எல்லாருக்குமான போதனையும் அன்றைய சூழலுக்கான வார்த்தையும்
போதனை எல்லாருக்கும்; சூழல் எல்லாருக்கும் அல்ல
இயேசுவின் போதனை உலகளாவிய போதனை. இறையாட்சியைப் பற்றி அவர் பேசும்போது, அது எல்லாருக்கும் உரியது. நாம் எப்படி வாழ வேண்டும், எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதுதான் போதனை.
ஆனால் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் போதனை அல்ல. சில வார்த்தைகளை ஒரு குறிப்பிட்ட சூழலில், ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினரிடம், அந்தச் சூழலுக்காகவே பேசினார். ஆகவே, எது சீஷர்களுக்கு உரியது, எது நமக்கு உரியது என்று நாம் பிரித்துப் பார்க்கத்தான் வேண்டும். வாசிக்கும்போதே அது நமக்குத் தெரியும்.
“எதையும் எடுத்துக்கொண்டு போகாதீர்கள்”
இயேசு பன்னிருவரை அனுப்பினார்; பின்னர் எழுபத்திரண்டு பேரை அனுப்பினார் (லூக்கா 9:1–6; 10:1–12). அனுப்பும்போது, “பையை எடுத்துக்கொண்டு போகாதீர்கள்; இதை எடுத்துக்கொண்டு போகாதீர்கள், அதை எடுத்துக்கொண்டு போகாதீர்கள்” என்கிறார். “போகிற இடத்தில் யார் தங்கச் சொல்லுகிறார்களோ, அங்கே தங்குங்கள். அவர்கள் உங்களுக்குச் சாப்பாடு கொடுப்பார்கள்; உங்களைப் பார்த்துக்கொள்வார்கள்” (லூக்கா 10:5–7). இறையாட்சியின் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளாதவர்களை விட்டு, “உங்கள் கால்களில் ஒட்டியிருக்கும் தூசியை உதறிவிட்டுப் போங்கள்” என்கிறார் (லூக்கா 9:5). இன்று யாராவது வெளியூருக்குப் புறப்படும்போது, “எதையுமே எடுத்துக்கொள்ளாமல் போ” என்று நாம் சொல்ல முடியுமா? முடியாது. அது அவர்களுக்கே உரியதாக அவர் பேசியது.
அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் ஒரு போதனை இருக்கிறது; அது நமக்கும் புரிகிறது. இறையாட்சிக்காக வேலை செய்கிறவர்களுடைய தேவைகள் சந்திக்கப்பட வேண்டும். அவர்கள் இறையாட்சியை நிலைநாட்டும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று மக்கள் கண்டு, அவர்களுக்குக் கொடுக்கிறார்கள். அவர் கற்றுக்கொடுத்த அந்த நெறியை, சீஷர்கள் தங்கள் வாழ்க்கையில் நேரடியாக அனுபவிக்கவும் வாய்ப்பளிக்கிறார். ஆனால் இதை எடுத்துக்கொண்டு, “நான் ஊழியத்துக்கு வந்துவிட்டேன்; எல்லாரையும்விட அதிகமான, ஆடம்பரமான வாழ்க்கை எனக்குக் கிடைக்க நீ கொடுக்க வேண்டும்” என்று சொல்லுவது அநியாயம். இறையாட்சிக்காக வேலை செய்கிறவர்களுக்கும் இறையாட்சியில் இருக்கிறவர்களுக்கும் ஒரே விதமான நிலை, ஒரே விதமான சமநிலை.
இன்னும் சில வார்த்தைகளும் அப்படிப்பட்டவை. “என் நிமித்தம் நீங்கள் பாடுபடுவீர்கள்; கொல்லப்படுவீர்கள்” என்று அவர் தம்முடைய சீஷர்களிடம் சொன்னார் (மத்தேயு 24:9). அவர்களுடைய வாழ்நாளில் என்ன நடக்கும் என்பதை, அவர்களுக்குச் சம்பந்தமானதை, அவர் மறைக்காமல் சொல்லிவிட்டார். “நீங்கள் கொல்லப்பட்டாலும் என்னோடு இணைந்திருப்பீர்கள்; அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்” என்பதுதான் அவருடைய ஆறுதல்.
