முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்ல

மூவரும் ஒருவருக்குள் ஒருவர்

1,392 சொற்கள் · 7 நிமிட வாசிப்பு
எழுத்தளவு

இஸ்ரவேலுக்குத் தெரிந்தது: கடவுள் ஒருவரே

இஸ்ரவேல் மக்களின் மார்க்கத்துக்கு அடிப்படையாக இருந்தது ஷேமா [Shema]. அதை அவர்களுடைய விசுவாச அறிக்கை என்று சொல்லலாம்; அதாவது, அவர்கள் உண்மை என்று அங்கீகரித்தவற்றின் சுருக்கமான அறிக்கை:

இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். (உபாகமம் 6:4)

“இதுதான் எங்கள் மார்க்கத்தின் மையம் [core of our religion]” என்று அவர்கள் சொல்வார்கள். கடவுளின் ஒருமை என்பதுதான் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது. அதுதான் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. சிலர் “ஏலோஹிம்” என்ற சொல்லைக் காட்டி, பழைய ஏற்பாட்டிலேயே திருத்துவம் இருந்தது என்று சொல்வார்கள். அப்படி அல்ல. பழைய ஏற்பாட்டில் திருத்துவம் கற்றுக்கொடுக்கப்படவில்லை.

திருத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் இயேசு

கடவுள் மூவராக இருக்கிறார் என்பதை அறிமுகப்படுத்தியவர் இயேசு. ஒன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது என்பதால், அதற்கு முன்பு அது இல்லை என்று பொருள் இல்லை. கடவுள் எப்போதுமே திருத்துவமாகத்தான் இருந்திருக்கிறார். ஆனால் அது அறிமுகப்படுத்தப்படாததால், அன்றைய மக்களுக்கு அதைப் பற்றிய புரிதல் இருக்க வாய்ப்பில்லை. “திருத்துவம்” என்ற சொல் பின்னால் வந்தது; ஆனால் அந்தக் கருத்தை இயேசு கற்றுக்கொடுத்தார்.

யோவான் தம்முடைய நூலின் தொடக்கத்திலிருந்தே பிதா இருக்கிறார், குமாரன் இருக்கிறார் என்று பேசத் தொடங்குகிறார். இந்தப் பெயர்களைக் கொடுத்தது யார் என்று அவர் சொல்லவில்லை. மற்ற நற்செய்தி நூல்களைப் பார்க்கும்போது, பிதாவை அறிமுகப்படுத்துகிறவர் இயேசுதான். குமாரனையும் அவரே அறிமுகப்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவரையும் அவரே அறிமுகப்படுத்துகிறார். கடவுளுக்குப் பெயர் இல்லை. ஆகவே மக்கள் புரிந்துகொள்வதற்காக இயேசு பெயர் வைக்கிறார்: “பிதா என்னை அனுப்பினார்”; “நான் இன்னொருவரை அனுப்பும்படி கேட்பேன்”. இப்படிச் சொல்லும்போது, நானும் கடவுள், கடவுள் இன்னொருவரும் இருக்கிறார் என்கிறார். ஆனால் மூன்று கடவுள்கள் அல்ல. மூவர் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறார். மூவரும் ஒரே தன்மை உடையவர்கள் என்பதையும் தெளிவுபடுத்துகிறார். பிதா கற்றுக்கொடுத்ததை நான் கற்றுக்கொடுக்கிறேன், நான் கற்றுக்கொடுத்ததைப் பரிசுத்த ஆவியானவர் கற்றுக்கொடுப்பார் என்கிறார். மூவரும் ஒரே கருத்தைத்தான் கற்றுக்கொடுக்கிறார்கள்.

ஆகவே திருத்துவம் இதுதான். கடவுள் ஒருவர். அவரில் மூன்று நபர்கள் இருக்கிறார்கள். மூவரும் சமமானவர்கள், இணையானவர்கள், ஒரே தன்மை கொண்டவர்கள். இருப்பினும் அவர்கள் மூன்று தனி நபர்கள்; தனித்தனியாகச் செயல்படக்கூடியவர்கள்.

