கடவுள் மனிதரானார்: “ஒரே பேறானவர்” என்பதன் பொருள்
லோகாஸ் மனிதரானார்
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. (யோவான் 1:14)
இங்கே “வார்த்தை” என்பது ஏதோ ஒரு வார்த்தை அல்ல. கிரேக்கர்கள் லோகாஸ் [Logos] என்று புரிந்துகொண்டிருந்ததையே யோவான் சொல்கிறார். அந்த லோகாஸ் கடவுள் என்று முதல் வசனத்திலேயே சொல்லிவிட்டார். ஆகவே இந்த வசனம் சொல்வது இதுதான்: கடவுளே மனிதரானார். நம்முடைய புரிதலுக்காக “வார்த்தை” என்ற இடத்தில் “கடவுள்” என்று போட்டு வாசிக்கலாம். கடவுள் மனிதரானார்; நம்மிடையே தங்கியிருந்தார்.
இதுவரை யார் என்றே தெரியாமல் இருந்த லோகாஸை இப்போது யோவான் வரலாற்றுக்குள் கொண்டுவருகிறார். இருப்பினும் இன்னும் இயேசு என்ற பெயரைச் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் இழுத்துக்கொண்டே போய், கடைசியில் வெளிப்படுத்துவது [final reveal] யோவானின் எழுத்து நடை. அவர் இயேசுவைப் பற்றித்தான் பேசுகிறார் என்பது இன்று நமக்கு எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவருடைய வார்த்தைகளில் அதை இன்னும் சொல்லவில்லை. கிரேக்கர்கள் வாசிக்கும்போது, “லோகாஸே மனிதனாக வந்தாரா? நம்மிடையே தங்கியிருந்தாரா? இவர் யாரைப் பற்றிப் பேசுகிறார்?” என்ற எதிர்பார்ப்பு [anticipation] அவர்களுக்குள் உருவாகியிருக்கும்.
மகிமை: கிருபையும் சத்தியமும்
“அவருடைய மகிமையைக் கண்டோம்” என்கிறார். அந்த மகிமை எது என்பதை இரண்டு சொற்களில் சொல்கிறார்: கிருபை, சத்தியம். குமாரன் பிதாவின் மகிமையை முழுமையாக வெளிப்படுத்துகிறார். கிருபையும் சத்தியமும் பிதாவின் அடிப்படை அம்சங்கள்.
கிறிஸ்தவ மொழியில் “சத்தியம்” என்ற சொல்லைப் பல இடங்களில் பயன்படுத்துகிறோம். “சத்தியத்தை அறிகிறீர்களா?” என்று கேட்கிறோம். அதன் பொருளை நாம் நன்றாகப் புரிந்திருக்க வேண்டும். இங்கே சத்தியம் என்பது எது சரி, எது தவறு, நீதி என்ன என்று கற்றுக்கொடுக்கும் போதனை. அவருக்குள் பூரணமான நீதி இருக்கிறது. நாம் நலமாக இருக்க வேண்டும் என்பது அவருடைய மனதில் இருக்கிறது. ஆகவே அவர் கொடுக்கும் போதனைகளும் நீதியும் கற்பனைகளும்தான் சத்தியம். அந்த நீதியை அவர் உலகத்தில் ஸ்தாபிக்கிறார். எல்லாரும் சமமாக இருக்க வேண்டும், ஒருவரிடம் ஒருவர் அன்பாக இருக்க வேண்டும் என்பதுதான் அந்த நீதி. அதுதான் உலகத்தை மாற்றப் போகிறது. கிருபை வேறு ஒன்று. நாம் நீதி தவறிவிட்டாலும், மீண்டும் அவரோடு இணைவதற்கான வாய்ப்புகளைக் கிருபை ஏற்படுத்துகிறது.
