உயிர்த்தெழுதல்: இயேசு கடவுள் என்பதற்கான சான்று
முதல் நூற்றாண்டின் செய்தி
முதல் நூற்றாண்டிலேயே தோமா மூலமாகக் கிறிஸ்தவம் இந்தியாவுக்கு வந்தது. அந்தக் கிறிஸ்தவத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றிய தகவல்கள் மிகக் குறைவு. ஆனால் அவர்கள் கற்றுக்கொடுத்தது நமக்குத் தெரியும். இயேசு கடவுள். அவரைப் பின்பற்றும்போது நமக்கு நித்திய ஜீவன் கிடைக்கிறது. இயேசு கடவுள் என்பது எப்படித் தெரியும்? அவர் உயிரோடு எழும்பினார்; ஆகவே அவர் கடவுள். உயிரோடு எழும்பின அந்தக் கடவுளுடைய போதனைகளின்படி நடக்கும்போது, கடவுளோடு நமக்கு உறவு ஏற்படுகிறது. இவ்வளவுதான் அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள். “இதை எடு, அதை மாற்று” என்று கலாச்சார ரீதியான மாற்றங்களை அவர்கள் ஏற்படுத்தவில்லை.
மூன்று நூற்றாண்டுகள் கொண்டாடியது
இயேசுவைப் பின்பற்றியவர்கள் மூன்று நூற்றாண்டுகள் வரை இயேசுவின் பிறப்பை முக்கியத்துவப்படுத்தவில்லை. அவருடைய மரணத்தைக்கூடக் கொண்டாடவில்லை. அவர்கள் கொண்டாடியது அவருடைய உயிர்த்தெழுதலை. வருடத்துக்கு ஒரு முறை மட்டுமல்ல; இயேசு உயிர்த்தெழுந்த வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமையை ஆண்டவருடைய நாள் என்று ஒவ்வொரு வாரமும் மிகுந்த சந்தோஷத்தோடு கொண்டாடினார்கள். காரணம், இயேசு உயிர்த்தெழுந்ததுதான் அவரைக் கடவுள் என்று அவர்களுக்குக் காண்பித்தது. அதைப் போன்ற ஒரு அற்புதமே இல்லை.
இயேசு கற்றுக்கொடுத்ததும் இதுதான். அவர் மரித்ததற்குக் காரணம் உயிரோடு எழும்புவது. உயிரோடு எழும்புவது எதற்கு? தம்மைக் கடவுள் என்று காண்பிப்பதற்கு. அவர் தம்மைக் கடவுள் என்று காண்பித்தால், எல்லாரும் அவரைக் கடவுள் என்று அங்கீகரித்து அவருடைய போதனைகளைப் பின்பற்றுவார்கள். போதனைகளைப் பின்பற்றுவதன் மூலம் அவரோடு இணைக்கப்படுவார்கள்; நித்திய ஜீவனைப் பெறுவார்கள். ஆகவே உயிர்த்தெழுதல்தான் மிக முக்கியமானது. அவர் கடவுள் என்பதற்கு அதுதான் அசைக்க முடியாத சான்று.
மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு ரோம அரசாங்கம் கிறிஸ்தவத்தைத் தனக்குள் எடுத்துக்கொண்டது. ரோம மார்க்கத்தில் ஏற்கெனவே இருந்த ஒரு பண்டிகையோடு இயேசுவின் பிறப்பை இணைத்தார்கள். எல்லாரும்தான் பிறக்கிறார்கள், எல்லாரும்தான் இறக்கிறார்கள். ஒருவர் மட்டும்தான் உயிரோடு எழும்பினார். பிறந்ததையும் இறந்ததையும் கொண்டாடுவதைவிட, உயிர்த்தெழுந்ததைக் கொண்டாட வேண்டும். இயேசுவைக் கடவுள் என்று எல்லாருக்கும் உறுதியாகக் கற்றுக்கொடுப்பதற்கு அது வசதியாகவும் இருக்கும்.