ஒரே தன்மை [homoousion]

இந்த மூன்று நபர்களுக்கும் ஒரே விதமான தன்மையும் ஒரே விதமான குணாதிசயங்களும் இருக்கின்றன. இதற்கு “ஹோமோஊசியோன்” [homoousion] என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது: ஒரே விதமான தன்மை, ஒரே விதமான எண்ணங்கள், ஒரே விதமான செயல்பாடுகள். மூவராக இருக்கிறார்கள்; ஆனால் ஒரே ஒரு கடவுள். யோவான் எழுதிய நற்செய்தி நூலில் இதைப் பல இடங்களில் பார்க்கலாம்.

ஒருவருக்குள் ஒருவர் [perichoresis]

பிதாவும் குமாரனும் பரிசுத்த ஆவியானவரும் ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்தவர்கள். ஒருவரில் ஒருவர் ஊடுருவி இருக்கிறார்கள். இதற்கு “பெரிக்கொரேசிஸ்” [perichoresis] என்று பெயர்; ஆங்கிலத்தில் “ஊடுருவல்” [interpenetration] என்பார்கள். இயேசு இப்படிச் சொல்கிறார்:

நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். (யோவான் 10:30)

இதுதான் பெரிக்கொரேசிஸ். கடவுளும் நானும் ஒன்று என்று சொல்வது. ஆகவே பிதாவுக்கு இந்த வலிமை உண்டு, குமாரனுக்கு இந்தத் திறன் உண்டு என்று தனித்தனியாகப் பிரிப்பதற்கு வாய்ப்பே இல்லை. மூவருக்கும் ஒரே தன்மைகள்தான் இருக்கின்றன.

சிலர் பெரிக்கொரேசிஸை “இசைவு” [in harmony, in sync] என்றும், “கோரியோகிராஃபி” [choreography] என்ற சொல் அதிலிருந்துதான் வந்தது என்றும் விளக்குகிறார்கள். நடனத்தில் ஆளுக்கு ஒன்றைச் செய்யாமல், எல்லாரும் ஒரே விதமாக இணைந்து ஆடுவதுபோல. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரோமன் கத்தோலிக்கக் குருவானவர் இப்படி ஒரு விளக்கம் கொடுத்ததை நான் கேட்டிருக்கிறேன். மொழியிலுள்ள ஒரு சொல்லை எடுத்து ஒரு காரியத்தை விளக்குவதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் “கடவுளோடு நாம் நடனம் ஆடுகிறோம்” என்று அவர் சொல்லவில்லை. அந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து அவர் பேசவில்லை.

அபிஷேகம்: பெரிக்கொரேசிஸ் அல்ல, நியமனம்

ஒரு கேள்வி வரலாம்: இயேசு ஏசாயாவின் பகுதியை வாசித்தார்.

கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார். (லூக்கா 4:18; ஏசாயா 61:1)

இதைப் பெரிக்கொரேசிஸாக எடுத்துக்கொள்ளலாமா? வாய்ப்பில்லை. இது பெரிக்கொரேசிஸ் என்றால், ஏசாயா இதைச் சொன்னபோதும் அது பெரிக்கொரேசிஸாக இருக்க வேண்டும். அப்படியானால் ஏசாயாவும் கடவுளும் ஒன்றாகக் கலந்தவர்களா? இல்லை. ஏசாயாவும் கடவுளும் ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்தவர்கள் அல்ல. “கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்” என்று ஏசாயா சொல்வதன் பொருள், மற்ற தீர்க்கதரிசிகள் சொல்வதுபோல, “சில காரியங்களைச் செய்வதற்குக் கடவுள் என்னை அனுப்பியிருக்கிறார்; அதற்கான திறனை எனக்குத் தந்திருக்கிறார்; ஒரு நோக்கத்துக்காக, ஒரு வேலைக்காக நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன்” என்பதுதான்.