பிதா முதல் முறையாக
இந்த வசனத்தில் யோவான் முதல் முறையாகப் “பிதா” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். இதுவரை அந்தக் கருத்தைச் சொல்லவில்லை. இது யூதர்களின் புரிதலுக்கும் கிரேக்கர்களின் புரிதலுக்கும் புதிய ஒன்று. பிதா என்று ஒருவர் இருக்கிறார்; அவருக்கு ஒரேபேறானவர் இருக்கிறார். இப்படிக் குறைந்தபட்சம் இரண்டு நபர்களைப் பற்றிப் பேசுவதன் மூலம், திருத்துவம் என்ற கருத்தை யோவான் மெதுவாக அறிமுகப்படுத்துகிறார்.
“ஒரே பேறானவர்”: ஒரே முறை நடந்த நிகழ்வு
தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை; பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். (யோவான் 1:18)
“ஒரேபேறான” என்று தமிழில் வாசிக்கும்போது, “பிதாவுக்கு ஒரே ஒரு பிள்ளைதான் இருக்கிறார்; அவர்தான் இயேசு கிறிஸ்து” என்று நாம் புரிந்துகொள்கிறோம். அது தவறான இறையியல். ஆங்கிலத்தில் “ஒன்றே ஒன்று” [one and only] என்று சொல்வதன் பொருள் இதுதான்: இவரைப் போல வேறொரு மனித அவதாரம் [incarnation] இல்லை. கடவுள் இதற்கு முன்பு மனிதனாக வந்ததே இல்லை. இனிமேலும் மனிதனாக வரப்போவதில்லை. முதலும் கடைசியுமாகக் கடவுள் மனிதனாக வந்தது இதுதான். இது இயேசுவின் தனித்தன்மை [uniqueness of Jesus], மனித அவதாரத்தின் தனித்தன்மை [uniqueness of incarnation]. வரலாற்றில் தனித்தன்மை வாய்ந்த ஒரே நிகழ்வு.
இன்னொரு அம்சமும் உண்டு. கடவுளுக்குள் மூவர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் குமாரன் மட்டுமே மனிதனாக வந்திருக்கிறார். வரலாற்றில் முதல் முறையும் கடைசி முறையுமாக நடந்தது அது. இவை அனைத்தும் “ஒரேபேறான” என்ற சொல்லுக்குள் அடங்கியிருக்கின்றன.
பிதா, குமாரன்: உறவைக் குறிக்கும் சொற்கள் அல்ல
இன்றைய கிறிஸ்தவத்தில் பிதா, குமாரன் என்பவற்றை உறவு சம்பந்தமான சொற்களாகப் பார்த்துப் பழகிவிட்டோம். அது தவறு. சரீரத்தில் இருக்கும் நமக்குத் தகப்பன், பிள்ளை என்ற உறவு இருக்கிறது. காரணம், தகப்பன் தாய் மூலமாக ஒரு பிள்ளை பிறக்கிறது. இது உயிரியல் உறவு [biological relationship]. கடவுளுக்குள் அப்படி ஒரு உறவு இல்லை.
பிதாதான் கடவுள், குமாரன் பிதாவால் உண்டாக்கப்பட்டவர் என்றால், குமாரன் கடவுளாக இருக்க வாய்ப்பில்லை. காரணம், கடவுளுக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. இடையில் உருவான ஒன்று உருவாக்கப்பட்ட ஒரு வஸ்துவாகவோ, உருவாக்கப்பட்ட ஒரு நபராகவோ மாறிவிடும். கடவுளால் படைக்கப்பட்ட எதுவும் கடவுள் அல்ல. கடவுள் படைக்கப்படாதவர், நித்தியமானவர்.
மேலும், லோகாஸ் கடவுளோடு இருந்தார், கடவுளாக இருந்தார் என்று யோவான் ஏற்கெனவே சொல்லிவிட்டார். கடவுளுக்குள் இருக்கும் பூரணத்தையும், கடவுளின் மகிமையையும், கிருபையையும் சத்தியத்தையும் இயேசு வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் சொல்லிவிட்டார். ஆகவே இருவரும் இணையானவர்கள், சமமானவர்கள். இணையாக இருந்தால் ஒருவரால் ஒருவர் உருவாக்கப்பட்டிருக்க முடியாது. உருவாக்கப்பட்டிருந்தால் இணையாக இருக்க முடியாது. இரண்டில் ஏதாவது ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும்.