மரணம் மனிதன் என்று காண்பிக்கிறது; உயிர்த்தெழுதல் கடவுள் என்று காண்பிக்கிறது
இயேசுவின் மரணம் உண்மையான மரணம். அவர் பகிரங்கமாகக் கொல்லப்பட்டார். சிலுவையில் அறையப்பட்டார். ரோமப் போர்ச்சேவகன் அவருடைய விலாவில் குத்தினான். இவையெல்லாம் செய்யப்பட்ட பிறகு, அவர் நிச்சயமாகக் கொல்லப்பட்டார், அவருடைய உயிர் பிரிந்துவிட்டது என்பது எல்லாருடைய கண்களுக்கும் முன்பாகக் காண்பிக்கப்பட்டது.
உயிர் பிரிதல் அவரை எந்த வகையிலும் மகிமைப்படுத்தவில்லை. நிறையப் பேருக்கு உயிர் பிரிந்தது. அவருக்கு இரண்டு பக்கங்களிலும் இருந்த இரண்டு கள்வர்களும் சிலுவையில் செத்துப்போனார்கள். அவரோ மூன்று நாளுக்குப் பிறகு கல்லறையிலிருந்து வெளியே வந்தார்; மக்களுக்கு முன்பாகத் தம்மைக் காண்பித்தார். அவருடைய மரணம் அவரை மனிதன் என்று காண்பிக்கிறது. அதில் நமக்கு அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை; அவர் மனிதன்தானே. அநேக மனிதர்கள் கொல்லப்பட்டார்கள், மரித்தார்கள். அவருடைய உயிர்த்தெழுதல்தான் அவரைக் கடவுள் என்று காண்பிக்கிறது.
உயிர்த்தெழுதல் ஒரு பெரிய அற்புதம். அதை நாம் இன்றும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது அவர் தம்மைக் கடவுள் என்று காண்பிப்பதற்காகச் செய்த ஒன்று. அதில் எனக்கு நேரடியான பலன் இல்லை. அதன்மூலம் அவரை அங்கீகரிப்பதுதான் எனக்குரியது.
“இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்”
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். (யோவான் 2:19)
கேட்டவர்களுக்கு அது ஆலயத்தை இடிப்பதைப் பற்றிய பேச்சாகத்தான் புரிந்தது: “இதைக் கட்டுவதற்கு நாற்பத்தாறு வருஷம் ஆனதே!” ஆனால் யோவான் விளக்குகிறார்:
அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார். அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள். (யோவான் 2:21–22)
சீடனாக இருந்த யோவானுக்கும் அப்போது அது புரியவில்லை. அவர் உயிரோடு எழும்பின பிறகுதான், “இதைப் பற்றித்தான் பேசினார்” என்று அவர்களுக்குப் புரிந்தது. பின்னால் புரிந்துகொண்டதைச் சம்பவத்தோடு இணைத்து எழுதுவது யோவானின் எழுத்து நடை. மற்ற நற்செய்தி நூல்களில், “மனுஷகுமாரன் எருசலேமுக்குப் போவார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்; ஆனாலும் அவர் உயிரோடு எழும்புவார்” என்று இயேசு பல முறை சொல்வதைப் பார்க்கிறோம். யோவான் இதற்கு முன்பு அப்படி எதையும் சொல்லவில்லை. இருப்பினும் இயேசு கற்றுக்கொடுத்ததைச் சீடர்கள் நினைவுகூர்ந்தார்கள் என்கிறார். இங்கே “விசுவாசித்தார்கள்” என்பதன் பொருள் நம்பிக்கை அல்ல; உண்மையை அங்கீகரித்தல்.