பதினொருவரிடம் பேசிய வார்த்தைகள்
யோவான் 13-ஆம் அதிகாரத்தில் பன்னிருவர் இருக்கிறார்கள். 14 முதல் 17-ஆம் அதிகாரம் வரை இயேசு பேசுவது பதினொருவரிடம். அவை மிக உன்னதமான வார்த்தைகள். ஆனால் அவற்றின் சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும். இயேசுவோடு நேரடியாக இருந்தவர்கள் அவர்கள். இப்போது ஒரு காலம் வரப்போகிறது: அவரைக் கொல்லப்போகிறார்கள்; இனிமேல் அவர் மனிதராக அவர்களோடு இருக்கப்போவதில்லை. அந்த நேரத்தில் அவர் சொல்லுகிறார்:
நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன். (யோவான் 14:18)
“உங்களைத் திக்கற்றவர்களாக விடேன்” என்பது உலகம் முழுவதிலும் எல்லாருக்கும் கொடுக்கப்பட்ட ஒன்று அல்ல. சில நேரங்களில், சீஷர்களுக்குக் கொடுக்கப்பட்டதை எல்லாருக்கும் உரியதாக நாம் பேசுகிறோம். யாரோ ஒருவர் இத்தனை காலம் கூடவே இருந்தார்; இப்போது போகப்போகிறார்; இவர்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள். அப்போது அவர் சொல்லுகிறார்: “கவலைப்படாதீர்கள். நான் உங்களை விட்டுவிட்டுப் போகவில்லை. மனிதனாக உங்களோடு இருக்க மாட்டேன்; ஆனால் கடவுளாக எப்போதும் இருக்கிறேன்.”
அவர்களுக்கு இரண்டு விதமான உண்மைகள் இருந்தன. ஒன்று, இயேசுவோடு நேரடியாக இருந்த உண்மை. இன்னொன்று, இயேசு கொல்லப்பட்டு, உயிர்த்தெழுந்து, பரமேறிய பின் இருக்கும் உண்மை. அவர்களுக்கு இரண்டு வாழ்க்கை. மூன்றரை வருஷம் கூடவே இருந்தவர் திடீரென்று இல்லாமல் போகிறார்; அவர் உயிரோடுதான் இருக்கிறார், ஆனால் அவர்களோடு இல்லை. அந்தப் பிரிவின் தாக்கம் அவர்கள்மேல் இருக்கத்தான் செய்தது. எங்களோடு இருந்தவர் இல்லையே என்ற தேடல் அவர்களுக்கு அதிகமாக இருந்தது; அதனால்தான் அவருடைய வருகையின் நாளைக் காண அவர்கள் வாஞ்சித்தார்கள். அதன் நிமித்தமாகவே சில வார்த்தைகளை அவர் அவர்களுக்குத் தருகிறார்.
அவர் அழைத்தார் என்பதற்காகத் தங்கள் குடும்பங்களை விட்டு வந்தவர்கள் அவர்கள். தங்கள் வேலையையும், அதனால் கிடைக்கும் ஆதாயத்தையும் ஊதியத்தையும் விட்டு வந்தவர்கள். அவருக்காகப் பாடு அனுபவிக்கவும் துணிந்தவர்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட எல்லாவற்றையும் நமக்கு என்று உலகளாவிய அளவில் எடுத்துக்கொள்ள முடியாது. அவற்றின் போதனை மட்டுமே நமக்கு உரியது.
“என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது”
நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. (யோவான் 15:5)
இந்த வசனம் நம் திறனைப் பற்றிப் பேசவில்லை. “என்னால் எதையும் செய்ய முடியாது” என்பதைப் பற்றிய பேச்சே அல்ல இது. இது பேசுவது இதைத்தான்: “கடவுள் எங்களை விட்டு எடுபட்டுப் போய்விட்டாரோ?” என்ற உணர்வு. எலியாவுக்கு அப்படி ஒரு உணர்வு வந்தது. திடீரென்று யாருமே தன்னோடு இல்லை என்று நினைத்து, போய்ப் படுத்துக்கொண்டு, “போதும்; என் ஜீவனை எடுத்துக்கொள்ளும்” என்றார் (1 இராஜாக்கள் 19:4). கடவுளோடு நேரடியாக இருந்தவர்களுக்கு இது சகஜமானது. கடவுளோடு உறவு இருக்கிறது என்று நினைக்கும்போது ஒரு பலம் இருக்கும். கடவுள் நம்மை விட்டுப் போய்விட்டாரோ என்று தோன்றும்போது ஒரு தொய்வு வரும்.
இயேசு அவர்களுக்குச் சொல்லுகிறார்: “அப்படித் தொய்ந்துபோக வேண்டிய அவசியமே இல்லை. பிதாவும் குமாரனும் பரிசுத்த ஆவியானவரும் உங்களில்தான் இருக்கிறோம்.” இதுவரை அவரோடு மட்டும்தான் அவர்களுக்கு உறவு இருந்ததுபோலத் தோன்றியது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள்ளே இருக்கிறார்; அதுகூட அவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறது. இயேசுவோடு உறவு இருந்தால், பிதாவோடும் உறவு இருக்கிறது. ஆகவே திரியேக கடவுளுடைய உறவு அவர்களுக்கு எப்போதும் இருக்கிறது; அந்தத் தைரியம் அவர்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும்.
அவர் அவர்களிடம் சொல்ல வந்தது இதுதான்: “இனி நான் மனிதனாக உங்களோடு இருக்கிறேனோ இல்லையோ, என் வார்த்தைகளை நீங்கள் முக்கியப்படுத்த வேண்டும்; மனதில் வைத்திருக்க வேண்டும்; அதன்படி நடக்க வேண்டும்” (யோவான் 14:15–17, 21, 23).