“கர்த்தருடைய ஆவியானவர்” என்பது புதிய ஏற்பாடு சொல்லும் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை “தேவ ஆவியானவர்”, “தேவன்” என்ற இரண்டும் ஒன்றுக்குப் பதிலாக இன்னொன்று பயன்படுத்தக்கூடிய சொற்கள் [interchangeable words]. கடவுள் ஒரு செயலைச் செய்தால், “தேவ ஆவியானவர் செய்தார்” என்பார்கள். அபிஷேகம் பண்ணுதல் என்பது ஒரு வேலைக்கு நியமித்தல். முக்கியமாக, மக்களுக்குச் சேவை செய்யும் ஒரு குறிப்பிட்ட வேலையைக் கொடுத்து அமர்த்துதல்.

எந்தத் தீர்க்கதரிசியும் “நாங்கள் இதைச் செய்ய வேண்டும்” என்று தாங்களாகவே வந்தவர்கள் அல்ல. மக்களின் அவல நிலையை அவர்கள் பார்த்தார்கள் என்பது மட்டுமல்ல; கடவுள் அவர்களைப் பார்த்து, “இந்த வேலையை நீ செய்ய வேண்டும்” என்று அழைப்புக் கொடுத்திருப்பார். அந்த வேலை புதிய போதனைகளைக் கொடுப்பது அல்ல. ஏற்கெனவே கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தைக் கற்றுக்கொடுத்து, மக்களைக் கடவுளுடைய பிரமாணத்தைப் பின்பற்ற அழைப்பது, மக்களை விடுவிப்பது. அப்படி அழைப்பும் வேலையும் பெற்றவர்கள்தான் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். மேசியா என்ற சொல்லுக்கே அதுதான் பொருள்: ஒரு வேலையைச் செய்வதற்காக நியமிக்கப்பட்டவர். அந்தப் பொருளில் ஏசாயாவும் ஒரு மேசியாதான்.

இயேசு அந்தப் பகுதியை வாசித்தபோது ஒரு ஒப்புமைப் புள்ளியை [point of comparison] வைக்கிறார்: “ஏசாயா என்ற தீர்க்கதரிசிக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நானும் செய்கிறேன்.” அந்த வசனம் முன்பே தம்மைப் பற்றிச் சொல்லப்பட்டது என்று அவர் சொல்லவில்லை. தம்மை ஒரு தீர்க்கதரிசியாக, ஒரு மேசியாவாக அறிமுகப்படுத்துகிறார்.

அப்போஸ்தலர் நடபடிகளிலும் இப்படி ஒரு பகுதி உண்டு:

நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; அவர் நன்மைசெய்கிறவராயும், பிசாசின் வல்லமையில் அகப்பட்டிருந்த யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்; தேவன் அவரோடேகூட இருந்தார். (அப்போஸ்தலர் 10:38)

அதேபோல அப்போஸ்தலர் 2-இல் பேதுரு, “கடவுள் அனுப்பின இயேசுவை நீங்கள் கொன்றுபோட்டீர்கள்; கடவுளோ அவரை உயிரோடு எழுப்பினார்” என்கிறார். இவை இயேசுவை மனிதனாகக் காண்பிக்கின்றன. இவற்றிலும் பெரிக்கொரேசிஸைப் பார்க்க முடியாது. இங்கே இன்னொரு காரியமும் அடங்கியிருக்கிறது: கடவுள் மனிதனாக வந்தபோது ஏற்றுக்கொண்ட வரம்புகள் [kenosis].

இதில் ஒரு கவனம் தேவை. இயேசு பரிசுத்த ஆவியானவரின் பலத்தால், அபிஷேகத்தால் இவற்றைச் செய்தார் என்று மட்டும் புரிந்துகொண்டால், மனிதர்களும் அதே நிலையில் இருக்கலாம் என்றாகிவிடும். கடவுளுடைய ஆவியால் அல்லது திறனால் நிரப்பப்பட்டு, சில காரியங்களைச் செய்யும் திறனுள்ளவர்களாக மனிதர்கள் மாறுவதுபோல. நமக்கு இருக்க வேண்டிய புரிதல் இதுதான்: பிதாவாக இருக்கட்டும், குமாரனாக இருக்கட்டும், பரிசுத்த ஆவியானவராக இருக்கட்டும், மூவரும் ஒரே செயல்களைச் செய்யக்கூடியவர்கள், ஒரே திறன் உடையவர்கள். ஆகவே ஒருவர் இன்னொருவர் திறம்படச் செயல்படுவதற்கு உதவி செய்தவர்கள் அல்ல. மூவரையும் வெவ்வேறு திறன் உடையவர்களாகப் பார்க்கக் கூடாது.

கவர்ச்சி இயக்கம் [charismatic movement] பரிசுத்த ஆவியானவர் என்ற சொல்லை ஒவ்வொரு காரியத்துக்கும் பயன்படுத்துகிறது. “அவர் உன்னோடு பேசினாரா? உனக்குக் கற்றுக்கொடுத்தாரா? உன்னை நடத்தினாரா? உன்னை அபிஷேகம் பண்ணினாரா? உனக்கு வெளிப்பாடு கொடுத்தாரா?” என்ற பேச்சுகளைக் கேட்டுக் கேட்டு நாம் பழகிவிட்டோம். இயேசுவைப் பற்றிப் புரிந்துகொள்ளும்போது இவற்றைக் கொண்டுவரக் கூடாது.

விரிவாக்கப்பட்ட பெரிக்கொரேசிஸ்

பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்திருப்பதுபோல, நாமும் அவரில் இணைந்திருப்போம் என்ற கருத்தை இயேசு யோவான் 14, 15 அதிகாரங்களில் முதல் முறையாக அறிமுகப்படுத்துகிறார்:

நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள். (யோவான் 14:20)

ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து, அவனோடே வாசம்பண்ணுவோம். (யோவான் 14:23)

அவர் நம்மில் இருக்கிறார் என்பது மட்டுமல்ல; நாம் அவரில் கலந்திருப்போம். இதை விரிவாக்கப்பட்ட பெரிக்கொரேசிஸ் [extended perichoresis] என்றும், இறுதிக்காலப் பெரிக்கொரேசிஸ் [eschatological perichoresis] என்றும் சொல்லலாம். நித்திய ஜீவனில் நாம் கடவுளோடு இருப்போம், கடவுளில் கலந்திருப்போம்.

இதுவும் அதற்கு முன்பு இல்லாதது அல்ல; ஆனால் முன்பு வாழ்ந்தவர்களுக்கு அதைப் பற்றிய புரிதல் இல்லை. ஏசாயாவைப் பொறுத்தவரை, “கடவுள் என்னை அனுப்புகிறார்; நான் கடவுளுடைய மக்களில் ஒருவன்; கடவுளுடைய தீர்க்கதரிசி; அவருடைய வேலையைச் செய்கிறேன்” என்பதுதான் அவருடைய புரிதல். “கடவுள் எங்களோடு இருக்கிறார்” என்பதைப் பெரிய சிலாக்கியமாக அவர்கள் நினைத்தார்கள். அதைவிடப் பெரிய சிலாக்கியம் ஒன்று இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதால் அது உண்மையாக இல்லை என்று பொருள் இல்லை. அது உண்மைதான்; ஆனால் அவர்களுக்கு அது தெரியாது. தெரியாத ஒன்றை அவர்கள் தங்கள் வார்த்தைகளில் விளக்க வாய்ப்பில்லை. இயேசுதான் அதைக் கற்றுக்கொடுக்கிறார். இன்று ஒரு சபைக்குப் போய் “பெரிக்கொரேசிஸ் என்றால் என்ன?” என்று கேட்டால் யாருக்கும் தெரியாது.

பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்: இயேசு கொடுத்த பெயர்கள்

பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்ற சொற்கள் கடவுளை விளக்கும் சொற்கள் அல்ல. கடவுளின் தன்மைகளை விவரிக்கும் சொற்களும் அல்ல. அவர்களுடைய உறவைக் காண்பிக்கும் சொற்களும் அல்ல. இயேசு அவர்களுக்குக் கொடுத்த பெயர்கள் [titles]. மூன்று மனிதர்கள் இருந்தால் அவர்களுக்கு வெவ்வேறு பெயர்கள் இருப்பதுபோல, கடவுளுக்குள் மூன்று நபர்கள் இருக்கிறார்கள்; அவர்களுக்கு வெவ்வேறு பெயர்கள். கடவுளுக்குள் வேறு நபர்களே இல்லை என்றால், “கடவுள்” என்ற ஒரு பெயரைச் சொல்லிவிட்டுப் போகலாம். மூன்று நபர்கள் என்பதால், அவர்களைத் தனி நபர்களாக அடையாளப்படுத்திக்கொள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் வேண்டும்.

இந்தப் பெயர்களை அவற்றின் பொருளை வைத்துப் புரிந்துகொண்டால் இறையியல் அடிபட்டுப் போகும். பிதா எல்லாவற்றையும் உருவாக்குகிறவர், குமாரன் பிதாவால் உருவானவர் என்றால், குமாரன் கடவுள் அல்ல. பரிசுத்த ஆவியானவர் மட்டும்தான் பரிசுத்தர் என்றால், மற்ற இருவரிடம் பரிசுத்தம் இல்லையா? அவர் மட்டும்தான் ஆவி என்றால், குமாரன் மனிதனாக வருவதற்கு முன்பு ஆவியாக இல்லையா? ஆகவே இவை அவர்களுடைய குணாதிசயத்தையோ உறவையோ வெளிப்படுத்தும் சொற்கள் அல்ல. அடையாளப் பெயர்கள். பிதா குமாரனைப் பெற்றெடுத்தவர் அல்ல; குமாரன் பிதாவால் பெறப்பட்டவரோ உருவாக்கப்பட்டவரோ அல்ல.

பரிசுத்த வேதாகமத்தில் கடவுள் ஆவி என்றும், அவர் என்றும், ஒருவர் என்றும், மூவர் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இயேசு சரீரத்தில் இருந்தபடி “அவர்” என்று பேசுகிறார்; பிதாவையும் “அவர்” என்கிறார்; பரிசுத்த ஆவியானவரையும் “அவர்” என்கிறார். இவை கடவுளே கொடுக்கும் தகவல்கள். முரண்கள் போலத் தோன்றும் இந்தத் தகவல்களை ஒன்றாக இணைத்துத்தான் புரிந்துகொள்ள வேண்டும். இறையியலை நாம் அமைக்கவில்லை; இது கடவுளால் கொடுக்கப்பட்ட இறையியல். ஒரு வாக்கியத்தை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு இறையியலை அமைக்க முடியாது.

கடவுளை ஏன் “அவர்” என்கிறோம்?

தேவன் ஆவியாயிருக்கிறார். (யோவான் 4:24)

கடவுள் ஆவியாக இருக்கிறார் என்றால், அவருக்குச் சரீரம் இல்லை. சரீரம் இல்லை என்றால் பாலினம் இல்லை. படைப்பில் பாலினம் இருக்கிறதே தவிர, படைத்தவரில் பாலினம் இல்லை. “ஏன் இல்லை?” என்று கேட்க முடியாது. “அவர் ஏன் ஆதியிலிருந்து இருக்கிறார்?” “அவர் ஏன் ஆவியாக இருக்கிறார்?” என்று கேட்பதுபோல அது. அவர் அப்படித்தான். ஆகவே அவர் யாரையும் பெற்றெடுப்பதற்கு வாய்ப்பே இல்லை. குழந்தை பிறப்பதற்கு இன்னொருவரோடு பாலுறவு வேண்டும். அவருக்குப் பாலினமும் இல்லை, பாலுறவும் இல்லை. ஆகவே குமாரன் பெற்றெடுக்கப்பட்டவர் அல்ல. உருவாக்கப்பட்டவரும் அல்ல. உருவாக்கப்பட்டவர் என்றால், நம்மைப் போல அவரும் ஒரு படைப்பு.

