வசனங்களை ஜோடித்தல்
ஜோடித்தல் என்றால் என்ன?
“ஆதியிலே வார்த்தை இருந்தது; அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது” (யோவான் 1:1). இதை வாசிக்கும்போது நமக்கு எழ வேண்டிய கேள்வி இதுதான்: எந்த வார்த்தையைப் பற்றி இவர் பேசுகிறார்? இயேசுவை ஏன் “வார்த்தை” என்கிறார்? இயேசுவைப் பற்றித்தான் பேசுகிறார் என்பது தெரிகிறது. இயேசுவைக் கடவுள் என்று அங்கீகரிக்கிறவர்கள் அவருடைய பிள்ளைகளாகிறார்கள் என்பதும் தெரிகிறது. அதைப் பேசிவிட்டு நாம் கடந்துபோகலாம்.
ஆனால் சிலர் என்ன செய்கிறார்கள்? “ஆதியாகமத்தில் கடவுள் வார்த்தையைப் பேசினார்; அந்த வார்த்தையால் எல்லாம் உண்டாயிற்று; ஆகவே இதுதான் அந்த வார்த்தை” என்கிறார்கள். இன்னும் சிலர், “லோகாஸ் [Logos] என்பது ஞானம்; நீதிமொழிகளில் ஞானம், ‘அவரிடத்தில் செல்லப்பிள்ளையாக இருந்தேன்’ என்று பேசுகிறதே; அதுதான் இது” என்று நீதிமொழிகளுக்குப் போய்விடுகிறார்கள். இதுதான் ஜோடித்தல்: சம்பந்தமில்லாதவற்றை நாமாக இணைப்பது. புரியாததை வேண்டுமென்றே போட்டுக் குழப்பி, ஏதோ ஒரு புதிய கதம்பத்தை உருவாக்குவது. அதைத்தான் நாம் செய்யக் கூடாது.
ஒரு சோதனை செய்து பாருங்கள். மொழி மட்டும் தெரிந்த, வேறு எந்தக் கருத்தும் தெரியாத ஒருவரிடம் இந்தப் பகுதியை மட்டும் கொடுங்கள். வாசித்துவிட்டு அவர் என்ன சொல்லுவார்? “ஏதோ ஒரு வார்த்தை கடவுளாக இருந்தது என்று சொல்லுகிறார்; அந்த வார்த்தை என்ன என்பதை விளக்கவில்லை.” அவ்வளவுதான். அவ்வளவுதான் நமக்கும் புரிய வேண்டும். லோகாஸ் என்ற கருத்து நமக்குப் புரியவில்லை என்றால், அவர் செய்யும் ஒப்புமை [comparison] மட்டும்தான் நமக்குப் புரியாமல் போகும்; அதற்குப் பின் வருபவை எல்லாம் புரியத் தொடங்கிவிடும்.
புரியவில்லை என்றால் புரியவில்லை என்று சொல்ல வேண்டும். “வார்த்தை என்கிறார்; இயேசுவை ஏன் வார்த்தை என்று சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்குப் புரிந்திருக்கிறது; எனக்குத் தெரியவில்லை” என்று சொல்லுவது நியாயமானது. அதைப் பொதுவெளியிலும் சொல்லலாம். அதன்பின் அவர் சொல்லுவது நமக்குப் புரிந்தால் போதும். அதை ஜோடிக்கக் கூடாது.
