எழுதியவர் சொல்ல வந்தது என்ன?
எப்போதும் கேட்க வேண்டிய இரண்டு கேள்விகள்
பரிசுத்த வேதாகமத்தின் ஒரு பகுதியை வாசிக்கும்போது இரண்டு கேள்விகளை எப்போதும் கேட்க வேண்டும். முதலாவது: எழுதியவர் என்ன சொல்ல நினைத்தார்? அவர் தன்னுடைய மனதில் எதை வைத்து அதைச் சொல்லுகிறார்? அவர் கருதிய பொருள் [intended meaning] என்ன? இரண்டாவது: அவர் யாருக்கு எழுதினாரோ, அந்த வாசகர்கள் அதை எப்படிப் புரிந்துகொண்டிருப்பார்கள்?
இந்த நூல்கள் எதுவும் வெற்றிடத்தில் [vacuum] எழுதப்படவில்லை; வாசகர்களே இல்லாமல் எழுதப்படவில்லை. இன்று நாம் ஒரு புத்தகத்தை அச்சிட்டால், அதை யார் வாங்குவார்கள் என்று நமக்குத் தெரியாது. YouTube-இல் ஒரு காணொளியை வெளியிட்டால், யார் பார்ப்பார்கள் என்று தெரியாது. எதையும் எங்கிருந்தும் பார்க்கக்கூடிய காலம் இது. ஆகவே, “இவர்களுக்காகக் கொடுக்கிறோம்” என்ற எண்ணம் எழுதுகிறவர் மனதில் ஓரளவு இருந்தாலும், நேரடி வாசகர்கள் [direct audience] யார் என்பதை யூகிக்கத்தான் முடியுமே தவிர, உறுதியாகச் சொல்ல முடியாது. பரிசுத்த வேதாகமத்தை எழுதியவர்களின் நிலை அப்படி இல்லை. தாங்கள் யாருக்கு எழுதுகிறோம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, அந்த நேரடி வாசகர்கள் இதை எப்படிப் புரிந்துகொண்டிருப்பார்கள் என்பதுதான் நம்முடைய அடுத்த கேள்வி.
எழுதியவர் சொல்ல நினைக்காத ஒன்றை நான் அதிலிருந்து எடுத்துக்கொண்டால், எழுதியவரை நான் அவமதிக்கிறேன்; அவர் சொல்லும் உண்மையையும் மதிக்கவில்லை. அவர் யாருக்கு எழுதினாரோ அவர்கள் புரிந்துகொண்டதைத் தவிர வேறு எதை நான் புரிந்துகொண்டாலும், உண்மையை எடுத்துக்கொள்ளாமல் பொய்யான ஒன்றை எடுத்துக்கொள்கிறேன் என்றுதான் பொருள். உதாரணமாக, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரைப் பற்றி மோசே இஸ்ரவேலருக்கு எழுதியபோது, “எங்கள் மூதாதையரைப் பற்றி, எங்கள் வரலாற்றைப் பற்றி எழுதியிருக்கிறார்” என்றுதான் அவர்கள் புரிந்துகொண்டார்கள். ஆபிரகாமையோ ஈசாக்கையோ கடவுளுக்கு ஒப்பிட்டு, அந்த நிகழ்வுகளில் பிதாவையும் குமாரனையும் பார்க்கும் எண்ணம் எழுதியவர் மனதிலும் இல்லை; கேட்டவர்கள் மனதிலும் இல்லை. அந்த எண்ணத்தை இன்று நாம் அந்த நிகழ்வுகளுக்குள் புகுத்தினால், வரலாற்றையே மாற்றுகிறோம்.
இன்னொரு உதாரணம்:
உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். (ஆதியாகமம் 3:15)
இதை “முதல் நற்செய்தி” [protoevangelium] என்றும், இது இயேசுவைக் குறிக்கிறது என்றும் நமக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது; ஆகவே அப்படிப் பார்க்கிறோம். பின்னால் வந்தவர்கள் கற்றுக்கொடுத்ததை வைத்து, பின்னோக்கி ஒரு இணைப்பை ஏற்படுத்துகிறோம். ஆனால் அன்று எழுதியவருடைய கண்ணோட்டத்திலும், அன்று புரிந்துகொண்டவர்களுடைய கண்ணோட்டத்திலும் பார்த்தால், இதை இயேசுவோடு ஒப்பிடுவதற்கு வாய்ப்பே இல்லை. இது ஒரு கதைப் பகுதி [narrative passage]; காரியங்களை நேரடியாகப் பேசும் பகுதி அல்ல. எல்லாவற்றையும் நேரடிப் பொருளில் எடுத்துக்கொண்டால் பல கேள்விகள் வரும்: மனிதர்களைப் போல யோசிக்கும் திறனுடைய ஒரு உயிரியாக [sentient being] சர்ப்பத்தைக் கடவுள் படைத்தாரா? மனிதர்கள் அதன் சொல்லைக் கேட்பார்கள் என்று தெரிந்தே அதைத் தோட்டத்தில் வைத்தாரா? அவர்கள் சாப்பிட்டது என்ன பழம்? பழத்தைச் சாப்பிடுவதில் என்ன இருக்கிறது? மோசே அந்த மக்களுக்கு எழுதியபோது, இயேசுவைப் பற்றிய புரிதல் அவர்களுக்கு இருக்க வாய்ப்பே இல்லை. ஒரு தீர்க்கதரிசிக்கும் சர்ப்பத்தின் வித்துக்கும் இடையிலான பகை என்றுகூட அவர்கள் புரிந்துகொண்டிருக்க வாய்ப்பில்லை.
அங்கே சர்ப்பம் தீமையை விளைவிக்கும் ஒன்றாக, தீமைக்குக் காரணமான ஒன்றாகக் காண்பிக்கப்படுகிறது. அந்தக் கதைக்கு அடுத்ததாக உடனே காயீனும் ஆபேலும் வருகிறார்கள். அப்போதே நமக்குப் புரிந்துவிடுகிறது: இது கடவுளைப் பின்பற்றுகிறவர்களுக்கும் கடவுளுடைய பிரமாணத்துக்கு விரோதமாக இருக்கிறவர்களுக்கும் இடையிலான பகை. ஆதிமுதல் நடக்கும் ஒன்று. ஆகவே இதை நேரடிப் பொருளில் அல்ல, கதை வடிவில் சொல்லப்பட்ட ஒன்றாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு பகுதி முழுமையாகப் புரியவில்லை என்றால், எழுதியவர் விளக்கும்வரை கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும். அவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக எப்படி அடுக்குகிறார்கள் என்பதிலிருந்தே விளக்கம் கிடைத்துவிடும். அதற்கு முன்பே முந்திக்கொண்டு நாமாக ஒரு விளக்கத்தைக் கொடுப்பது அநியாயம்.