யாரும் பரலோகத்துக்கு ஏறவில்லை
பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3:13)
இதற்கு முன்பு, “பூமிக்குரியவைகளை நான் சொன்னபோதே நீ நம்பவில்லை; பரலோகத்துக்குரியவைகளைச் சொன்னால் எப்படி நம்புவாய்?” என்று இயேசு நிக்கொதேமுவிடம் கேட்கிறார். இது கேலியான பேச்சு. பரலோகத்துக்குரியவை என்று தனியாக எதுவும் இல்லை; கடவுளைப் பற்றிய தகவல்களைத்தான் அப்படிச் சொல்கிறார். பரலோகம் ஒரு இடம் என்று நம்புகிறவர்களின் மொழியில் அவர் வேண்டுமென்றே பேசுகிறார். “பரலோகத்துக்குப் போய் வந்தேன்” என்று சொல்கிறவர்களுக்கு இயேசு இங்கேயே பதில் சொல்லிவிட்டார். பரலோகத்துக்கு ஏறிப் போனவரும் இறங்கி வந்தவரும் ஒருவர்தான்; அது அவரே. யாரும் பரலோகத்துக்குப் போகவும் முடியாது, அங்கிருந்து வரவும் முடியாது.
“செத்த பிறகு இயேசு எங்களைப் பரலோகத்துக்குக் கூட்டிப்போவார்” என்று ஒரு கூட்டம் சொல்கிறது. “நாங்கள் தினமும் பரலோகத்துக்குப் போய் வந்துகொண்டிருக்கிறோம்” என்று இன்னொரு கூட்டம் சொல்கிறது. “நான் உங்களைப் பரலோகத்துக்குக் கூட்டிப்போவேன்” என்று இயேசு எப்போதும் சொல்லவில்லை. ஒரு மனிதனுக்கு அவசியமானது பரலோகத்துக்குப் போவது அல்ல; நித்திய ஜீவனைப் பெறுவது. பரலோகம் என்பது மனிதக் கருத்து. கடவுளோடு இணைவதுதான் கடவுளுடைய கருத்து. அது எப்படிக் கிடைக்கும் என்பதை இயேசு அடுத்துச் சொல்கிறார்.
“சர்ப்பமானது உயர்த்தப்பட்டதுபோல”
சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல, மனுஷகுமாரனும், தம்மை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். (யோவான் 3:14–15)
இங்கே அந்தச் சம்பவத்தைப் பற்றி இயேசு பேசவில்லை. இது ஒரு ஒப்புமை. எழுத்தாளரோ பேசுகிறவரோ ஒரு ஒப்புமையைச் சொல்லும்போது, அதில் ஒரு ஒற்றுமையை மட்டும்தான் கவனிக்க வேண்டும். ஒரு இடத்தில் மட்டும் ஒப்புமைப் புள்ளி [point of comparison] இருக்கிறது; அந்த ஒன்றை மட்டும்தான் அவர்கள் விளக்க நினைக்கிறார்கள். அங்கே என்ன சர்ப்பம் இருந்தது, அதை எப்படி உயர்த்தினார் என்பவை முக்கியமல்ல. ஒவ்வொரு சம்பவத்திலும் பல தகவல்கள் இருக்கும். தவறான இரண்டு தகவல்களை ஒப்புமையாக எடுத்துக்கொண்டால், நாமாக ஒரு புதிய கருத்தை உருவாக்கிவிடுவோம்.
மோசே வெண்கலத்தால் ஒரு சர்ப்பத்தைச் செய்து கோலின்மேல் உயர்த்தினார். அது பகிரங்கமாக [public spectacle], எல்லாருடைய கண்களுக்கும் முன்பாக இருந்தது. அதைப் பார்த்தவர்கள் எல்லாரும் பாம்புக் கடியிலிருந்து சுகம் அடைந்தார்கள். ஒப்புமை இதுதான்: எல்லாருடைய கண்களுக்கும் முன்பாகக் காண்பிக்கப்படுதல்.