நமக்கு இருக்கும் உண்மை
இந்தச் சூழல் நமக்கு ஒருநாளும் வந்ததில்லை. இயேசுவை மனிதனாக, அவரோடு இருந்த அனுபவம் நமக்கு இருந்ததே இல்லை. அவர் மனிதனாக இருந்து, கொல்லப்பட்டு, எடுபட்டுப்போன அனுபவமும் நமக்கு இல்லை. அதனால் அந்தத் தேடலும் நமக்கு இல்லை.
நமக்கு இருப்பது ஒரே உண்மை. இயேசுவைக் கடவுள் என்று அங்கீகரித்து, அவருடைய போதனையின்படி நடக்கத் தீர்மானித்த அந்த நேரத்திலேயே, நான் பிதாவோடும் குமாரனோடும் பரிசுத்த ஆவியானவரோடும் இணைக்கப்பட்டேன்; நித்திய வாழ்வு எனக்குக் கிடைத்துவிட்டது. அவர் என்னில் இருக்கிறார்; நான் அவரில் இருக்கிறேன்; இறையாட்சியில் நான் பிரவேசித்திருக்கிறேன். அது என் வாழ்நாள் முடியும்வரை மாறுவதில்லை. நம்முடைய உறவு எப்படித் தொடங்கியதோ, அதே நிலையில்தான் அது இருக்கிறது.
இதனால், “கடவுளோடு நான் உறவில் இருக்கிறேன்; கடவுள் என்னோடு இருக்கிறார்; நான் அவரில் இருக்கிறேன்” என்று இன்று நாம் சொல்லுவது பொய்யா? இல்லை. அவரை உண்மையாகப் பின்பற்றி, அவருடைய வார்த்தைகளின்படி நடப்போமானால், அது உண்மை. “நீங்கள் என் வார்த்தைகளின்படி நடந்தால் நான் உங்களோடு இருக்கிறேன்” என்பது போதனை; அது எல்லாருக்கும் பொருந்தும். “சீஷர்கள் அவருடைய வார்த்தைகளின்படி நடந்தால் மட்டும்தான் அவரோடு இணைந்திருப்பார்களா? நாம் நடந்தால் இணைந்திருக்க மாட்டோமா?” என்ற கேள்விக்கு அங்கே இடமில்லை. தனிப்பட்ட, குறிப்பிட்ட வகையில் எடுத்துக்கொள்ள வேண்டியது அந்தச் சூழல் மட்டுமே.
வாக்குத்தத்தங்களாக மாற்றப்படும் வார்த்தைகள்
இன்று நடப்பது இதுதான்: அந்த நேரத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதை, மக்கள் தங்களுக்கான வாக்குத்தத்தமாக எடுத்துக்கொள்கிறார்கள். “திக்கற்றவர்களாக விடேன்” என்பதைத் தங்களுக்குச் சொல்லப்பட்டதாக எடுத்துக்கொள்கிறார்கள். “என்னையல்லாமல் ஒன்றும் செய்யக்கூடாது” என்பதை, “என்னால் எதையும் செய்ய முடியாது” என்ற சாக்காக மாற்றிவிடுகிறார்கள்.
இயேசு வாழ்ந்த காலத்தில் செய்தவற்றுக்கும் இதே கேள்வி பொருந்தும். கடவுளுக்கு உங்கள்மேல் அக்கறை இருக்கிறது என்று அவர் கற்றுக்கொடுத்தார்; அதைச் செய்தும் காண்பித்தார். அது அந்தக் காலத்துக்கு மட்டும் உரியதா, எல்லாக் காலத்துக்கும் உரியதா? எல்லாக் காலத்துக்கும் உரியதாக இருந்திருந்தால், அது எல்லாருக்கும் நடக்க வேண்டும். ஆனால் எல்லாருக்கும் நடப்பதில்லை. சிலருக்குப் புற்றுநோயிலிருந்து விடுதலை [remission] கிடைக்கிறது; சிலருக்கு ஒன்றுமே கிடைப்பதில்லை; அவர்கள் இறந்துபோகிறார்கள். இவற்றுக்குள் இயேசுவைக் கொண்டுவந்து திணிப்பது சரியானதல்ல. அதைக் கடவுளுடைய அன்புக்கோ அக்கறைக்கோ சான்றாகப் பேச முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் அவர் செய்தவை, அவரைக் கடவுள் என்று காண்பித்தன. அவை உலகளாவியவை அல்ல.
ஆகவே, நற்செய்தி நூல்களை வாசிக்கும்போது ஒவ்வொரு வார்த்தையிலும் இந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும்: இது நாம் எப்படி வாழ வேண்டும் என்ற போதனையா, அல்லது அன்று அங்கே இருந்தவர்களுடைய சூழலுக்காகப் பேசப்பட்ட வார்த்தையா? போதனையை நாம் பின்பற்றவேண்டும். சூழலுக்கான வார்த்தையில் உள்ள போதனையைப் புரிந்துகொள்ளவேண்டும்; அந்தச் சூழலை நம்முடையதாக்கிக்கொள்ளக் கூடாது.