இந்தப் பகுதியை வைத்து, சாத்தான் கடவுளின் எதிரி, இருவருக்கும் இடையில் போர் நடக்கிறது, இறுதியில் கடவுள் வெல்வார் என்று கற்றுக்கொடுப்பதும் தவறு. கடவுளுக்குப் பிரபஞ்ச எதிரி [cosmic enemy] என்று ஒருவனும் இல்லை. கடவுளால் உருவாக்கப்பட்ட ஒன்று கடவுளுக்கு நிகராகப் போட்டியிட முடியாது. ஒரு யானைக்கும் ஒரு எறும்புக்கும் இடையில் நடப்பதைச் சண்டை என்றே சொல்ல முடியாது; சண்டை என்று சொன்னால், இரண்டும் ஒரே வலிமை உடையவை போலக் காண்பித்துவிடுகிறோம். கடவுள் ஒருவரே; அவருக்கு நிகரானது எதுவுமே இல்லை. ஒன்றைக் கடவுளுக்கு நிகராக உயர்த்துவது இந்த அடிப்படைக்கே விரோதமானது; அது தேவதூஷணம்.
நானும் இவற்றைக் கற்றுக்கொண்டபோது அப்படியே உள்வாங்கியிருக்கிறேன். ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்கு முன்பு நான் எடுத்த வகுப்புகளை இன்று பார்க்கும்போது, எல்லாவற்றையும் சரியான பார்வையில், உள்ளபடியே [objectively] பார்க்க முயன்றாலும், சில இடங்களில் ஏற்கெனவே கற்றுக்கொடுக்கப்பட்டதன் கண்ணோட்டத்தில்தான் பார்த்திருக்கிறேன் என்று என்னையே நான் விமர்சிக்க முடியும்.
தீர்க்கதரிசிகளும் இப்படித்தான். ஒவ்வொரு தீர்க்கதரிசிக்கும், ஒவ்வொரு எழுத்தாளருக்கும், நேரடியாகக் கேட்டுக் கற்றுக்கொண்ட வாசகர்கள் இருந்தார்கள். அவர்கள் பேசியது ஒரு கூட்டத்திடம். ஒரு செய்தியை எழுதி, ஒரு பெட்டிக்குள் போட்டு, “இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து யாராவது வாசிக்கட்டும்” என்று அவர்கள் பேசவில்லை. உதாரணமாக, யோவேல் தீர்க்கதரிசி இப்படிச் சொல்லுகிறார்:
சீயோனில் எக்காளம் ஊதுங்கள்; என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் தொனியை உண்டாக்குங்கள்; தேசத்துக் குடிகளெல்லாம் தத்தளிப்பார்களாக; கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது. (யோவேல் 2:1)
அதைத் தொடர்ந்து, தேசத்தின்மேல் வரவிருக்கும் திரளான, பலத்த சேனையை அவர் விவரிக்கிறார் (யோவேல் 2:2–11). “ஆண்டவருடைய நாள்” என்று தீர்க்கதரிசிகள் பேசியபோது, அதைக் கேட்டவர்கள், தங்கள் மீது வரவிருந்த படையெடுப்பைக் கடவுள் தங்களை நியாயம் விசாரிக்கும் நாளாகவே புரிந்துகொண்டார்கள்; முந்நூறோ ஐந்நூறோ இரண்டாயிரமோ ஆண்டுகள் கழித்து நடக்கப்போகும் ஒன்றாக அல்ல. ஒரு செய்தி யாருக்குப் பேசப்படுகிறதோ, அவர்களுக்குப் பயன்படவில்லை என்றால், அந்தச் செய்தியே பயனற்றது; தீர்க்கதரிசியின் வேலையும் பயனற்றதாகிவிடும். ஒரு காலகட்டத்தில் இருப்பவர்கள் அதைப் புரிந்துகொண்டு தங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் போதனை கொடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு எழுத்து நடை உண்டு. லூக்கா எளிதாகவும் தெளிவாகவும் எழுதுவார்; யோவானுடைய நடை வேறு. “இதையெல்லாம் நேராகச் சொல்லியிருந்தால் எங்களுக்குப் புரிந்திருக்குமே” என்று சில நேரங்களில் தோன்றலாம். ஆனால் அவர்கள் எப்படி எழுதியிருக்கிறார்களோ, அதே கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வது வாசகர்களாகிய நம்முடைய கடமை. நமக்கு ஏற்றபடி அவர்கள் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.
சொல்லப்படும் தகவலும், அதைப் புரியவைக்கும் முறையும்
ஒரு பகுதியில் இரண்டு காரியங்கள் இருக்கின்றன. ஒன்று, உள்ளடக்கம் [content]: எழுதியவர் சொல்ல வரும் கருத்தின் சாராம்சம். இன்னொன்று, முறை [methodology]: அதை அவர் எப்படிச் சொல்லுகிறார் என்பது. இந்த இரண்டையும் ஒருபோதும் குழப்பிக்கொள்ளக் கூடாது.
யோவான் 1:1 இதற்கு நல்ல உதாரணம். யோவான் எழுதுவதற்கு முன்பே மத்தேயுவும் மாற்கும் லூக்காவும் இயேசுவைப் பற்றி எழுதியிருந்தார்கள். யோவானும் இயேசுவைப் பற்றித்தான் எழுதுகிறார். அப்படியிருக்க, “ஆதியிலே வார்த்தை இருந்தது” என்று ஏன் வேறு விதமாகத் தொடங்குகிறார்? “ஆதியிலே இயேசு இருந்தார்” என்று சொல்லியிருந்தால் போதுமே என்ற கேள்வி நமக்கு எழும். அவர் சொல்லும் உள்ளடக்கம் இயேசுவைப் பற்றியதுதான்; அதைச் சொல்ல அவர் பயன்படுத்தும் முறைதான் வேறு. தன்னுடைய வாசகர்களுக்கு ஏற்கனவே தெரிந்த லோகாஸ் [Logos] என்ற கிரேக்கக் கருத்தை அவர் பயன்படுத்துகிறார். அன்றைய கிரேக்கர்களைப் பொறுத்தவரை, லோகாஸ் என்பது உலகம் ஒழுங்காகவும் ஞானமாகவும் செயல்படுவதற்கு அடிப்படையாக இருக்கும் வடிவமைப்பு [underlying design]. அந்த லோகாஸ் இயேசுவே என்று யோவான் சொல்லுகிறார்.
