ஒரே படைப்பாளர்; எல்லா உயிரும் அவர் கையில்
பல கடவுள்களின் உலகம்
யோவான் எழுதிய காலத்தில் கிரேக்கர்களின் கடவுள் பட்டியலில் நிறையக் கடவுள்கள் இருந்தார்கள். கடலுக்கு ஒரு கடவுள், மின்னலுக்கு ஒரு கடவுள் என்று உலகத்தில் வெவ்வேறு காரியங்களை வெவ்வேறு கடவுள்கள் உருவாக்கியதாக அவர்கள் நம்பினார்கள். லோகாஸ் [Logos] அவர்களில் ஒருவர். உலகம் சீராகச் செயல்படுவதற்குக் காரணமான முக்கியமான கடவுளாக இருக்கலாம்; ஆனால் லோகாஸ் மட்டுமே கடவுள் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை.
இது கிரேக்கர்களுக்கு மட்டும் உரியது அல்ல. பல மார்க்கங்களில் இருக்கும் கருத்து. அன்றைய முக்கியமான நாகரிகங்கள் மெசொப்பொத்தாமியா, சுமேரியா, எகிப்து. வடக்கே டைகிரிஸ், யூப்ரடீஸ் நதிகளின் பகுதி; தெற்கே நைல் நதியின் எகிப்து. இவற்றுக்கு இடையில்தான் பெரும்பாலான நாகரிகங்கள் இருந்தன. அங்கே வெவ்வேறு காரியங்களுக்கு வெவ்வேறு கடவுள்கள் இருந்தார்கள். அந்தக் கடவுள்கள் ஒரு ஏணியைப் போல இருந்தார்கள்: மேலே ஒருவர், அதற்கு அடுத்து ஒருவர் என்று வெவ்வேறு நிலைகளில்.
புதிய கலாச்சாரங்களும் புதிய ராஜ்யங்களும் உருவாகும்போது, அவற்றில் சில மாற்றங்கள் [variations] ஏற்பட்டன. கிரேக்கர்கள் கொஞ்சம் வேறு விதமாக எழுதினார்கள்; ரோமர்கள் கொஞ்சம் வேறு விதமாக எடுத்துக்கொண்டார்கள். இந்தியாவில் இருக்கும் நம்பிக்கைகளும் இப்படிக் கிளைகளாக வந்தவையே. படைக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் என்ற மூன்று கடவுள் கருத்தும் தனித்தன்மை வாய்ந்தது அல்ல; ஏற்கெனவே இருந்தவற்றிலிருந்து ஆரியர்கள் கொண்டுவந்தது. ஆகவே இவை ஒவ்வொன்றும் தனியாக உருவானவை அல்ல. ஒரே மூலத்திலிருந்து சற்று மாற்றங்களோடு கிளைகளாகப் பிரிந்தவை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அதைப் புரிந்துகொண்டார்கள்.
லோகாஸைத் தவிர வேறு கடவுள் இல்லை
இந்தப் பின்னணியில் யோவான் சொல்வதைக் கவனிக்க வேண்டும். லோகாஸ் ஆதியிலே இருந்தார், கடவுளிடத்தில் இருந்தார், கடவுளாகவே இருந்தார் என்று சொன்ன பிறகு இப்படிச் சொல்கிறார்:
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. (யோவான் 1:3)
நீங்கள் பார்க்கும் அனைத்தையும் லோகாஸ்தான் உண்டாக்கினார். அப்படியானால் லோகாஸைத் தவிர வேறு கடவுளே இல்லை. கிரேக்கர்கள் வாசிக்கும்போது இப்படி உணர்ந்திருப்பார்கள்: “நாங்கள் சொல்லும் லோகாஸ் ஒரு சக்தி; நிறையக் கடவுள்களில் அவரும் ஒருவர். இவர் சொல்லும் லோகாஸ் வேறு. இவர் சொல்லும் லோகாஸ்தான் கடவுள். அவர் சக்தி அல்ல, நபர். உலகத்தில் உண்டான அனைத்துக்கும் அவர்தான் காரணம்.” யோவான் அவர்கள் பயன்படுத்தும் அதே பெயரைப் பயன்படுத்துகிறார். ஆனால் தாம் சொல்லும் லோகாஸுக்கு நிகரானது எதுவுமே இல்லாத அளவுக்கு அவரை உயர்த்துகிறார். லோகாஸ் என்ற பெயரை யோவான் எவ்வளவு சாதுரியமாகப் பயன்படுத்துகிறார் என்பதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