அப்படியானால் கடவுளை ஏன் “அவர்” என்கிறோம்? அவர் ஒரு நபர்; ஆகவே அவரை “அது” என்று சொல்ல முடியாது; அப்படிச் சொன்னால் அஃறிணையாகிவிடும். மொழியைப் பொறுத்தவரை, நபர் என்று சொன்ன உடனேயே பாலினம் வந்துவிடுகிறது. அவன் அல்லது அவள், அவர் அல்லது அவள்; இந்த இரண்டுதான் இருக்கின்றன. இடைப்பட்ட சொல் இல்லை. மனிதர்களின் புரிதலுக்காக ஏதாவது ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். ஆகவே “அவர்” என்று பயன்படுத்துகிறோம். இது மனித மொழி [anthropic language]. அன்றைய சமுதாயம் ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த சமுதாயம் [patriarchal society]. ஆண்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலையும் பொறுப்பும் வேறாக இருந்தன. ஆகவே அவர் உயர்வானவர் என்பதைக் காண்பிக்க “அவர்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. ஆண்பால் சொல்லைப் பயன்படுத்துவதால் அவர் ஆண் என்று பொருள் இல்லை.

“ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை” என்று சொல்வதைவிட, “ஆண், பெண் என்ற பாலினத்துக்கு அப்பாற்பட்டவர்” என்று சொல்வது சிறப்பாக இருக்கும். பாலினத்தைப் படைத்தவர் அவர். பிதாவும் பரிசுத்த ஆவியானவரும் குமாரனும் பாலினத்துக்கு அப்பாற்பட்டவர்கள், அதற்கு மேலாக உயர்ந்திருப்பவர்கள். குமாரன் மனிதனாக வந்தபோது ஆணாக வந்தார் என்பது வேறு விஷயம்.

தவறான கொள்கைகள்

“கடவுள் ஒருவர்தான்; மூவர் அல்ல” என்று சொல்லும் திரிபுக் கொள்கைகள் [heresies] இருக்கின்றன. யெகோவாவின் சாட்சிகள் [Jehovah’s Witnesses], ஒருமைக் கொள்கையினர் [Unitarianism], “இயேசு மட்டும்” இறையியல் [Oneness theology] போன்றவை. ஒன்று, பிதா மட்டும்தான் கடவுள் என்கின்றன. இல்லையென்றால், இயேசு மட்டும்தான் கடவுள் என்கின்றன. யோவான் 1:1–18-ஐ வாசிக்கும்போதே இவை தவறானவை என்று தெரிகிறது. யோவான் கற்றுக்கொடுப்பது இதுதான்: கடவுள் இருக்கிறார்; இயேசுவும் கடவுள்; இயேசு கடவுளை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். ஒருவருக்குப் பிதா என்று பெயர்; இன்னொருவருக்குக் குமாரன் என்று பெயர்.

நிறைவாக

கடவுள் ஒருவர்; அவரில் மூன்று நபர்கள். மூவரும் சமமானவர்கள், ஒரே தன்மை கொண்டவர்கள், ஒருவருக்குள் ஒருவர் இருப்பவர்கள். இதை நமக்கு அறிமுகப்படுத்தியவர் இயேசு. அவரே அவர்களுக்குப் பெயர் கொடுத்தார். அந்தப் பெயர்கள் உறவைக் குறிக்கவில்லை. அபிஷேகம் என்பது நியமனம்; அது பெரிக்கொரேசிஸ் அல்ல. அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் அந்த ஒருமைக்குள் இணைக்கப்படுவார்கள்.