இந்தக் கருத்து நமக்குப் புரியவில்லை என்றாலும் பரவாயில்லை. அது யோவானுடைய வாசகர்களுக்குப் புரியும்படி எழுதப்பட்டது. “இயேசுவைப் பற்றி இவர் என்ன சொல்லுகிறார்?” என்பது நமக்குத் தெரிந்தால் போதும்: இயேசு கடவுள். ஆனால் புரியாத ஒன்றுக்கு நாமாகவே ஒரு புதிய விளக்கத்தைக் கொடுக்கக் கூடாது. உதாரணமாக, “கடவுள் தம்முடைய வார்த்தையினால் எல்லாவற்றையும் படைத்தார்” என்ற கருத்தை எடுத்து, அதை லோகாஸோடும் இயேசுவோடும் இணைக்க முடியாது. எழுதியவர் சொல்லாத ஒன்றை, வேறொரு பகுதியிலிருந்து எடுத்துவந்து, “இதுதான் விளக்கம்” என்று நாமாக ஒரு விளக்கத்தைக் கொடுப்பது சரி அல்ல. இயேசுவை முக்கியத்துவப்படுத்துகிறவர்கள், இயேசுவின் போதனையிலிருந்தே பேசுவார்கள்; வேறொரு இடத்திலிருந்து பேச வேண்டிய அவசியம் இல்லை.
தெரிந்ததிலிருந்து தெரியாததற்கு
இயேசு பயன்படுத்திய, அவருடைய அப்போஸ்தலர்களும் பயன்படுத்திய ஒரு முறை உண்டு: தெரிந்ததிலிருந்து தெரியாததைக் கற்றுக்கொடுப்பது [from the known to the unknown]. கேட்பவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று இருக்கும்; அதிலிருந்து அவர்களுக்குத் தெரியாத ஒன்றைக் கற்றுக்கொடுப்பார்கள். அத்தேனே பட்டணத்தில் பவுல் இதைத்தான் செய்தார். அவர்கள் பல தெய்வங்களுக்குப் பலிபீடங்களை வைத்திருந்தார்கள்; “அறியப்படாத தேவனுக்கு” என்று ஒன்றையும் வைத்திருந்தார்கள். எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்த பவுல், “நீங்கள் மிகுந்த பக்தியுள்ளவர்கள் என்று காண்கிறேன்; நீங்கள் அறியாமல் வழிபடுகிறவரையே உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்று, அவர்களிடம் இருந்த ஒன்றை எடுத்து, இயேசுவை அறிவிக்கத் தொடங்கினார் (அப்போஸ்தலர் 17:22–23). அறியப்படாத தெய்வமும் இயேசுவும் ஒன்றல்ல; ஆனால் அவர்களுக்குத் தெரிந்ததிலிருந்து அவர் தொடங்கினார்.
யோவானும் லோகாஸ் என்ற கருத்தை அறிமுகப்படுத்தும்போது இப்படித்தான் செய்கிறார். அது அவர்களுக்குப் புரிகிறது; “இவையெல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான்” என்கிறார்கள். அதன்பின் யோவான் ஸ்நானனைக் கொண்டுவரும்போது, அடுத்த கட்டத்துக்குச் செல்ல ஒரு பாலம் [transition] அமைக்கப்படுகிறது. “அந்த லோகாஸ் எல்லா மனிதருக்கும் வெளிச்சத்தைக் கொண்டுவர இந்த உலகத்திற்கு வந்தார்” என்று சொல்லும்போது, அது அவர்கள் மனதுக்கு விசித்திரமானதாகத் தோன்றுகிறது; இப்போதுதான் அவர் தன்னுடைய கருத்தைக் கொண்டுவருகிறார். “இதோ, கடவுளுடைய ஆட்டுக்குட்டி” என்று யோவான் ஸ்நானன் சொல்லுவதும் இதே வகையைச் சேர்ந்தது. கேட்பவர்களுக்குத் தெரிந்த ஒன்றோடு ஒரு ஒப்புமையைக் காண்பித்து, அவர்கள் புரிந்துகொள்ளும்படி சொல்லுகிறார்.
ஒப்புமைக்கு ஒரே ஒரு ஒற்றுமை
ஒரு ஒப்புமையையோ [comparison] உவமையையோ சொல்லும்போது, அதில் ஒரே ஒரு ஒற்றுமைதான் [point of comparison] இருக்கும். அந்த ஒரு விதத்தில்தான் அந்த ஒப்புமையைப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு விவரத்தையும் ஒப்பிட்டுக்கொண்டே போனால், ஒப்பிடப்படும் இருவரும் ஒரே நபர்தான் என்ற தவறான முடிவுக்கு வந்துவிடுவோம்; உதாரணமாக, யோவான் ஸ்நானனே எலியா என்று.
“நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்” என்று இயேசு சொல்லுகிறார் (மத்தேயு 5:13). உப்பு வெள்ளையாக இருக்கும்; உப்பு சுவையைக் கூட்டும்; உணவைப் பதப்படுத்தும். ஆனால் இயேசு பேசுவது ஒன்றைப் பற்றி மட்டுமே: உப்புக்கு ஒரு சாரம் உண்டு; அந்தச் சாரம் இல்லாமல் போனால் அது பயனற்றது; வெளியே கொட்டப்பட்டு மனுஷரால் மிதிக்கப்படும். அதுபோல அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கும் ஒரு தன்மை உண்டு: நற்கிரியைகளைச் செய்வது. மற்றவர்கள் அவற்றைக் கண்டு பிதாவை மகிமைப்படுத்த வேண்டும் (மத்தேயு 5:16). நற்கிரியைகள் இல்லையென்றால், நீங்கள் பயனற்றவர்கள். உப்பில் பல ஒற்றுமைகள் நம் கண்ணுக்குத் தெரியலாம்; ஆனால் பேசுகிறவர் ஒன்றைத்தான் விளக்க நினைக்கிறார்.
“சர்ப்பம் உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்” (யோவான் 3:14) என்பதிலும் அப்படியே. அங்கே என்ன சர்ப்பம், எதில் உயர்த்தினார்கள் என்பது முக்கியமல்ல. அது எல்லாருடைய கண்களுக்கும் முன்பாக, எல்லாரும் பார்க்கும்படி உயர்த்தப்பட்டது; அதுதான் ஒற்றுமை. ஒரு நிகழ்வில் பல தகவல்கள் இருக்கும்; தவறான தகவலை ஒற்றுமையாக எடுத்துக்கொண்டால், புதிதாக ஒன்றை நாமே உருவாக்கிவிடுவோம்.
யோவான் ஸ்நானனை எலியாவோடு ஒப்பிடுவதும் இப்படித்தான். எலியா ஒரு சூழ்நிலையில் செய்ததை, இவரும் வேறொரு சூழ்நிலையில் அதே விதமாகச் செய்கிறார்; அதனால்தான் “எலியாவின் ஆவி” இவருக்குள் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. எலியா செய்த அனைத்தையும் இவர் செய்கிறார் என்பது அதன் பொருள் அல்ல. இருவரும் வெவ்வேறு நபர்கள்; இருவருக்கும் ஒரு வேலை கொடுக்கப்பட்டது. ஒருவருக்கு ஒருவர் என்று முழுவதுமாக ஒப்பிட்டால், அவர்களுடைய தனித்தன்மையைக் குறைத்துவிடுகிறோம்; ஒவ்வொருவருக்கும் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுக்கவில்லை என்று பொருள். நாசரேத்து ஜெப ஆலயத்தில் இயேசு ஏசாயாவை வாசித்தபோதும், “ஏசாயாவுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நானும் செய்கிறேன்” என்ற ஒரு ஒற்றுமையைத்தான் காண்பிக்கிறார் (லூக்கா 4:17–21).
ஒற்றுமைகளைத் தேடிக்கொண்டே இருந்தால், யாரிடமிருந்தும் நிறையக் கண்டுபிடிக்கலாம். இல்லாததைக்கூட இருப்பதுபோலப் பார்ப்போம். தானாக நிகழ்ந்த தகவல்களை [coincidental details] ஒன்றோடொன்று இணைத்துவிடுவோம். மூடநம்பிக்கையும் இப்படித்தான் உருவாகிறது. ஒரு கோவிலுக்குப் போய்வந்ததும் எனக்குப் பல காரியங்கள் நடந்தன; ஆகவே அந்தக் கோவில்தான் காரணம் என்கிறோம். நேர்முகத் தேர்வுக்குப் போகும் வழியில் ஒரு கருப்புப் பூனை குறுக்கே பாய்ந்தது; தேர்வில் நான் சரியாகச் செய்யவில்லை; உடனே, அந்தப் பூனைதான் காரணம் என்கிறோம். தொடர்பில்லாதவற்றை ஒன்றாகச் சேர்ப்பதுதான் மூடநம்பிக்கை. நபர்களையும் இப்படி ஒப்பிட்டுக்கொண்டே போகக் கூடாது. இன்று இயேசுவைப் பலர் ஈசாக்கோடும் யோசேப்போடும் ஒப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒற்றுமையான தகவல்கள் நிறையவே கிடைக்கும்; ஆனால் அப்போது எழுதியவர் சொல்ல வந்த கருத்தை நாம் தவறவிட்டுவிடுகிறோம்.
ஒப்புமை நமக்குப் புரியவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டியதில்லை. எழுதியவர் ஒப்புமையோடு நின்றுவிடுவதில்லை; அதன்பின் அதை விளக்கவும் செய்வார். ஏசாயா 5-இல், கடவுளுக்கு மகா செழிப்பான மேட்டில் ஒரு திராட்சத்தோட்டம் இருந்தது; அவர் கற்களைப் பொறுக்கிப்போட்டு நல்ல திராட்சச்செடிகளை நட்டார். அன்று திராட்சத்தோட்டங்களை மலைச்சரிவுகளில் வைத்திருந்தார்கள், பழங்களை மிதித்துப் பதப்படுத்தினார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரிந்தால் நல்லது; தெரியாவிட்டாலும் பிரச்சினை இல்லை. சற்று வாசித்தால், அவரே விளக்கிவிடுகிறார்: அந்தத் தோட்டம் இஸ்ரவேல் வம்சம்; நல்ல பழங்களைத் தரும் என்று காத்திருந்தார், அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது (ஏசாயா 5:1–7). ஆகவே, கலாச்சாரமோ வரலாறோ நமக்குத் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. விளக்கம் வந்தவுடன் எல்லாம் புரிந்துவிடும். புரியாத ஒப்புமையை நாமாக எதையாவது வைத்து ஜோடிக்கக் கூடாது.
சூழலே ராஜா
எப்போதும் சூழலே ராஜா [context is king]. ஒரே சொல்லுக்குப் பல இடங்களில் பல பொருள்கள் இருக்கலாம். இந்தச் சூழ்நிலையில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதுதான் நமக்கு முக்கியம். சூழலை மீறவோ தாண்டவோ கூடாது. ஒரு சொல்லுக்குப் பொருளைக் கொடுப்பது அதன் சூழல்தான்: முன்னும் பின்னும் உள்ள சொற்கள், சொற்றொடர்கள், வாக்கியங்கள் எல்லாம் சேர்ந்துதான் அதன் பொருள்.
ஆகவே சொற்களைவிடச் சூழல் முக்கியமானது. தமிழ் மொழிபெயர்ப்பில் ஒரே கருத்துக்குச் சில இடங்களில் “பூரணம்”, சில இடங்களில் “பரிபூரணம்”, சில இடங்களில் “சம்பூரணம்” என்று இருக்கிறது. ஏன் வெவ்வேறு சொற்கள்? நல்ல எழுத்தில், ஒரே சொல்லைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்ல ஒழுங்கு; ஆங்கிலத்திலும் அப்படியே. ஆனால் அதனால் கருத்தில் வேற்றுமை இருக்கிறதா? நிச்சயமாக இல்லை.
சூழல் என்பது ஒரு வசனமோ ஒரு அதிகாரமோ மட்டுமல்ல. அதிகாரப் பிரிவுகளும் வசனப் பிரிவுகளும் நமக்கு இருக்கின்றன; ஆனால் அந்த முழுப் புத்தகமும்தான் அதன் சூழல். உதாரணமாக, யோவானின் முதலாம் நிருபத்தின் ஐந்தாம் அதிகாரத்தை மட்டும் தனியாகப் பார்க்கக் கூடாது. அந்த நிருபத்தில் யோவான் முக்கியமாகப் பேசுவது கள்ளக் கிறிஸ்துக்களைப் பற்றி. நமக்குள்ளிருந்தே எழுந்தவர்கள், இயேசுவை அறிந்தவர்கள், ஆனால் இயேசுவை வேறு விதமாகக் காண்பிக்கிறவர்கள்; அவர்களால் வருவதையே அவர் பாவம் என்று பேசுகிறார். அந்தச் சூழலில்தான் அவர் இப்படி எழுதுகிறார்:
மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்யக்கண்டானானால், அவன் வேண்டுதல் செய்யக்கடவன், அவனுக்கு அவர் ஜீவனைக் கொடுப்பார்; மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கு அப்படிச் செய்வார். மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல் செய்ய நான் சொல்லேன். (1 யோவான் 5:16)
ஆகவே, “மரணத்திற்கு ஏதுவான பாவம்” என்பதற்கு நாமாகவே ஒரு விளக்கத்தைக் கொடுக்கக் கூடாது. இயேசுவின் போதனைகளை மாற்றிக் கற்றுக்கொடுத்து, அவற்றைச் சரியாகப் பின்பற்றுகிறவர்களுக்கும் சரியாகக் கற்றுக்கொடுக்கிறவர்களுக்கும் எதிராக நின்று, அவர்களுக்கு வேதனையும் உபத்திரவமும் கொடுப்பதையே மரணத்திற்கு ஏதுவான பாவம் என்று அவர் குறிப்பிடுகிறார்.
சூழ்நிலையை ஆய்வுசெய்வதில் நேர்மையும் வேண்டும். ஒரு பகுதியில் ஒரு வசனத்தை நேரடிப் பொருளில் [literal] எடுத்துக்கொண்டால், அதற்கு அடுத்ததையும் நேரடிப் பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒன்றை உருவகமாக [metaphorical] எடுத்துக்கொண்டால், அந்தப் பகுதியில் உள்ள அனைத்தையும் அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும். “என் பிதாவின் ராஜ்யத்திலே நான் உங்களோடேகூட இதைப் புதிதாய்ப் பானம்பண்ணும் நாள்வரைக்கும்” என்று இயேசு சொன்னதை நேரடிப் பொருளில் எடுத்தால் (மத்தேயு 26:29), அவர் சீஷர்கள் வரும்வரை காத்திருந்து, ஒருநாள் அவர்களோடு உட்கார்ந்து திராட்சரசம் குடிப்பார் என்றாகிவிடும்; அது அர்த்தமற்றது. அப்படியானால், அதற்கு முந்தைய வசனத்தையும் அதே விதத்தில்தான் வாசிக்க வேண்டும்:
இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. (மத்தேயு 26:28)
நிகழ்வுக்குத் தேவையானவையும் கருத்துக்குத் தேவையானவையும்
ஒரு நிகழ்வைச் சொல்லுவதைக் கதை என்று சொல்லுவதுண்டு. கதை என்றால் பொய் என்று பொருள் அல்ல; நடந்ததை மீண்டும் சொல்லுவதும் கதைதான். ஒரு இடத்துக்கு நீங்கள் போனீர்கள்; அங்கே நடந்ததைச் சொல்லுகிறீர்கள். அப்போது, “இந்த நேரத்தில் நான் அங்கே போனேன், அவர்கள் இப்படி வந்தார்கள்” என்று பல தகவல்களைச் சொல்லுவீர்கள். அவை அந்தக் கதையைச் சொல்லுவதற்குத் தேவையான தகவல்கள்; ஆனால் சொல்லப்படும் கருத்துக்குத் தேவையானவை அல்ல. இவற்றை நிகழ்வுசார் தகவல்கள் [incidental details] என்று சொல்லுவதுண்டு. ஒரு கதையின் மூலமாக ஒரு கருத்து சொல்லப்படுகிறது; அதுதான் அவசியமான தகவல் [essential detail]; அதுதான் பொருளுள்ளது; அதைத்தான் எழுதியவர் சொல்ல நினைக்கிறார்.
கானாவில் தண்ணீர் திராட்சரசமான நிகழ்வை யோவான் முடிக்கும்போதே, ஒரு கருத்தறிக்கையை [thesis statement] வைக்கிறார்; இதனால் பயன்பெற்றவர்கள் யார் என்று தெளிவாகச் சொல்லிவிடுகிறார்: “அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்” (யோவான் 2:11). ஆகவே, மேசியாவைவிடத் தாம் மேலானவர் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குக் காண்பிக்க இயேசு செய்த செயலாகவே இதைப் பார்க்கப் பழக வேண்டும். தண்ணீர் எப்போது திராட்சரசமானது? கற்சாடிகளில் ஊற்றும்போதா, எடுக்கும்போதா, கொண்டுபோகும்போதா, குடிக்கும்போதா? நிறம் எப்படி இருந்தது? அந்தச் சாடிகள் கை கழுவுவதற்கு வைத்தவையா? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு அங்கே இடமே இல்லை. அவருக்கு முக்கியமானது, தண்ணீர் திராட்சரசமாக மாறியது; அதனால் சீஷர்கள் அவருடைய மகிமையைக் கண்டு அவரை விசுவாசிக்கத் தொடங்கினார்கள் என்பதுதான். இன்றோ இந்த நிகழ்வுசார் தகவல்களை வைத்துத்தான் கதையே பேசுகிறோம்; இவற்றை வைத்துத்தான் ஒரு மணி நேரப் பிரசங்கமே ஓடுகிறது. யூகங்களுக்கு அங்கே இடமில்லை.
இலக்கியத்தைப் பொறுத்தவரை ஒரு தத்துவம் உண்டு: ஒரு நூல் எழுதி முடிக்கப்பட்டதும் எழுதியவருடைய வேலை முடிந்துவிட்டது; அதன்பின் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதன்படி, ஒவ்வொருவரும் தன்னுடைய கற்பனைத் திறனை வைத்து அதற்கு விளக்கம் [interpretation] சொல்லுவார்கள். ராபர்ட் ஃப்ராஸ்ட் [Robert Frost] எழுதிய “Mending Wall” என்ற கவிதை இதற்கு ஒரு உதாரணம். இரண்டு பக்கத்து வீட்டுக்காரர்கள்; நடுவில் ஒரு மதில்சுவர். அது தானாக இடிந்து விழுகிறது; விழுந்த கற்களை இருவரும் எடுத்து மீண்டும் அடுக்கிக் கட்டுகிறார்கள். அதுதான் அந்தக் கவிதை. அதை விமர்சன ரீதியாக [critical analysis] எப்படி ஆராய்வது என்று இலக்கியம் படித்த ஒருவர் என்னிடம் கேட்டபோது, ஐந்தாறு கருத்துகளைச் சொன்னேன்: அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கலாம், சமூகக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம். ஐந்தையுமே அந்தக் கவிதையிலிருந்து நியாயப்படுத்தலாம். ஒரு பகுதியில் பல தகவல்கள் இருக்கும்; நம் சிந்தனையாற்றலையும் படைப்பாற்றலையும் [creativity] வைத்து அவற்றைப் பல விதங்களில் இணைக்க முடியும். ஆகவேதான் ஒரு தகவலை மட்டும் பார்க்காமல், முழுவதையும் பார்க்க வேண்டும். “இதைச் சொல்லத்தான் இதை எழுதினேன்” என்று எழுதியவர் என்ன சொல்லுகிறாரோ, அதுதான் முக்கியம்.
படைப்பாற்றலைக் காண்பிக்கப் பல இடங்கள் உண்டு: ஒரு கதை எழுதலாம், ஒரு திரைப்படம் எடுக்கலாம், ஒரு கவிதை எழுதலாம். பரிசுத்த வேதாகமத்தில் மட்டும் அதைக் காண்பிக்க முடியாது. வேறு ஒருவர் எழுதிய கவிதைக்கு நம் இஷ்டத்துக்கு எதையாவது பேசினாலும், அவர் உயிரோடு இருந்தால், “நான் அப்படிச் சொல்லவே இல்லை; நீ என்ன புதிதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாய்?” என்று சண்டைக்கு வந்துவிடுவார். ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கருத்து உள்ள ஒன்றுக்கு, உதாரணமாகத் திருக்குறளின் ஏழு சீர்களுக்கு, “இது உண்மையில் இப்படித்தான் இருந்தது” என்று நான் ஒரு புதிய பொருளைக் கொண்டுவந்தால், அது ஏற்றுக்கொள்ளப்படாது.
பல நேரங்களில் எழுதியவர்களே தங்கள் கருத்தைச் சொல்லிவிடுவார்கள்; அதைக் கவனிக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு அனுபவம். ஒருமுறை ஒருவருடைய பிரசங்கத்தை நான் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தேன். உப்பு தண்ணீரிலிருந்து வருகிறது; தண்ணீர்தான் மக்கள்; அவர்கள் சேர்க்கப்படும் உப்பளம்தான் சபை; அங்கிருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்கள் வெள்ளையாக இருக்கிறீர்கள் என்று அவர் பேசிக்கொண்டே போனார். எனக்குப் பிடிக்கவே இல்லை; ஆனாலும் மொழிபெயர்த்தே ஆக வேண்டும்; பிரசங்கத்தை நான் புதிதாகச் செய்ய முடியாது. ஆனால் உப்புக்கு இயேசுவே விளக்கம் கொடுத்திருக்கிறார் என்பதை மேலே பார்த்தோம். ஆகவே, சற்றுக் காத்திருந்து, எழுதியவர் அதன்பின் விளக்கம் கொடுக்கிறாரா என்று பார்க்கவேண்டும்.
முதலில் கவனிப்பு, பின்னர் விளக்கம்
எழுதியவர் என்ன சொல்லுகிறார் என்பதைக் கவனிப்பதே [observation] முதல் படி. எழுதியவர் சொல்லுவதை விட்டுவிட்டால், கவனிப்பின் அடிப்படையே [observation 101] போய்விட்டது. கானாவில் கவனிக்க வேண்டியது இதுதான்: அங்கே அற்புதம் நடந்தது யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தனியாக வைக்கப்பட்டிருக்கிறது; இயேசுவின் தாயார் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்; வேலைக்காரர்களுக்கும் என்ன நடக்கிறது என்று தெரியாது. சீஷர்களும் இயேசுவும் மட்டுமே எல்லாவற்றுக்கும் சாட்சிகள். இதுதான் கவனிப்பு.
அதன்பின் வருவது விளக்கம் [interpretation]: இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன? எழுதியவர் சொல்ல நினைப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இருக்கிற தகவலை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்; அந்தத் தகவலின் பொருளை முடிவில்தான் கொண்டுவரவேண்டும். விளக்கத்துக்கு வரும்போதும், எழுதியவர் அதை எப்படி விளக்குகிறார் என்பதே அடிப்படை. பவுலின் நிருபம் போன்ற ஒரு வாதத்தில் [argument], ஒவ்வொரு வாக்கியத்திலும் அவர் என்ன சொல்லுகிறார், முதலில் எந்த வாதத்தைக் கொண்டுவருகிறார், முடிவில் என்ன சொல்ல வருகிறார் என்று கவனிக்கவேண்டும். ஒரு நிகழ்வில், நடந்த தகவல்களைச் சேகரிக்கவேண்டும்; “இவையெல்லாம் நடந்திருக்கின்றன” என்று சொல்லலாம். அந்தத் தகவல்களுக்குப் பொருள் கொடுப்பது எழுதியவர்தான்.
தகவல் இல்லாத இடத்தில் யூகம் இல்லை
தகவல் இல்லாத இடத்தில் யூகமும் இல்லை [no data, no assumption]. இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது, “இவர் என்னுடைய நேசகுமாரன்” என்ற சத்தம் எல்லாருக்கும் கேட்டதா? கேட்டிருந்தால், அது ஒரு பெரிய பொது நிகழ்வாக இருந்திருக்குமே; மக்களும் மதவாதிகளும் அவரைச் சாதாரண மனிதராக நினைக்க முடியாமல் அவரைப் பின்பற்றியிருப்பார்களே என்ற கேள்விகள் எழுகின்றன. இன்னொரு இடத்தில், ஒரு சத்தம் வந்தபோது, ஒருவர் “தேவதூதன் அவரோடே பேசினான்” என்கிறார்; இன்னொருவர் “இடிமுழக்கம் உண்டாயிற்று” என்கிறார் (யோவான் 12:29). ஒரு சாதாரண நிகழ்வைச் சிலர் அசாதாரணமாகப் பார்த்தார்களா, அல்லது ஒரு அசாதாரண நிகழ்வு மற்றவர்களுக்குச் சாதாரணமாகக் கேட்டதா? இதற்குப் போதுமான தகவல் நமக்கு இல்லை. ஒருவேளை யோவான் ஸ்நானனுக்கு மட்டும் அது புரிந்திருக்கலாம் என்று யூகிக்கலாம்; அதற்கு மேல் போக முடியாது. யூகங்களையும் சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
எழுதியவர்களே பதில் தராத கேள்விகளுக்குப் பதில் கேட்பது அர்த்தமற்றது. அப்போது “தெரியவில்லை” என்றுதான் சொல்ல வேண்டும். அந்தத் தகவல்கள் முக்கியமானவையாக இருந்திருந்தால், அவர்கள் அவற்றை முக்கியப்படுத்தி, கூடுதல் தகவல்களைத் தந்திருப்பார்கள். தன்னுடைய வாசகர்களுக்கு எதைத் தர வேண்டும் என்று எழுதியவர் நினைக்கிறாரோ, அதை அவர் விளக்குவார். அவருக்கு முக்கியமாகத் தோன்றாதவற்றுக்கு அவர் விளக்கம் தர மாட்டார். ஆகவே, அவர் விளக்காததை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை; அதற்கு அவர் முக்கியத்துவமும் கொடுக்கவில்லை என்பதோடு நாம் நிறுத்திக்கொள்வதுதான் சிறப்பு.
ஒவ்வொரு பகுதியையும் வாசிக்கும்போது இன்னொரு கேள்வியையும் கேட்க வேண்டும்: இதன் நோக்கம் என்ன? வெறும் அறிவா, அல்லது நாம் கற்றுக்கொள்வதா? கடவுளை நான் புரிந்துகொள்ள இது உதவுகிறதா? என் செயல்களும் தீர்மானங்களும் சரியானவையாக இருக்க உதவுகிறதா? உலகத்தை நான் பார்க்கும் பார்வை மாற உதவுகிறதா? இவைதான் இறையியல் [theology], கோட்பாடுகள் [principles], கண்ணோட்டம் [perspective] என்ற மூன்று காரியங்கள்.
எழுதியவர்கள் தங்கள் நூல்களில் எவற்றைச் சேர்க்க வேண்டும், எவற்றைச் சேர்க்க வேண்டாம் என்று தேர்ந்தெடுத்தார்கள்; சிலவற்றைத் தங்கள் பாணியில் கொண்டுவந்தார்கள். ஆகவே, “இந்தப் பகுதி ஏன் இங்கே இடம்பெறுகிறது?” என்ற கேள்வியையும் நாம் எப்போதும் கேட்க வேண்டும்.
வெளிச் சான்றுகள் தேவையில்லை
“யூதர்கள் சமாரியர்களிடம் தண்ணீர் வாங்கிக் குடிப்பது பன்றி இரத்தம் குடிப்பதற்குச் சமம் என்று ஒரு கட்டுப்பாடு வைத்திருந்தார்களாம்” என்று ஒரு ஆசிரியர் சொல்லக் கேட்டதாக ஒருவர் சொன்னார். அது நமக்குத் தெரியாது. கலாச்சார ரீதியாகப் பிறர் சொல்வதை உண்மை என்று ஏற்றுக்கொள்வது கடினம் என்றுதான் நான் கருதுகிறேன். காரணம், அதைச் சரிபார்க்க முடியாது [unverifiable]. அன்று வாழ்ந்த ஒரு வரலாற்று ஆசிரியர் அப்படி எழுதியிருந்தால், “அந்தக் காலத்தில் இப்படி இருந்திருக்கிறது போலும்” என்று சொல்லலாம். இன்று சொல்லப்படுவதை வைத்து அப்படிச் சொல்ல முடியாது.
எதற்கும் ஒரு கதையைக் கட்டிவிடலாம். “‘பெண் புத்தி’ என்றால் என்ன தெரியுமா? பெண்கள் பின்னால் நடக்கப்போவதை முன்பே யோசித்துச் சொல்வார்கள் என்பதுதான் அதன் பொருள்” என்று ஒருவர் சொல்கிறார். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. “எலுமிச்சம்பழத்தை ஏன் வைக்கிறார்கள் தெரியுமா? இதை ஏன் தொங்கவிடுகிறார்கள் தெரியுமா? அந்தக் காலத்தில் இப்படி இருந்தது.” யார் வேண்டுமானாலும் எந்தக் கதையையும் சொல்லலாம். அந்தக் கதை நமக்குச் சாதகமாகக் கேட்கும். ஆனால் அன்று எழுதியவர்களும் பேசியவர்களும் எதை மனதில் வைத்துப் பேசினார்கள் என்பது நமக்குத் தெரியாது. இது மற்ற மார்க்கங்களில் மட்டும் நடப்பதல்ல; கிறிஸ்தவத்தில் இது இன்னும் கேவலமாக நடக்கிறது: “பரிசுத்த வேதாகமத்தில் வருகிறவர்களின் சூழ்நிலை இப்படி இருந்தது தெரியுமா?” நீங்கள் சொல்வதால் நான் நம்பிவிட முடியுமா? அதற்கு என்ன அத்தாட்சி, என்ன சான்று இருக்கிறது என்று கேட்க வேண்டும். ஆகவே போதனைகளிலும் வகுப்புகளிலும், வெளியிலிருந்து கலாச்சாரத்தைக் கொண்டுவருவதைத் தவிர்க்க வேண்டும்.
சமாரியர்களுக்கும் யூதர்களுக்கும் பகைமை இருந்தது, பெரும்பான்மையினர் சிறுபான்மையினரைக் குறைவாகப் பார்த்தார்கள் என்பதெல்லாம் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள வரலாற்றிலிருந்தே நமக்குத் தெரிகிறது. உள்ளே இருப்பதை வைத்து அடித்துச் சொல்லலாம். வெளியே இருப்பதை எப்படிச் சொல்ல முடியும்? ஒருவர் இப்படிச் சொல்வார், இன்னொருவர் வேறு மாதிரி சொல்வார்; நமக்கு ஏற்ற கதைகளைக் கட்டிக்கொண்டே இருப்போம். அன்றைய வரலாற்று ஆசிரியர் எழுதியதோ, ஒரு வரலாற்றுத் துணுக்கோ கிடைத்தாலும்கூட, பரிசுத்த வேதாகமத்தைப் புரிந்துகொள்ள அவை தேவையில்லை.
அகழ்வாராய்ச்சிச் சான்று [archaeological evidence] இருக்கிறதா, வரலாற்று ஆசிரியர் எழுதியிருக்கிறாரா என்று ஒவ்வொன்றாகத் தேடி, கண்டெடுக்கப்பட்ட பிறகுதான் இவை உண்மை என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த எழுத்துகளும் அவற்றில் உள்ள தகவல்களும் உண்மையானவை என்று புரிந்துகொண்ட பிறகு, அவை உண்மை என்று கண்டறிய வேறு எதுவும் தேவையில்லை. “பேழையைக் கண்டுபிடித்தோம், கோலியாத்தின் மண்டையோட்டைக் கண்டுபிடித்தோம்” என்று நம் ஆட்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவற்றைக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை; இவை நம்மை முட்டாள்களாக மாற்றுகின்றன. “எதை வைத்துச் சொல்கிறீர்கள்? இது சரிபார்க்கக்கூடிய உண்மை [verifiable fact] என்றால் அத்தாட்சிகளைக் கொடுங்கள்” என்று ஒருவர் கேட்டால், நாம் தலைகுனிந்து நிற்க வேண்டியிருக்கும். அப்படி யாரும் கேட்பதில்லை. கிறிஸ்தவம் மூடநம்பிக்கை உடையதாக மாறிவிட்டதால், பிரசங்க மேடையிலிருந்து எதைச் சொன்னாலும் கேட்கப்படும் என்று தைரியமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அப்படிச் செய்யக் கூடாது; சான்று இருக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை வெளிச் சான்றுகள் [external evidence] தேவையே இல்லை. பரிசுத்த வேதாகமத்தைப் புரிந்துகொள்ள உள்ளே இருக்கும் தகவல்கள் தாராளமாகப் போதுமானவை. அகழ்வாராய்ச்சி, வரலாறு, கலாச்சாரம் பற்றிய வரலாற்றுத் துணுக்குகள் அடங்கிய தரமான புத்தகங்கள் என்னிடம் இருக்கின்றன; அவற்றைக்கூட நான் வாசிப்பதில்லை. ஒரு புத்தகத்தை நான் எழுதினால், அதில் நான் சொல்ல வரும் தகவல்களை அந்தப் புத்தகத்தை வைத்தே யாரும் புரிந்துகொள்ள முடிய வேண்டும்; அப்போதுதான் நான் நல்ல ஆசிரியர். என் வகுப்பில் நான் நடத்துவதை இன்னொருவர் கொடுக்கும் விளக்கத்தை வைத்துத்தான் புரிந்துகொள்ள முடியும் என்றால், நான் சரியாகக் கற்றுக்கொடுக்கவில்லை என்றுதான் பொருள். பரிசுத்த வேதாகமத்தை எழுதியவர்கள் நல்ல அறிவாற்றல் உடையவர்கள்; சொல்ல நினைத்ததைத் தெளிவாக, புரியக்கூடிய வகையில் சொல்லிவிட்டார்கள். சூழலையும் அங்குள்ள தகவல்களையும் வைத்தும் புரிந்துகொள்ள மிகக் கடினமான பகுதிகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுதான். அவையும் அத்தியாவசியமானவை அல்ல. அவற்றை நிரூபித்துக்கொண்டிருப்பதைவிட, உள்ளே இருக்கும் தகவல்களை எடுத்துக்கொண்டால் போதுமானது.
ஒரு வசனமும் நூறு வசனங்களும்
ஒரு விஷயத்தை நூறு பகுதிகள் ஒரே விதமாகச் சொல்லுகின்றன; ஒரே ஒரு பகுதி மட்டும் வேறு விதமாகச் சொல்லுவதுபோலத் தோன்றுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது கேட்க வேண்டிய கேள்வி: “இந்த நூறு சரியா, அந்த ஒன்று சரியா?” தனித்துத் தெரியும் அந்த ஒரு பகுதியை நூறு பகுதிகளின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டுமே தவிர, அந்த ஒரு பகுதியின் கண்ணோட்டத்தில் நூறையும் பார்க்க முடியாது; அது அநியாயமாகிவிடும். “இயேசு இப்படிச் சொல்லியிருக்க, இங்கே ஒரு இடத்தில் இப்படி இருக்கிறதே; இதை எப்படி ஒன்றிணைப்பது?” என்பதுதான் நம் கேள்வியாக இருக்க வேண்டும். இயேசு கற்றுக்கொடுத்த முழுப் போதனையை வைத்தே எங்கோ உள்ள ஒன்றைப் பார்க்க வேண்டும்.
இந்த வழிமுறைகள் எல்லாம் ஒரே நோக்கத்துக்காகத்தான்: எழுதியவர் சொல்ல வந்ததை அவர் சொன்னபடியே புரிந்துகொள்வது. அவர் சொல்லாததை அவர்மேல் சுமத்தாமல், அவர் சொன்னதைக் குறைக்காமல், அவர் யாருக்கு எழுதினாரோ அவர்கள் புரிந்துகொண்டதுபோலப் புரிந்துகொள்வதுதான் உண்மையை மதிப்பது.