“உயர்த்தப்படுதல்” என்பதைச் “சிலுவையில் தூக்கப்பட்டார்” என்று புரிந்துகொள்ளக் கூடாது. ஆங்கிலத்தில் “உயர்த்தப்பட்டார்” [lifted up, exalted] என்ற சொல் வருகிறது. இது உயரத்தைப் பற்றியது அல்ல. மகிமைப்படுத்தப்படுதல் [glorified]; எல்லாரும் “ஆஹா!” என்று பார்க்கும் நிலைக்கு உயர்த்தப்படுதல். தமிழில் வாசிக்கும்போது இரண்டும் ஒரே மாதிரி இருக்கின்றன; அது பெரிய பிரச்சனை அல்ல. இயேசு எப்படி மகிமைப்படுத்தப்பட்டார் என்பது இன்று நமக்குத் தெரியும். சிலுவையில் அல்ல; உயிர்த்தெழுதலில். சிலுவையில் அவர் செத்துவிட்டார், அவரைக் கொன்றுவிட்டோம் என்று அவர்கள் நினைத்தார்கள். அவருக்கு வெற்றி கிடைத்ததாக யாரும் நினைக்கவில்லை. சிலுவையில் அறையப்பட்டதைப் பார்த்து யாரும் “இவர் கடவுள்” என்று சொல்லவில்லை. மரணம் இல்லாமல் உயிர்த்தெழுதல் இல்லை என்பது உண்மை. ஆனால் அவருடைய மகிமை விளங்கியது உயிர்த்தெழுதலில்தான். அதை எல்லாரும் பார்த்தார்கள், எல்லாரும் கேள்விப்பட்டார்கள். ஆகவே உயர்த்தப்படுதல் என்பது அவர் தம்மைக் கடவுள் என்று காண்பித்தல்.
உயிர்த்தெழுதலின் மூலம் மக்கள் அவரைக் கடவுள் என்று பார்க்க வேண்டும். அதுதான் உண்மை; அதை நிராகரிக்க வாய்ப்பில்லை. இயேசு நிக்கொதேமுவிடம் சொல்வது இதுதான்: “நீ இதைச் செய், அதைச் செய் என்று எதையோ கற்றுக்கொடுக்கிறாய். நீ கற்றுக்கொடுக்க வேண்டியது என்னைக் கடவுள் என்று அங்கீகரிப்பதை.” இங்கே விசுவாசம் என்பது மத நம்பிக்கை அல்ல. “நான் இயேசுவை நம்புகிறேன்” என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இயேசுவை உண்மையானவராக, கடவுளாக அங்கீகரிக்க வேண்டும். அப்படி அங்கீகரிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு.
மயக்கக் கோட்பாடு
இன்று நிறையப் பேர் “மயக்கக் கோட்பாடு” [swoon theory] என்று ஒன்றைச் சொல்கிறார்கள்: சிலுவையில் அறைந்தபோது அவர் மயங்கிவிட்டார்; அவரைக் கல்லறையில் வைத்தார்கள்; மூன்று நாள் அந்தக் குளிரான கல்லறையில் இருந்தார்; அந்தக் குளிர்ச்சியால் மயக்கம் தெளிந்து வெளியே வந்துவிட்டார்; இதைத்தான் உயிர்த்தெழுந்தார் என்கிறார்கள். கல்லறையை ஐஸ் பெட்டியைப் போல நினைத்துக்கொள்கிறார்கள் போலும்! அவருடைய மரணம் பகிரங்கமானது என்பதை மேலே பார்த்தோம். ரோமர்கள் எல்லாருக்கும் முன்பாக அவரைக் கொன்று, அவருடைய உயிர் பிரிந்ததை உறுதிசெய்தார்கள்.
பென்-ஹர் படம்
“பென்-ஹர்” [Ben-Hur] என்ற படத்தில், பென்-ஹரின் தாய்க்கும் சகோதரிக்கும் குஷ்டரோகம் வந்துவிடும். சோகமான காட்சிக்கு மழை பெய்ய வேண்டுமே! இயேசு சிலுவையில் இருக்கும்போது மழை பெய்யும்; அவருடைய இரத்தம் மழைநீரோடு கலந்து ஓடி வரும்; கீழே நிற்கும் அவர்கள் இருவர்மேலும் அது பட்ட உடனே சுகமாகிவிடுவார்கள். இது கதையில், படத்தில்தான் நடக்கும். இயேசுவின் சிலுவையைப் பார்த்ததால் யாருக்கும் நித்திய ஜீவன் கிடைக்கவில்லை. அவர் உயிரோடு எழும்பினார், ஆகவே அவர் கடவுள் என்று அங்கீகரிக்கிறவர்களுக்குத்தான் நித்திய ஜீவன்.