இதை ஒத்திசைப்பதற்கு [reconcile] ஒரே ஒரு வழிதான் உண்டு. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்பவை அவர்களுடைய உறவையோ குணாதிசயத்தையோ வெளிப்படுத்தும் பெயர்கள் அல்ல. அவர்களை அடையாளப்படுத்திக்கொள்வதற்கு இயேசு கொடுத்த பெயர்கள் [titles]. பிதா குமாரனைப் பெற்றெடுத்தவர் அல்ல. குமாரன் பிதாவால் பெறப்பட்டவரோ உருவாக்கப்பட்டவரோ அல்ல. இது அடிப்படையான இறையியல். இதில் குழம்பிவிட்டால், இயேசு பிதாவால் பெற்றெடுக்கப்பட்டவர் என்று பேசி, குமாரனைத் தாழ்த்திவிடுவோம். அப்போது இயேசுவைக் கடவுள் என்ற பட்டியலிலிருந்து நீக்க வேண்டியிருக்கும். அவரைக் கடவுள் என்று சொல்வதே தேவதூஷணமாக மாறிவிடும். இந்தப் பெயர்களைப் பற்றி இன்னும் விரிவாக “மூவரும் ஒருவருக்குள் ஒருவர்” என்ற கட்டுரையில் பார்க்கலாம்.
கடவுளைப் பற்றிப் பேசும்போது பரிசுத்த வேதாகமம் சில நேரங்களில் மனித மொழியைப் [anthropic language] பயன்படுத்துகிறது. “அவருக்கு ஒரே குமாரன்” என்பதை மனித ரீதியில் புரிந்துகொண்டால் தவறாகப் போய்விடும்; இறையியல் அடிவாங்கிவிடும். “ஒரேபேறான” [only begotten] என்பதை மேலே பார்த்த பொருளில்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
யோவான் 1:18-இன் மூல வாசகம்
“ஒரேபேறான குமாரன்” என்ற இடத்தில் கிரேக்க மூலத்தில் “மோனோஜெனேஸ் தியோஸ்” [monogenēs theos] என்று இருக்கிறது என்று வகுப்பில் ஒருவர் சுட்டிக்காட்டினார். அதாவது, “ஒரேபேறான கடவுள்”. கிரேக்கக் கையெழுத்துப் பிரதிகளில் இரண்டு வேறுபாடுகள் [variants] இருக்கின்றன. ஒன்றில் “ஹுயோஸ்” [huios], அதாவது குமாரன். இன்னொன்றில் “தியோஸ்” [theos], அதாவது கடவுள். ஏன் இந்த வேறுபாடு என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் நம்பகமான பல கையெழுத்துப் பிரதிகளில் [reliable manuscripts] “மோனோஜெனேஸ் தியோஸ்” என்றுதான் இருக்கிறது. ஆகவே “கடவுள்” என்றே மொழியாக்கம் செய்யலாம். ESV, NASB போன்ற மொழிபெயர்ப்புகள் அப்படியே “கடவுள்” என்று மொழியாக்கம் செய்கின்றன. வேறு சில மொழிபெயர்ப்புகள், KJV-யில் பழகியவர்களுக்கு எல்லாமே விகற்பமாக இருக்கக் கூடாது என்பதற்காக, பழக்கமான மரபைப் பின்பற்றுகின்றன.