“இயேசுவைப் பற்றித்தானே கடைசியில் பேசப்போகிறார்கள்? எங்கிருந்து எடுத்தால் என்ன?” என்று சிலர் கேட்கலாம். உண்மையில் இயேசுவை முக்கியத்துவப்படுத்துகிறவர்கள், இயேசுவின் போதனையிலிருந்தே பேசுவார்கள். இயேசு என்ன கற்றுக்கொடுத்தார், என்ன செய்தார் என்பதை நற்செய்தி நூல்களிலிருந்தே பேசுவார்கள். வேறொரு இடத்திலிருந்து பேச வேண்டிய அவசியம் என்ன? நான் எதையோ சொல்ல வருகிறேன்; அதை ஜோடிப்பதற்கோ, நியாயப்படுத்துவதற்கோ, யாருக்கும் தெரியாத ஒன்றைக் காண்பிப்பதற்கோதான் அப்படிச் செய்கிறேன். எழுதியவர் மனதில் இல்லாத ஒன்றை என் கருத்தாக எடுத்துக்கொண்டால், அது எழுதியவருக்கு நான் செய்யும் அவமரியாதை. அவர் யாருக்கு எழுதினாரோ அவர்கள் புரிந்துகொள்ளாத ஒன்றை நான் புரிந்துகொண்டால், உண்மையை அல்ல, பொய்யான ஒன்றையே நான் எடுத்துக்கொள்கிறேன்.
ஜோடிக்கப்பட்ட கதைகள்
“வருகிறவனாகிய எலியா இவனே” என்று யோவான் ஸ்நானனைக் குறித்து இயேசு சொல்லுகிறார் (மத்தேயு 11:14). தமிழில் வாசிக்கும்போது, இன்னொரு எலியா திரும்பவும் வர வேண்டுமோ என்று தோன்றலாம். வெளிப்படுத்தின விசேஷத்தை ஒரு கதையாக ஜோடித்துப் பேசுகிறவர்கள் இதை எடுத்துக்கொள்கிறார்கள்: “எலியா வர வேண்டும் என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்; ஆகவே இரண்டு சாட்சிகள் வருவார்கள் (வெளிப்படுத்தின விசேஷம் 11:3). அதில் ஒருவர் எலியா; இன்னொருவர் ஏனோக்கா, மோசேயா, தெரியவில்லை.” இப்படி ஏதாவது ஒரு கதையைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் இயேசு அப்படிச் சொல்லவில்லை. மல்கியாவின் மூலமாகக் கடவுள் வாக்களித்த எலியாவைப் பற்றியே அவர் பேசுகிறார்:
இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். (மல்கியா 4:5)
எல்லாம் வீழ்ந்துபோன ஒரு நிலையில் வைராக்கியத்தோடு எழுந்து நின்ற தீர்க்கதரிசி எலியா. அப்படிப்பட்ட ஒரு தீர்க்கதரிசியை அனுப்புவேன் என்று கடவுள் சொல்லியிருந்தார். அந்தத் தீர்க்கதரிசி இவன்தான்; நீங்களோ இவனை முக்கியப்படுத்தவில்லை என்பதே இயேசு சொல்லுவது (மத்தேயு 11:7–15).
இயேசுவின் காலத்து யூதர்கள் மனதில் இருந்த மேசியாவும் ஜோடிக்கப்பட்ட ஒரு மேசியாதான். ரபீக்கள் கற்றுக்கொடுத்தது இதுதான்: ஒருவர் வருவார்; பெரும் வல்லமையோடு இஸ்ரவேலுக்கு விடுதலையைக் கொண்டுவருவார். அந்த மேசியாவைப் பற்றித் தீர்க்கதரிசிகள் சொல்லியிருக்கிறார்கள், ஆகமங்கள் சொல்லியிருக்கின்றன என்று அவர்கள் நம்பினார்கள். ஆகவே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம் என்று பிலிப்பு சொல்லும்போது (யோவான் 1:45), “அது பிரமாணத்தில் எங்கே இருக்கிறது? தீர்க்கதரிசனங்களில் எங்கே இருக்கிறது?” என்ற கேள்வி அங்கே இல்லை. அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட மேசியாவையே அவர் பேசுகிறார்.
கானாவின் திருமணமும் இப்படித்தான் ஜோடிக்கப்படுகிறது. இயேசு எந்த அற்புதத்தையும் செய்ய முடியும், தண்ணீரைத் திராட்சரசமாக மாற்ற முடியும் என்று இந்தப் பகுதியிலிருந்து பல கதைகளை ஜோடித்துப் பேசிக்கொண்டிருப்போம். “இயேசு மாறாதவர்; அன்றைக்குச் செய்தார், இன்றைக்கும் செய்தே ஆக வேண்டும்” என்பார்கள் (எபிரெயர் 13:8). ஒருமுறை நடந்தது மறுபடியும் நடக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்தக் கதைக்கு அங்கே இடமில்லை. கடவுள் ஒருமுறை மனிதராக வந்தார்; பலமுறை வர வேண்டிய அவசியம் இல்லை. இயேசு ஒருமுறை சிலுவையில் அறையப்பட்டார்; பலமுறை அறையப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒருமுறை உயிரோடு எழுந்தார்; பலமுறை எழ வேண்டிய அவசியம் இல்லை. “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் தானே; அன்றைக்குச் செய்தாரே, இன்றைக்கும் செய்ய வேண்டுமே” என்று சொல்லுவதெல்லாம் பொய்யானவை; அர்த்தமற்றவை. யோவானைப் பொறுத்தவரை இந்த நிகழ்வுகள் எல்லாம் இயேசுவைக் கடவுள் என்று காண்பிப்பதற்காகவே எழுதப்பட்டவை.
உருவகக் கதைகளாக மாற்றப்படும் வரலாறு
ஒருமுறை ஒரு பிரசங்கம் இப்படிப் போனது: யாக்கோபு தன் தகப்பன் ஈசாக்கிடம் ஆசீர்வாதம் வாங்கச் சென்றபோது ஒரு மிருகம் அடிக்கப்படுகிறது; அதன் தோல் யாக்கோபின் மேல் போடப்படுகிறது (ஆதியாகமம் 27:9, 16). அந்தத் தோல் இயேசுவின் பலியைக் குறிக்கிறது; இயேசுவின் நீதி நம்மேல் போடப்படுவதுபோல அந்தத் தோல் யாக்கோபின் மேல் போடப்படுகிறது. ஈசாக்கு பிதாவைக் குறிக்கிறார்; ஏசாவுக்கு வர வேண்டிய ஆசீர்வாதம் யாக்கோபுக்கு வருகிறது. இடையிடையே “பரிசுத்த ஆவியானவர் பேசுகிறார்; உணருகிறீர்களா?” என்ற கேள்வியும். “தவறாக இருந்தால் என்ன, சரியாக இருந்தால் என்ன? கடைசியில் இயேசுவின் நீதி நமக்குக் கிடைக்கிறது என்றுதானே சொல்லுகிறார்கள்” என்று சிலர் கேட்கிறார்கள்.
இயேசுவின் போதனை சரியாகத் தெரிந்திருந்தால், ஒரு மனிதனை இயேசுவோடு நாம் ஒப்பிடவே மாட்டோம். கடவுளுடைய போதனை இயேசுவிடமிருந்துதான் வர வேண்டும். ஈசாக்கையும் யாக்கோபையும் ஏசாவையும் எடுத்துக்கொண்டு அங்கே பிதாவையும் குமாரனையும் காண்பிப்பது, எழுதியவருடைய முறை [methodology] அல்ல. மோசே அதை எழுதியபோது அவர் மனதில் அது இல்லை; கேட்டவர்கள் மனதிலும் அது இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அது தங்கள் மூதாதையரின் வரலாறு. அந்த எண்ணத்தை நாம் அங்கே புகுத்தினால், வரலாற்றையே மாற்றுகிறோம். எழுதியவர் சொல்லாத ஒன்றுக்கு நாமாகவே ஒரு விளக்கத்தைக் கொடுப்பது சரி அல்ல.
பச்சைக் கண்ணாடி
பல நேரங்களில், ஒரு பகுதியைத் தவறாகப் புரிந்துகொண்டதால் தவறான போதனை வருகிறது என்று சொல்லுவதைவிட, இப்படிச் சொல்லுவதுதான் சரியாக இருக்கும் என்பது என் கருத்து: ஒரு கருத்தை ஏற்கனவே வைத்திருக்கிறார்கள்; அதை நியாயப்படுத்துவதற்காகப் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள ஒரு பகுதியைப் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக, யெகோவாவின் சாட்சிகள் [Jehovah’s Witnesses] ஒரு பகுதியை வேறு விதமாகப் பேசுவார்கள். ஏன்? அவர்களுடைய ஸ்தாபகர் ஒரு கருத்தை வைத்திருந்தார். அதை வலியுறுத்த, நியாயப்படுத்த, வேதத்திலிருந்து சில பகுதிகளை எடுத்துக்கொள்கிறார்கள். புரியவில்லை என்பதால் அல்ல; புரிந்துகொள்ள மனமில்லாதவர்கள்தான் புதிய உபதேசங்களை உருவாக்குகிறார்கள்.
இதுதான் துருபதேசம். அப்படிப் பார்த்தால், எல்லாச் சபைகளிலும் எல்லாரும் செய்வது துருபதேசம்தான். நம் மனதில் ஏற்கனவே ஒரு கருத்தை வைத்துக்கொண்டு ஒரு பகுதியைப் பார்த்தால், நாம் சொல்ல நினைப்பதற்கு ஏதுவாக ஏதோ ஒன்று அங்கே அமையத்தான் செய்யும்.
ஏற்கனவே ஒரு கண்ணாடியை அணிந்துவிட்டால், அந்தக் கண்ணாடியின் வழியாகத்தான் எல்லாவற்றையும் பார்ப்போம். பச்சைக் கண்ணாடி அணிந்திருந்தால் எல்லாமே பச்சையாகத்தான் தெரியும்; சிவப்புக் கண்ணாடி அணிந்திருந்தால் சிவப்பாகத்தான் தெரியும். அதனால்தான் முன்முடிவுகள் இல்லாத வாசிப்பு [objective reading] மிக முக்கியமானது. நம் மனதில் ஏற்கனவே இருக்கும் கருத்துகளை [preconceived notions] வெளியே வைக்க வேண்டும். இறையியலாளர்கள் [theologians] சொன்னதையெல்லாம் வெளியே வைக்க வேண்டும். அந்தப் பகுதியை [text] மட்டுமே பார்க்க வேண்டும்.
எது துருபதேசம் என்ற பட்டியலும் அதைத் தொகுப்பவரைப் பொறுத்தே அமைகிறது. அசெம்பிளி ஆஃப் காட் [Assemblies of God] ஒரு பாடத்திட்டத்தை அமைத்தால், அந்தப் பட்டியலில் சி.எஸ்.ஐ. [CSI] இருக்கும், பிரதர் மிஷன் இருக்கும்; கரிஸ்மேட்டிக் இயக்கம் [charismatic movement] இருக்காது. ஜான் மெக்கார்தர் [John MacArthur] போன்றவர்களுக்குச் சீர்திருத்த இறையியல் [Reformed theology] சரியான இறையியல்; கரிஸ்மேட்டிக் இயக்கம் தவறான இறையியல். ஒவ்வொருவருடைய பார்வையைப் பொறுத்தே, எவை துருபதேசங்கள் என்று தீர்மானிக்கப்படுகின்றன.
பரிசுத்த வேதாகமம் தவறாகப் போதிக்கப்படுகிறது என்றால், அதற்குக் காரணம் அதை எழுதியவர்கள் அல்ல. இயேசுவைப் பற்றிய தகவல்கள் புரியாதவை அல்ல; புரியும்படியாகவே எழுதப்பட்டிருக்கின்றன. இயேசு என்ன போதித்தார் என்பது நமக்குப் புரிகிறது. புரியாதவற்றைப் போட்டுக் குழப்பக் கூடாது. இதை நாம் கற்றுக்கொடுக்காவிட்டால் என்ன நடக்கும்? புரியாத ஒன்றை எடுத்துவைத்துக்கொண்டு, கண்ணை மூடி, “ஆண்டவரே, இதை எனக்குக் காண்பியும்; எனக்குத் தெளிவு கொடும்” என்று உட்கார்ந்திருப்பார்கள். அப்போது நம்முடைய படைப்பாற்றல் [creativity] உள்ளே வந்துவிடுகிறது. “இதுவாக இருக்குமோ? அதுவாக இருக்குமோ?” என்று புதுப் புதுக் கருத்துகள் வருகின்றன. உடனே, “கடவுள் எனக்குக் கொடுத்தார்; ஆவியானவர் என்னிடம் பேசினார்” என்கிறார்கள்.
கிரேக்க, எபிரெயச் சொல் ஆய்வுகளை ஏன் தவிர்க்கிறேன்?
என் போதனைகளில், மிக அவசியமானதாக இல்லாதபட்சத்தில், கிரேக்க, எபிரெயச் சொற்களைப் பயன்படுத்துவதை நான் மிக மிகத் தவிர்க்கிறேன். காரணம், அவை குழப்பங்களை உண்டாக்குகின்றன. அது மட்டுமல்ல, இல்லாதவற்றை இருப்பதுபோல நாம் வாசிப்பதற்கு அவை வழிவகுக்கின்றன. அதைச் செய்யாமல் இருப்பதே மிக மிக நல்லது. பல நேரங்களில் அது நமக்கு எதிர்மறையான பலனையே தரும் [counterproductive]; தேவையில்லாத ஒன்றில் கவனம் செலுத்திக்கொண்டிருப்போம்.
இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்: இயேசு பேசியது அரமேய மொழியில்; நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டது கிரேக்க மொழியில். இயேசு பேசியதை அவர்கள் அப்படியே மொழியாக்கம் செய்யவில்லை. அவர்கள் கூட்டக் குறிப்புகள் [minutes] எடுக்கவும் இல்லை; அன்றைக்கே பதிவுசெய்துகொள்ளவும் இல்லை. அவர் பேசியதன் பொருளும் அதன் சூழலும் அங்கே இருக்கின்றன; அதையே அவர்கள் சொல்லுகிறார்கள். ஆகவே ஒவ்வொரு சொல்லையும் முக்கியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
“இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்” என்று இயேசு சொன்னதை எடுத்துக்கொள்ளுங்கள் (யோவான் 2:19). இங்கே “ஆலயம்” என்பதற்கு ஒரு கிரேக்கச் சொல், அங்கே வேறொரு சொல் என்று வேறுபாடு காட்டுவார்கள். ஆனால் இயேசு பேசியது அவர்களுடைய மொழியில். தமிழ் பேசுகிறவர்களிடம் ஒருவர் “கோவில்” என்று ஒன்றைச் சொல்லி, “ஆலயம்” என்று இன்னொன்றைச் சொன்னால், அந்த வேறுபாடு கேட்பவர்களுக்குத் தெரியாதா? இயேசு வேறொரு சொல்லைப் பயன்படுத்தியிருந்தால், “நீர் வேறு எதையோ பற்றிப் பேசுகிறீர்” என்று அவர்கள் சொல்லியிருப்பார்கள். அவர்களோ, “இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே; நீர் மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவீரோ?” என்று கேட்கிறார்கள் (யோவான் 2:20). இந்த ஆலயத்தைப் பற்றித்தான் அவர் பேசுகிறார் என்று அவர்கள் புரிந்துகொண்டார்கள். ஒருவர் பேசும்போது, ஒரு சொல்லை ஒரு பொருளில்தான் பேசுவார்.
நம் கையில் நல்ல, தரமான மொழியாக்கங்கள் இருக்கின்றன. ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் இருக்கலாம்; ஆனால் மொழியாக்கம் செய்கிறவர் அதைத் தெரிந்துதான் செய்கிறார். நல்ல மொழியாக்கம் செய்கிறவர், எழுதியவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு அதற்கான சொல்லைத் தருவார். ஆகவே, “இதுவும் இருக்கலாம், அதுவும் இருக்கலாம்” என்று நாம் பேசுவதற்கு இடமில்லை.
மொழிநடைகளை [idioms] வைத்துப் பேசுவதிலும் இதே கவனம் வேண்டும். “It was raining cats and dogs” என்று ஆங்கிலத்தில் எழுதுகிறேன் என்று வைத்துக்கொள்வோம். ஆங்கிலம் தெரிந்த, ஆனால் ஆங்கில மொழிநடை தெரியாத ஒருவர், “நாயும் பூனையுமாக மழை பெய்தது” என்று மொழியாக்கம் செய்துவிடலாம். “Kick the bucket” என்பதற்கு வாளியைக் காலால் உதைத்தார் என்று பொருள் அல்ல; இறந்துவிட்டார் என்று பொருள். ஆனால் யோவான் விஷயத்தில் அப்படிப்பட்ட தவறுக்கு இடமில்லை. அவர் எபிரெய மொழியில் எழுதி, அதை வேறொருவர் புரியாமல் கிரேக்க மொழியில் மொழியாக்கம் செய்திருந்தால், அப்படிச் சொல்லலாம். யோவானோ கிரேக்க மொழியை அறிந்தவர்; கிரேக்கர்களுக்கு, கிரேக்கர்களுக்கு உரிய முறையில், கிரேக்க மொழியிலேயே எழுதுகிறார்.
சமூக ஊடகங்களில் ஒருமுறை ஒரு காணொளியைப் பார்த்தேன். “எபிரெய வேதத்தில் எதிர்காலம் [future tense] கிடையாது; எல்லாவற்றையும் கடவுள் நிகழ்காலத்தில்தான் பேசியிருக்கிறார்; தமிழில் மொழிபெயர்க்கும்போது எதிர்காலத்தில் எழுதிவிட்டார்கள்” என்றார்கள். இந்தக் கூத்தையெல்லாம் விட்டுவிடுங்கள்.
அகராதிப் பொருளும் உள்ளுறைப் பொருளும்
ஒரு சொல்லுக்கு அகராதிப் பொருள் [lexical meaning] ஒன்று உண்டு. ஆனால் அந்த அகராதிப் பொருளை மட்டும் நாம் எடுத்துக்கொள்ள முடியாது. எழுதியவர் என்ன சொல்ல வருகிறார் என்பது நமக்குத் தெரிய வேண்டும். ஒரு சொல்லுக்குள் இருக்கும் உள்ளுறைப் பொருள் [connotative meaning], அதாவது அதைக் கேட்டவர்களுடைய புரிதலில் இருந்தது என்ன என்பதுதான் முக்கியம்.
“இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டி” என்று யோவான் ஸ்நானன் சொல்லும்போது (யோவான் 1:29), அது வெறும் அகராதிப் பொருள் அல்ல. நாம் அந்த இடத்தில் இருந்திருந்தால் ஒருவேளை நமக்குப் புரிந்திருக்காது. ஆனால் அவர்கள் மனதில் ஏதோ ஒன்று இருந்தது. முதல் பஸ்காவில் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி ஒன்று; பாவ மன்னிப்புக்கு அடையாளமாகச் செலுத்தப்பட்ட ஆடு இன்னொன்று. எப்படியோ அவர்கள் இந்த இரண்டையும் இணைத்திருக்கிறார்கள். ஒன்று விடுதலை; இன்னொன்று பாவத்திலிருந்து மன்னிப்பு. இவர் நமக்குப் பயனுள்ளவர் என்ற வகையில் அவர்கள் அவரைப் பார்த்தார்கள். இப்படித்தான் யோவானுடைய பாணியில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்; வெறும் சொற்களாக அல்ல.
ஆகவே, பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கும்போது, இங்கிருந்து ஒரு வசனம், அங்கிருந்து ஒரு வசனம் என்று எடுத்து நாமாக ஒரு கதையைக் கட்டக் கூடாது. ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு அதன் மூல மொழியில் இல்லாத பொருளைத் தேடக் கூடாது. எழுதியவர் சொல்லுவதைக் கேட்கவேண்டும்; புரியாததைப் புரியவில்லை என்று ஒப்புக்கொள்ளவேண்டும்; இயேசுவின் போதனையை வைத்தே மற்றவற்றைப் பார்க்கவேண்டும்.