எல்லா உயிரும் அவர் கையில்
அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. (யோவான் 1:4)
இது மிக அழகான இறையியல். அவர் ஒரு நபர்; ஆகவே “ஜீவன் இருந்தது” என்று பொதுவாகச் சொல்லாமல், “அவருக்குள் ஜீவன் இருந்தது” என்கிறார். “எனக்கு உயிர் இருக்கிறது” என்று நான் சொல்லும் பொருளில் அவர் இதைச் சொல்லவில்லை. அவர் உயிரோடு இருக்கிறார் என்பது இங்கே கருத்து அல்ல. உலகத்தில் உயிரோடு இருக்கும் அனைத்துக்கும் உயிர் கொடுத்தவர் அவரே. உயிர் என்ற ஒன்றே அவர் கையில் இருக்கிறது. அவர் கொடுத்தால்தான் உயிர்; அவர் கொடுக்கவில்லை என்றால் உயிர் இல்லை.
ஆகவே யோவான் படிப்படியாகக் கடவுளை உயர்த்துகிறார்: கடவுள் ஒருவரே; அவர் சக்தி அல்ல, நபர்; உலகத்தை உண்டாக்கியவர் அவர்; மனிதர்களை உண்டாக்கியவரும் அவர்; மனிதர்கள் மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும் உயிர் கொடுத்தவரும் அவரே. இதுவரை யோவான் இயேசுவின் பெயரைச் சொல்லவில்லை. இருப்பினும் இது உயர்ந்த இறையியல்.
இருளும் ஒளியும்
அவர் உயிர் கொடுத்தது மட்டுமல்ல; அந்த ஜீவன் மனிதர்களுக்கு ஒளியாகவும் இருந்தது. இதற்கு ஒரு காரணம் உண்டு. மிருகங்கள் படைக்கப்பட்ட நாள்முதல் ஒரே விதமாகத்தான் வாழ்கின்றன. பிறக்கின்றன, சாப்பிடுகின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன, இறந்து போகின்றன. அந்தச் சுழற்சியில் பெரிய மாற்றம் இல்லை. அவற்றுக்கு உரிய சந்தோஷம் குறைந்துபோகவில்லை.
மனிதர்களின் நிலைமை அப்படி இல்லை. சமுதாயம் மாறுகிறது, சூழல்கள் மாறுகின்றன. வெவ்வேறு கலாச்சாரங்களும் சமுதாயங்களும் உருவாகும்போது, தன்னலமான மனிதர்கள் உருவாகும்போது, மனிதர்களின் செயல்களால் மனிதர்களுக்குத் துன்பம் ஏற்படுகிறது. பரிசுத்த வேதாகமத்தின்படி மனிதர்கள் உண்டாக்கப்பட்டதே அவர்கள் நலமாகவும் சந்தோஷமாகவும் இருப்பதற்காகத்தான். அது இல்லாமல் போன நிலையைத்தான் யோவான் இருள் என்கிறார். மனிதர்களின் வாழ்க்கைக்கு இருக்க வேண்டிய மகிமை மங்கிப்போயிருக்கிறது. அந்த இருண்ட நிலையில் அவர் ஒளியைக் கொண்டுவருகிறார். மனுக்குலத்துக்கே அவர் ஒளியாக இருக்கிறார்.
தீமைக்குக் காரணம் மனிதர்கள்தான். என்னுடைய செயலைத் தீய செயல் என்று எப்படிச் சொல்வது? அது பிறருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்போது. என் தீய செயல் மற்றவர்களுக்குத் தீமையாக மாறுகிறது, இருளாக மாறுகிறது. அவரால் கொடுக்கப்படும் நன்மைதான் ஒளி. அந்த நன்மை, இன்று தீமையால் பாதிக்கப்பட்டிருக்கும் மனுக்குலத்தை அந்தத் தீமையிலிருந்து விடுவிக்கிறது.
சமமான இரண்டு சக்திகள் இல்லை
அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. (யோவான் 1:5)
பல மார்க்கங்களில் நன்மை செய்யும் ஒரு சக்தியும் தீமை செய்யும் ஒரு சக்தியும் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. ஒளி ஒன்று, இருள் ஒன்று. இரண்டும் சமமான வலிமையும் ஒரே விதமான திறனும் கொண்டவை. ஆகவே அவற்றுக்கு இடையில் போர் நடக்கிறது. அந்தப் போர் நீண்ட நாள் நீடிக்கிறது; அதனால் பலர் பாதிக்கப்படுகிறார்கள். துரதிருஷ்டவசமாகக் கிறிஸ்தவத்திலும் இது நடக்கிறது: கடவுள் ஒருபுறம், சாத்தான் மறுபுறம், இரண்டும் சமமான சக்திகள் என்று.
யோவானோ, இருள் அந்த ஒளியைப் பற்றிக்கொள்ள முடியவில்லை என்கிறார். அதாவது, இருளைவிட ஒளி பெரியது. அவருடைய வீரியமும் வலிமையும் இருளைவிட அதிகம். ஒளி வர வர இருள் போய்விடும். ஒளி இருளை அகலச் செய்கிறதே தவிர, இருள் ஒளியைப் போக்கடிக்க முடியாது. நன்மை செய்யும் அவருடைய தன்மை உயர்ந்தது. தீமைக்கு அப்படி ஒரு தன்மையே இல்லை; அது குறைந்த ஒன்று. ஆகவே இரண்டு சமமான சக்திகள் சண்டை போடுகின்றன என்ற பேச்சுக்கு இடமில்லை. அவருடைய நன்மைக்கு முன்பாக எதுவுமே நிற்க வாய்ப்பில்லை. அவர் ஒருவரே வல்லமை உடையவர், அவர் ஒருவரே கடவுள், அவர் ஒருவரே எல்லாருக்கும் ஜீவன் கொடுத்தவர், அவர் ஒருவரே மனுக்குலத்துக்கு நன்மை செய்கிறவர், அவர் ஒருவரே மனுக்குலத்துக்கு ஒளியைக் கொண்டுவருகிறவர்.
ஆகவே “எதிர்வல்லமைகள்” என்று பேசுவதை நிறுத்த வேண்டும். கடவுளுக்கு எதிர்வல்லமையே இல்லை. கடவுளுக்கு எதிராக நிற்கக்கூடியவர்கள் மனிதர்களாகிய நாம் மட்டும்தான். சபையில் நான் வேடிக்கையாகச் சொல்வதுண்டு: “பிசாசைப் பார்க்க வேண்டுமா? கண்ணாடி முன்னால் போய் நில்லுங்கள். அந்திக்கிறிஸ்துவைப் பார்க்க வேண்டுமா? கண்ணாடி முன்னால் போய் நில்லுங்கள்.” எதிர்வல்லமை வேறு யாரும் இல்லை; நாம்தான். ஒளி போகிறதா இல்லையா என்பதற்குச் சில நேரங்களில் நாம்தான் காரணம்.
இதை நம் வாழ்க்கையில் இப்படிப் பொருத்த வேண்டும். உலகத்தில் தீமை அதிகமாக இருக்கிறது. தீமையைப் போக்குவதற்கு நாம் நன்மை செய்ய வேண்டும். நன்மை அதிகமாகும்போது தீமை குறைந்துகொண்டே வரும். காரணம், தீமையைவிட நன்மையின் தாக்கமும் வீரியமும் அதிகம்.
“பிரபஞ்ச எதிரி” என்ற கருத்து
சிலர் இப்படிக் கற்றுக்கொடுக்கிறார்கள்: சாத்தான் என்ற ஒருவன் இருக்கிறான்; அவனுக்கும் கடவுளுக்கும் இடையில் பகைமை இருக்கிறது; இருவரும் எதிரிகள்; இறுதியில் இயேசு வெற்றிபெறுவார்; இதுதான் நற்செய்தி. இது நற்செய்தியே அல்ல. இயேசுவைப் பொறுத்தவரை நற்செய்தி பிசாசைப் பற்றியது அல்ல. அவருடைய இறையாட்சி உருவாவதுதான் நற்செய்தி. நற்செய்தி என்பதை நாம் இயேசுவின் போதனைகளிலிருந்து, நற்செய்தி நூல்களிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும்.
அப்படி ஒரு வஸ்து இருந்தாலும், கடவுளால் உருவாக்கப்பட்ட ஒன்றைக் கடவுளுக்குப் பகைஞன் என்று சொல்லும் அளவுக்கு உயர்த்தக் கூடாது. ஒரு யானைக்கும் ஒரு எறும்புக்கும் இடையில் நடப்பதைச் சண்டை என்றே சொல்ல முடியாது. இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள் என்றால், இருவரும் கிட்டத்தட்ட ஒரே நிலையில், ஒரே திறனோடு இருக்கிறார்கள் என்று பொருள். அதைச் சண்டை என்று சொன்னால், இரண்டும் ஒரே வலிமை உடையவை போலக் காண்பித்துவிடுகிறோம். ஒன்றுமில்லாத ஒன்றைக் கடவுளுக்கு நிகராக உயர்த்துகிறோம். கடவுளுக்கு நேரடியாக ஒரு எதிரி இருக்கிறான், பிரபஞ்சத்திலேயே கடவுளுக்கு எதிரியாக ஒன்று இருக்கிறது என்று சொல்லும் இந்தக் கருத்தின் பெயர் “பிரபஞ்ச எதிரி” [cosmic enemy]. இவை பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்னால் வந்த கருத்துகள்.
நாம் கேட்க வேண்டிய கேள்வி இதுதான்: அவரால் உருவாக்கப்பட்ட ஒன்று அவருக்கு நிகராகப் போட்டியிடுவதற்கோ அவருக்கு விரோதமாகச் சண்டையிடுவதற்கோ எப்படி வாய்ப்பு இருக்க முடியும்? அப்படிச் சொல்லும்போது கடவுளைக் கடவுளாக நாம் பார்க்கவில்லை. பத்துக் கட்டளைகளில் முதலாம், இரண்டாம் கட்டளைகள், அவருக்கு நிகராக எதையும் உயர்த்தக் கூடாது என்கின்றன:
என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். (யாத்திராகமம் 20:3)
ஒன்று அவருக்கு நிகராக இருக்கிறது, அவர் அதோடு சண்டை போட்டு ஜெயிக்க வேண்டியிருக்கிறது என்று சொல்லும்போது, அந்த இரண்டு கட்டளைகளும் அடிபட்டுப் போகின்றன. அடிப்படையையே உடைத்துவிட்டு, தேவதூஷணத்தைச் செய்துவிட்டு, அதை இறையியலாகப் பேசுவது எவ்வளவு பெரிய அநியாயம், எவ்வளவு அபாயகரமானது! ஒன்றைக் கடவுளுக்கு நிகராக உயர்த்தும்போது கடவுளைத் தூஷிக்கிறோம். கடவுளைக் கடவுள் இல்லை என்றும், இன்னொன்றைக் கடவுள் என்றும் சொல்கிறோம். கடவுள் ஒருவரே; அவருக்கு நிகரானது எதுவுமே இல்லை. ஆகவே கடவுளுக்குப் பிரபஞ்ச எதிரி என்று ஒன்று இல்லை. அப்படிச் சொல்வது “ஒரே கடவுள்” என்ற அடிப்படைக்கே விரோதமான தேவதூஷணம்; அதைச் சொல்லக் கூடாது.
நிறைவாக
யோவான் 1:3–5 ஒரு உயர்ந்த இறையியலைச் சொல்கிறது. படைப்பாளர் ஒருவரே. அவருக்கு மேலே ஒரு ஏணியும் இல்லை, அவருக்குக் கீழே போட்டியிடும் கடவுள்களும் இல்லை. எல்லா உயிரும் அவர் கையில் இருக்கிறது. மனிதர்களின் இருண்ட வாழ்க்கைக்கு அவரே ஒளி. அவருக்கு நிகரான எதிர்வல்லமை இல்லை. அவருக்கு எதிராக நிற்கக்கூடியவர்கள் நாம் மட்டுமே.