சாட்சிகள்
“நீங்கள் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என்று இயேசு சொன்னார். இன்று சபைகளில் “சாட்சி சொல்லு” என்று சொல்லி, “எனக்கு இது கிடைத்தது, அது கிடைத்தது; மற்றவன் செத்தான், நான் சாகவில்லை” என்று பேசுகிறார்கள். இது கவர்ச்சி இயக்கமும் [charismatic movement] பெந்தெகொஸ்தே இயக்கமும் [Pentecostal movement] கொண்டுவந்தது. அப்படிப்பட்ட சாட்சி அர்த்தமற்றது. சாட்சிகளாக இருப்பது என்பது, “இயேசு கடவுள் என்பதை நாங்கள் பார்த்தோம்; அதை நாங்கள் பறைசாற்றுவோம்” என்பதுதான்.
யாரும் “இயேசு வேண்டாம்” என்று சொல்வதில்லை
இயேசு யாருக்கும் கேடு செய்யவில்லை, யாருக்கும் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆகவே கிறிஸ்தவர்களிடமோ கிறிஸ்தவர் அல்லாதவர்களிடமோ “இயேசுவை உங்களுக்குப் பிடிக்குமா?” என்று கேட்டால், “பிடிக்கத்தான் செய்யும்” என்பார்கள். “இயேசு எனக்கு வேண்டாம்” என்று பொதுவாக யாரும் சொல்வதில்லை. அவர் வரலாற்றில் இடம்பெற்றவர். அதற்குப் போதுமான வரலாறு நம்மிடம் இருக்கிறது. அவர் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என்று சொல்ல வாய்ப்பே இல்லை. அப்படியானால் “இயேசுவை நம்புகிறீர்களா?” என்று கேட்பதற்கு என்ன இருக்கிறது? அவருடைய உயிர்த்தெழுதலும் வரலாற்றில் இடம்பெறுகிறது. உயிர்த்தெழுதல் வரலாற்றில் இடம்பெறுகிறது என்றால், அவரைக் கடவுள் என்று அங்கீகரித்தாக வேண்டும்.
ஆகவே பிரச்சனை “இயேசு எனக்கு வேண்டுமா, வேண்டாமா” என்பது அல்ல. பலருக்குப் பிடிக்காதது அவருடைய போதனை. இயேசுவை நிராகரிப்பது அவருடைய போதனைகளை நிராகரிப்பதில்தான் காண்பிக்கப்படுகிறது. இயேசுவை விசுவாசித்தல் என்பது அவருடைய போதனையை அங்கீகரித்தல், ஏற்றுக்கொள்ளுதல், அதற்கு முக்கியத்துவம் கொடுத்தல், அதன்படி நடத்தல். அப்படிப்பட்டவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. இயேசுவின் போதனைகளை நிராகரிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவன் இல்லை.
நிறைவாக
உயிர்த்தெழுதல் இயேசு கடவுள் என்பதற்கான அசைக்க முடியாத சான்று. அவருடைய மரணம் அவரை மனிதனாகக் காண்பிக்கிறது; உயிர்த்தெழுதல் அவரைக் கடவுளாகக் காண்பிக்கிறது. “உயர்த்தப்படுதல்” என்பது உயிர்த்தெழுதலில் அவர் மகிமைப்படுத்தப்பட்டதைக் குறிக்கிறது. அவரைக் கடவுள் என்று அங்கீகரித்து அவருடைய போதனைகளின்படி நடக்கிறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு.