செலுத்தினால்தான் பாவ மன்னிப்பு.” யோவான் 14-இல் இயேசு தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லுகிறார்: “என் வார்த்தைகள் உங்களில் நிலைத்திருந்தால், நீங்கள் என்னில் இருக்கிறீர்கள்; பிதா உங்களில் இருக்கிறார்; குமாரன் உங்களில் இருக்கிறார்; பரிசுத்த ஆவியானவர் உங்களில் இருக்கிறார்” (யோவான் 14:15–23). அங்கே அவர் பலியைப் பற்றிப் பேசவில்லை. “நான் சிலுவையில் அறையப்பட்ட பின்புதான் இதெல்லாம் நடக்கும்” என்றும் அவர் சொல்லவில்லை. சகேயுவைப் பார்த்து முன்னமே சொல்லிவிடுகிறார்: “இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது” (லூக்கா 19:9). சீகார் பட்டணத்துச் சமாரியப் பெண்ணும், அதன்பின் அந்தப் பட்டணத்து மக்களும் அவரைப் பின்பற்றுகிறார்கள் (யோவான் 4:39–42). இவர்கள் எல்லாரும் அப்போதே அவரோடு இணைக்கப்பட்டவர்கள். “அவர் சிலுவையில் மரித்ததால்தான் நாங்கள் அவரோடு இணைந்தோம்” என்ற இறையியல், இயேசுவால் கற்றுக்கொடுக்கப்பட்ட இறையியல் அல்ல.
பிரச்சினை எங்கே வருகிறது? நற்செய்தி நூல்களை விட்டுவிட்டு, நிருபங்களில் சொல்லப்பட்டவற்றை முன்னிலைப்படுத்துகிறார்கள். நிருபங்களை முக்கியப்படுத்தி, அங்கே பலிகளை முக்கியப்படுத்தியதால், இயேசுவின் போதனையே மறைக்கப்பட்டுவிட்டது. பிரமாணமும் இதைக் கற்றுக்கொடுக்கவில்லை.
பொறுப்பு யாருடையது?
“இயேசுவின் இரத்தம் என் பாவங்களை மன்னிக்கிறது” என்று சொல்லுவதற்கும், “இயேசுவின் போதனைகளின்படி நான் நடக்க வேண்டும்” என்று சொல்லுவதற்கும் வேறுபாடு இருக்கிறது. இயேசுவின் போதனைகளின்படி நடக்க வேண்டும் என்பது என் பொறுப்பு; நான் செய்ய வேண்டியது இருக்கிறது. “இயேசுவின் இரத்தம் என்னைச் சுகமாக்குகிறது” என்றால், பொறுப்பு யார் கையில் இருக்கிறது? அவர் கையில். “அவருடைய நாமத்தினால் எல்லாம் சரியாகிவிடும்” என்றால், அது வெறும் வார்த்தை; அவர் பெயரைச் சொன்னால் எல்லாம் நடந்துவிடும் என்றாகிவிடுகிறது. பழியும் அவர்மேல்தான்.
இயேசு அப்படிக் கற்றுக்கொடுக்கவில்லை. அவர் பொறுப்பை நம்மேல், ஒவ்வொருவர்மேலும் வைத்தார். “நீ என்னைப் பின்பற்றுவதும் பின்பற்றாமல் இருப்பதும் உன் பொறுப்பு.” இதுதான் கடவுளாகிய இயேசு கற்றுக்கொடுத்தது. அவருடைய வார்த்தைகளின்படி நடக்கிறவர்கள் கடவுளோடு இணைந்திருக்கிறார்கள்; அவரை நேசிக்கிறார்கள்; அவரும் அவர்களை நேசிக்கிறார். இதைவிட வேறு என்ன சிலாக்கியம் நமக்கு வேண்டும்? அப்படியிருக்க, அவருடைய இரத்தத்தினால் என்ன நடக்கிறது, அவருடைய நாமத்தினால் என்ன நடக்கிறது என்ற பேச்சுக்கே இடமில்லை.
பவுலோ பேதுருவோ யோவானோ எளிதான ஒன்றைக் கற்றுக்கொடுத்தார்கள் என்று நான் சொல்லவில்லை. அவர்கள் தாங்கள் எழுதியவர்களுக்குப் புரியும் வகையில் சொல்லிக்கொடுத்தார்கள்; ஆனால் பொறுப்பை அவர்கள் கையிலிருந்து எடுக்கவில்லை. இன்று நாம்தான் அவற்றைப் பார்த்து, எளிதாகத் தோன்றுவதை எடுத்துக்கொள்கிறோம். அவர்களுடைய வார்த்தைகளை இயேசுவின் வார்த்தைகளோடு போட்டுக் குழப்பக் கூடாது.
ஆகவே, எந்தப் போதனையைக் கேட்டாலும், எவ்வளவு பெரிய ஆள் சொன்னாலும், முதலில் கேட்கவேண்டியது இதுதான்: இயேசு இதைக் கற்றுக்கொடுத்தாரா?