“ஒரேபேறான குமாரன்” என்று சொல்வதற்கும் “ஒரேபேறான கடவுள்” என்று சொல்வதற்கும் வேறுபாடு இல்லையா? இல்லை. குமாரனும் பிதாவும் சமமானவர்கள் என்று யோவான் ஏற்கெனவே சொல்லிவிட்டார். பிதாவுக்குள் இருந்தவை எல்லாம் குமாரனுக்குள் இருந்தன என்றும் சொல்லிவிட்டார். குமாரன் கடவுள் இல்லை என்ற கருத்தே இங்கே இல்லை. இப்போது இரண்டு பேரைப் பற்றிச் சொல்லியாகிவிட்டது. “கடவுள் மனிதனாக வந்தார்” என்று சொல்லும்போது, அங்கே வந்தது யார் என்று விளக்கப்படுத்த வேண்டியிருக்கிறது. பிதா மனிதனாக வரவில்லை; குமாரன் மனிதனாக வந்தார். “குமாரன்” என்ற வாசகம் இதைக் கொஞ்சம் தெளிவாகச் சொல்வது போலத் தோன்றுவதால், அதைப் பல மொழிபெயர்ப்புகள் பயன்படுத்துகின்றன. இயேசு பல இடங்களில் தம்மைக் குமாரன் என்று சொல்கிறார்; ஆகவே அந்தப் பதிலீடு ஏற்பட வாய்ப்பு உண்டு. அடுத்த சொற்றொடர் “பிதாவின் மடியிலிருக்கிற” என்று பிதாவைக் குறிப்பிடுவதால், அங்கே “கடவுள்” என்று போட்டால் குழப்பம் வரும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். எப்படி மொழியாக்கம் செய்தாலும் கருத்து ஒன்றுதான். இதில் பெரிய சதியோ இறையியல் கருத்து மாற்றமோ இல்லை. இரண்டுமே சரியான இறையியல்.
“பிதாவின் மடியில்”
“பிதாவின் மடியிலிருக்கிற” என்ற தமிழ் மொழியாக்கம் அவரை ஒரு பிள்ளையைப் போலக் காண்பிக்கிறது. அதைக் கேட்டவுடன், வயதான ஒருவரின் மடியில் ஒரு குழந்தை உட்கார்ந்திருக்கும் படம் நம் மனதில் வந்துவிடுகிறது. பிதா என்றதும் வெள்ளைத் தாடி வைத்த, வெள்ளை உடை அணிந்த வயதானவர்; இயேசுவுக்குக் கொஞ்சம் கருப்புத் தாடி. இவையெல்லாம் நம்முடைய கற்பனைகள். குமாரன் என்பதற்குக் குழந்தை என்றோ, பிறந்தவர் என்றோ இங்கே பொருள் இல்லை. “பிதாவுக்கு நெருக்கமானவர்” என்பதுதான் சரியான மொழியாக்கமாக இருக்கும்.
ஆகவே இந்த வசனம் சொல்வது இதுதான். கடவுளை யாரும் பார்த்ததில்லை, இவரைத் தவிர. இவர் உலகத்தில் ஒரே முறை மனிதனாக வந்த கடவுள். இவர் கடவுளை நேரடியாகப் பார்த்திருக்கிறார், ஏனென்றால் இவரே கடவுளாக இருக்கிறார். இவர் பிதாவுக்கு மிக நெருக்கமானவர். ஆகவே பிதாவை இவர் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். யோவான் இயேசுவைக் கடவுளாகவும் காண்பிக்கிறார்; ஆனால் ஒரே ஆளாக அல்ல, இரண்டு பேராகக் காண்பிக்கிறார். ஒருவரை யாரும் பார்த்ததில்லை; இன்னொருவர் அவரை நமக்குக் காண்பித்தார். ஒருவர் இன்னொருவரின் மகிமையை வெளிப்படுத்தினார்.
நிறைவாக
யோவான் 1:14–18 சொல்வதைச் சுருக்கமாகச் சொல்லலாம். கடவுளே மனிதரானார். அவர் பிதாவின் மகிமையை, அதாவது கிருபையையும் சத்தியத்தையும், வெளிப்படுத்தினார். “ஒரேபேறானவர்” என்பது பிதாவுக்கு ஒரே பிள்ளை என்று பொருள்படாது. கடவுள் மனிதனாக வந்த ஒரே நிகழ்வை அது குறிக்கிறது. முன்பும் இல்லை, பின்பும் இல்லை. பிதா, குமாரன் என்ற சொற்களை உயிரியல் உறவாகப் புரிந்துகொள்ளக் கூடாது. அப்படிப் புரிந்துகொண்டால் இயேசு கடவுள் என்ற உண்மையையே இழந்துவிடுவோம்.